திங்கள், 19 ஆகஸ்ட், 2013

வீட்டுக்கு ஒரு பிள்ளையை ஆசிரியராக்கி அடுத்த தலைமுறையை வளப்படுத்த வேண்டும்--தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்

வீட்டுக்கு ஒரு பிள்ளையை ஆசிரியராக்கி அடுத்த
தலைமுறையை வளப்படுத்த வேண்டும்--தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்

ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரம கல்யாணி கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கப்
பொன் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரி முன்னாள்
மாணவரான தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கல்லூரியின்
பொன்விழா ஆண்டின் சாதனையாளர் விருதினை அமால்கமேஷன் குழுமத்தின்
தலைவரும் கல்லூரித் தலைவருமான ஏ. கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.
விருதினைப் பெற்றுக் கொண்டு தினமணி ஆசிரியர் ஆற்றிய உரை: 

என் அறிவுக்கண்களைத் திறந்து வைத்த கல்விச்சாலையின்
பொன்விழா ஆண்டில் எனக்கு சாதனையாளர்
விருது வழங்கப்பட்டிருப்பதற்கு மனமார்ந்த நன்றி. அப்படியொன்றும்
மிகப்பெரிய சாதனையை நான் நிகழ்த்தியிருப்பதாகக் கருதவில்லை.
ஏதாவது சமுதாயப் பங்களிப்பு என் மூலம் நிகழ்ந்திருக்குமேயானால்
அதற்கு என்னைப் பயிற்றுவித்த ஆசிரியர்களும் கல்விச்சாலைகளும்தான் காரணம் என்பதை உணர்ந்தவன் நான்.                                                                                    உண்மையான           சாதனை என்பது    அமால்கமேஷன்.         நிறுவனர் 
அனந்தராம கிருஷ்ணன்  நிகழ்த்திக் காட்டியிருப்பதுதான். சென்னையில் மிகப்பெரிய தொழில்     பாராட்டப்பட்டபோதும்கூட அவர் தான் பிறந்து வளர்ந்த கிராமத்தை மறக்காமல் அங்கே ஒரு கல்விச்சாலையை உருவாக்க வேண்டும் என்று நினைத்தாரே அதுதான் சாதனை. 

. எல்லோரும் அவரவர் குழந்தைகளை நல்ல கல்விச்சாலைகளில் நல்ல
ஆசிரியர்கள் மூலம் கல்வி பெறச் செய்ய வேண்டும் என்று விழைகிறார்கள்.
ஆனால், அதே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆசிரியர்களாக்க வேண்டும்
என்று விரும்பாமல் இருப்பதுதான் வேதனையாக இருக்கிறது. இந்தியாவின்
இன்றைய தேவை அர்ப்பணிப்பு உணர்வுடைய வருங்கால சந்ததியினரை நல்ல
முறையில் உருவாக்கும் நல்லாசிரியர்கள். இன்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருக்கிறது. அன்றுள்ள மாணவர்கள் போலத்தான் இன்றையமாணவர்களும் உள்ளனர். ஆனால், அன்றைய ஆசிரியர்கள் வித்தியாசமாக
இருந்தனர். அர்ப்பணிப்பு உணர்வுடன் இருந்தனர்.  ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு மாணவனுடனும் நேரிடையான தொடர்பும் கவனமும் இருந்தன. அதற்குக் காரணம் ஆசிரியர்களுக்கு இருந்த மரியாதையும் அவர்களிடம் காணப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுதான்.

 இன்று பெற்றோர் தங்கள் குழந்தைகளை நிறைய பணம் கொடுத்துப் படிக்க
வைப்பதால் ஆசிரியரையே விலைக்கு வாங்கிவிட்டதாக நினைக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நினைப்பு மாற வேண்டும்.   ஆசிரியர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்காத சமுதாயம் நல்ல சமுதாயமாக உருவாகாது. பண்டைக்காலங்களில்வீட்டுக்கு ஒரு குழந்தையை படைவீரனாக்குவது பெற்றோருக்குப் பெருமை என்று கருதினார்கள். இன்றைய காலகட்டத்தில் நாளைய சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினால்
வீட்டுக்கு ஒரு குழந்தையை அர்ப்பணிப்பு உணர்வுடைய ஆசிரியராக
உருவாக்க நாம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

Thanks : DINAMANI 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக