செவ்வாய், 26 நவம்பர், 2013

பதவி உயர்வு கோரியதில் பதில் மனு தாமதம் : மின்வாரியத்திற்கு ரூ.18 ஆயிரம் அபராதம்: ஐகோர்ட் உத்தரவு

மின்வாரியத்தில் உதவிப் பொறியாளர்களாக பதவி உயர்வு கோரி தாக்கலான மனுக்களுக்கு, 2006 லிருந்து பதில் மனு தாக்கல் செய்யாததால், மின்வாரியத்திற்கு 18 ஆயிரம் அபராதம் விதித்து, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

தூத்துக்குடி கதிரவன் தாக்கல் செய்த மனு: மின்வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளராக, 1998 ல் பணியில் சேர்ந்தேன். இளநிலை பொறியாளராக ஆறரை ஆண்டுகள் பணி முடித்திருந்தால், துறை ரீதியான தேர்வு மூலம், உதவி பொறியாளராக பதவி உயர்வு வழங்கலாம் என, 2002 ல் மின்வாரியம் உத்தரவிட்டது. ஆனால், பி..,படித்து இளநிலை பொறியாளராக ஓராண்டு பணி நிறைவு செய்திருந்தால், உதவி பொறியாளராக பதவி உயர்வு வழங்கலாம் என 2005 ல் மின்வாரியம் மாற்றியமைத்தது. நான், பி.., (எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்), 2004 ல் தேர்ச்சி அடைந்தேன். நிர்வாகக் காரணங்களைக் கூறி, திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை, தாமதமாக சான்றிதழ் வழங்கியது. குறிப்பிட்ட காலத்திற்குள் நான், பி..,தேர்ச்சி அடைந்திருந்தாலும், பதவி உயர்வுக்கு எனது பெயர் பரிசீலிக்கப்படவில்லை.
மின்வாரிய விதிகள்படி, உதவி பொறியாளர் பணியில், துறை ரீதியான தேர்வு மற்றும் நேரடி நியமனத்தில் 1:1 என்ற விகிதாச்சாரப்படி நியமனம் மேற்கொள்ள வேண்டும். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, 91 சதவீதம் முன்னுரிமை வழங்க வேண்டும். ஆனால், பி.., பிற பாடப்பிரிவு படித்த இளநிலை பொறியாளர்கள் 39 பேருக்கு, உதவி பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என, மின்வாரிய தலைமைப் பொறியாளர் (பணியாளர்நலன்) 2006 ல் அறிவிப்பு வெளியிட்டார். இதனால், எனக்கு பிறகு 5 ஆண்டுகளுக்கு பின் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளவர்களுக்கு, தற்போதே கிடைத்துவிடும். இந்த அறிவிப்பு மின்வாரிய விதிகளுக்கு முரணானது. அதை ரத்து செய்ய வேண்டும். எனக்கு உதவிப் பொறியாளராக பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுபோல், மேலும் 8 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிபதி எஸ்.நாகமுத்து முன், மனுக்கள் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் வக்கீல் எஸ்.எஸ்.சுந்தர் ஆஜரானார். நீதிபதி: மனுக்கள் 2006 லிருந்து நிலுவையில் உள்ளன. பலமுறை விசாரணைக்கு வந்தும், மின்வாரியம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால், மனுதாரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மின்வாரியத்திற்கு, 9 மனுக்களுக்கு தலா 2000 வீதம் 18 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன். தொகையை, ஐகோர்ட்டில் செலுத்த வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக