சனி, 16 நவம்பர், 2013

பல்கலைக்கழகங்களிடையே பொது பாடத் திட்டம்: நிபுணர் குழு அமைப்பு

தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் விரைவில் ஒரே மாதிரியான பாடத் திட்டத்தை படிக்க உள்ளனர்.
இதற்கான பணியை தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
பொது பாடத் திட்டத்தை உருவாக்குவதற்காக அந்தந்த பாடங்களில் நிபுணத்துவம் பெற்ற பேராசிரியர்கள் அடங்கிய குழு இப்போது அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிபுணர்கள் குழு சில தினங்களுக்கு முன்பே அமைக்கப்பட்டுவிட்ட போதும், இதுதொடர்பாக அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் ஆலோசனை நடத்தி கருத்துக்களை அறிந்த பின்னரே அந்தக் குழு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட வேண்டும் என உயர்கல்வித் துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியது:
உயர் கல்வித் துறை அதிகாரிகளின் உத்தரவுப்படி, டிசம்பர் 6-ம் தேதி அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கூட்டத்துக்கு உயர் கல்வி மன்றம் ஏற்பாடு செய்துள்ளது. அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, குழு உறுப்பினர்கள் இறுதி செய்யப்பட்டுப் பணியைத் தொடங்குவதற்கான அனுமதியும் வழங்கப்படும்.
பெரும்பாலும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் இந்தக் குழு தனது பணியைத் தொடங்கிவிடும் என்றார். தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் பொதுப் பாடத்திட்டம் கொண்டுவருவது கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. இதன் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்கின்றனர் அவர்கள்.
அண்மையில் சென்னையில் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., தமிழ் இலக்கியம் மற்றும் கலாசாரம் என்ற பட்டம் பெற்ற மாணவர்களை, ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) தகுதியில்லாதவர்கள் என நிராகரித்தது.
இதுபோல் பிற பல்கலைக்கழகங்களும் பல்வேறு புதிய படிப்புகளை அறிமுகம் செய்கின்றன. ஆனால், அந்தப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு அரசு வேலை கிடைப்பதில்லை என்பதோடு, தனியார் வேலைவாய்ப்பைப் பெறுவதும் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. எனவே, பொதுப் பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்கின்றனர் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்.
சாத்தியமா? பொதுப் பாடத்திட்டத்துக்கு கல்வியாளர்களிடையே வரவேற்பு உள்ள போதும், அது சாத்தியமாகுமா என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி கழக தலைவர் எஸ். தமிழ்மணி கூறியது:
பொதுவாக பல்கலைக்கழகங்கள் அதன் கீழ் இணைப்பு பெற்றுள்ள தன்னாட்சி அல்லாத கல்லூரிகளுக்கு மட்டுமே பாடத் திட்டத்தை வகுத்து கொடுக்கின்றன. ஆனால், தன்னாட்சிக் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களின் கீழ் வருகின்றபோது, அந்தப் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டியதில்லை. அவர்களாகவே பாடத் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம் என்பதோடு தேர்வுகளையும் நடத்தி, மதிப்பெண் பட்டியலையும் அளித்து விடுகின்றனர். பட்டத்தை மட்டுமே பல்கலைக்கழகம் வழங்குகிறது.
இதனால், கல்லூரி மாணவர்கள் ஒரே படிப்பை வெவ்வேறு பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் நிலைதான் இருந்து வருகிறது. இதில் எளிதான பாடத் திட்டத்தை உள்ளடக்கிய கல்லூரியில் படிக்கும் சராசரி மாணவர் கூட அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதும், கடுமையான பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் சிறந்த மாணவர் சராசரி மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதும் தொடர்கதையாகி வருகிறது.
இந்த ஏற்ற இறக்கத்தை களைய பொது பாடத் திட்டம் உதவும்.
அதே நேரம், தன்னாட்சி கல்லூரி முறையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (நேக்) அனுமதி, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மானியம் என அனைத்து வசதிகளும் இவர்களுக்கு செய்து தரப்படுகின்றன.
மேலும், தன்னாட்சிக் கல்லூரிகளில் தேர்வுக் கட்டுப்பாட்டாளர், கல்விக் குழு என பல்கலைக்கழகங்களில் உள்ளது போன்ற அனைத்து அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில், பொதுப் பாடத் திட்ட முறை நடைமுறைக்கு கொண்டுவரும் நிலையில், தன்னாட்சிக் கல்லூரிகளில் உள்ள தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அலுவலகம், கல்விக் குழு ஆகியவை ரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்படும். எனவே, பொதுப் பாடத்திட்ட முறை சாத்தியமா என்ற சந்தேகமும் எழுகின்றது.
இந்த குழப்பங்களுக்குத் தீர்வு காணும் வகையில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை மட்டுமல்லாமல், கல்லூரி பேராசிரியர்கள் பிரதிநிதிகள், தன்னாட்சிக் கல்லூரி நிர்வாகிகள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து தமிழ்நாடு உயர் கல்வி மன்றம் ஆலோசனை நடத்த வேண்டும். அதன் பிறகே இதுதொடர்பான முடிவை எடுக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக