செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

 ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் மோசடி 

 ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் மோசடி 6 பேர் கைது 
 ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் மோசடி விவகாரத்தில் பணம் கொடுத்தவர்கள், போலி வினாத்தாள் நகல் பிரதிநிதிகளைப் பெற்றவர்கள் என அனைவரையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தன்னிடம் ரூ.ஒரு லட்சம் பெற்றுக் கொண்டு, ஆசிரியர் தகுதித்தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே தருவதாகக் கூறிய கும்பல் தருமபுரிக்கு வரவழைத்து ஏமாற்றியதாக, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள சாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார் (35), தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்ஆஸ்ரா கர்க்கிடம் சனிக்கிழமை புகார் அளித்தார். 

இதையடுத்து, டிஎஸ்பி பரமேஸ்வரா தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கணபதி, அவரது மனைவி எஸ்தர், ஒசூரைச் சேர்ந்த சந்திரசேகரன், கிருஷ்ணப்பா, பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த இளையராஜா,பாலக்கோடு ஜக்கசமுத்திரத்தைச் சேர்ந்த அசோகன் ஆகிய 6 பேர்
சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர். 

இவர்களிடம் நடத்திய விசாரணையில், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் பலருக்கும் இவ்வாறு தகவல் தெரிவித்து பணம்வசூலித்திருப்பதும், சிலரிடம் போலி வினாத்தாள்களின் நகல்களை பிரதி எடுத்து வழங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. இது மட்டுமல்லாது, போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக பலரிடம் தொலைபேசி மூலமாகவே கேள்விகளைத் தெரிவித்து குறிப்பு எடுத்துக் கொள்ளச் செய்துள்ளனர். இதற்கு முன்பணமாக ரூ.ஒரு லட்சம் பெற்றுள்ளனர். இந்தக் கும்பலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அரூர், பென்னாகரம், கோட்டப்பட்டி, பொய்யப்பட்டி,பாப்பிசெட்டிப்பட்டி, ஒசூர், கிருஷ்ணகிரி, ஓமலூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பலரையும் சந்தேகத்தின் பேரில் தருமபுரிக்கு அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சனிக்கிழமை வரை10-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருப்பதாக. டிஎஸ்பி பரமேஸ்வரா தெரிவித்தார்.

Source : dinamani

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக