சனி, 21 செப்டம்பர், 2013

பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கும் "பார்கோடிங்" முறை

  பிளஸ் 2 தேர்வுகளில், முக்கிய பாடங்களுக்கு மட்டும், "டம்மி எண்" வழங்கி விடைத்தாள் திருத்தப்பட்டு வந்த நிலையை மாற்றி, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வில், அனைத்து பாட தேர்வுகளுக்கும், "பார்கோடிங்" முறை அமல்படுத்தப்பட உள்ளது. இந்த முறையால், தேர்வுகளில், இனி முறைகேடுகளுக்கு முற்றிலும் இடம் இருக்காது என, ஆசிரியர் தெரிவிக்கின்றனர். 

தேர்வுத் துறையில், கடந்த ஒரு மாதமாக, பல்வேறு சீர்திருத்தங்கள் வந்தபடி உள்ளன. இதில், 18 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான நடவடிக்கைகள், மிகவும் முக்கியமானதாக உள்ளது. கடந்த ஆண்டு வரை, பிளஸ் 2 தேர்வில், அறிவியல், கணித பாடங்களுக்கு மட்டும், பதிவெண்களுக்கு மாற்றாக, "டம்மி எண்" வழங்கப்பட்டு, விடைத்தாள் திருத்தப்பட்டு வந்தது. "டம்மி எண்கள்" நேரடியாக, விடைத்தாள் மீது எழுதப்படும். இதனால், குறிப்பிட்ட பள்ளியின் விடைத்தாள் எங்கே செல்கிறது என்பதையும், குறிப்பிட்ட மாணவ, மாணவியரின், "டம்மி எண்" எது என்பதையும் கண்டுபிடிக்க முடியும். தற்போது, "டம்மி" எண்களையும், நேரடியாக தெரியும்படி பதிவு செய்யாமல், "பார்கோடிங்" முறையில், பதிவு செய்யப்பட உள்ளன. அத்துடன், குறிப்பிட்ட பாட தேர்வுகள் என்றில்லாமல், மொழித்தாள் தேர்வில் ஆரம்பித்து, முக்கிய பாட தேர்வுகள் வரை, அனைத்து விடைத்தாள்களுக்கும், "பார்கோடிங்" முறை, வரும் பொதுத் தேர்வில் அமலுக்கு வருகிறது. 
பிளஸ் 2 தேர்வுகளுக்கு மட்டுமில்லாமல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளிலும், இந்த முறை அமல்படுத்தப்படுகிறது. "பார்கோடிங்" முறையால், குறிப்பிட்ட விடைத்தாளை, அவ்வளவு எளிதில் அடையாளம் காண முடியாது. ஏனெனில், 100 விடைத்தாள்கள் இருக்கிறது என்றால், 100 விடைத்தாள்களையும், "ஸ்கேன்" செய்தால் தான், அதற்கான, "டம்மி" எண்கள் என்ன என்பதை கண்டுபிடிக்க முடியும். அப்படியே, "டம்மி&' எண் கண்டுபிடித்தாலும், அதற்கான உண்மையான பதிவு எண் என்ன என்பதை, கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில், விடைத்தாள்களை கலந்து, வெவ்வேறு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்புவதற்கு முன், மாணவர்களின் அசல் பதிவு எண்கள் விவரம் அடங்கிய சீட்டு, டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்கப்படும். உண்மையான பதிவு எண் விவரம், விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணிபுரிபவர்களுக்கு தெரியாது. இதனால், குறிப்பிட்ட மாணவரின் விடைத்தாளை அடையாளம் கண்டு, அதில், எவ்வித முறைகேடும் செய்ய முடியாது. 

மேலும், இந்த ஆண்டு, விடைத்தாள் திருத்தும் மையத்தில் இருந்தே, கம்ப்யூட்டர்களில், மதிப்பெண் பதியப்பட உள்ளது; இதிலும், எந்த முறைகேடும் செய்ய முடியாது. ஏனெனில், ஒவ்வொரு விடைத்தாளும், வெவ்வேறு, "ஸ்கேன்" இயந்திரங்களில், இரு முறை, "ஸ்கேன்" செய்யப்படும். மதிப்பெண்கள் வேறுபாடு இருந்தால், உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
. தேர்வுத் துறையின் இந்த அதிரடி நடவடிக்கையை, ஆசிரியர்கள், பெரிதும் வரவேற்கின்றனர். அரசு பள்ளி ஆசிரியர் சிலர் கூறுகையில், "இதற்கு முன் இருந்த நடைமுறையில், முறைகேடு நடப்பதற்கான ஓட்டைகள் இருந்தன. தற்போதைய நடவடிக்கைகள் மூலம், அந்த ஓட்டைகள், முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன. 100 சதவீதம், நேர்மையான முறையில், விடைத்தாள் மதிப்பீடு செய்வது, உறுதி செய்யப்படும்" என, தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக