வியாழன், 14 நவம்பர், 2013

‘‘எங்கு சென்றாலும் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்ப்பேன்’’ ஜார்கண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகச் செல்லும் ஆர்.பானுமதி பேச்சு

ஜார்கண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாகச் செல்லும் நீதிபதி ஆர்.பானுமதிக்கு சென்னை ஐகோர்ட்டில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. சென்னை ஐகோர்ட்டில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதியாகப் பணியாற்றியவர் ஆர்.பானுமதி. இவர் தற்போது ஜார்கண்ட் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அவருக்கு சென்னை ஐகோர்ட்டில் பிரிவு உபசார நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அக்ரவால் மற்றும் நீதிபதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
பிரிவு உபசார விழா உரையை அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:–
முதல் நீதிபதி
மற்ற மாநில ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாகச் செல்லும் சென்னை ஐகோர்ட்டின் முதல் பெண் நீதிபதி நீங்கள்தான். ஜார்கண்ட் ஐகோர்ட்டின் முதல் பெண் நீதிபதியும் நீங்கள்தான். 32 வயதிலேயே மாவட்ட நீதிபதியான முதல் பெண்ணும் நீங்கள்தான். எனவே உங்களை சுப்ரீம் கோர்ட்டிலும் நீதிபதியாக பணியாற்றுவதை பார்க்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழ்நாட்டுக்கு பெருமை
பின்னர் ஏற்புரை நிகழ்த்திய நீதிபதி ஆர்.பானுமதி கூறியதாவது:–
எனது உயர்வுக்கு நான் வணங்கும் இயேசு கிறிஸ்துவே காரணமாக உள்ளார். நீதித்துறையின் சிவில், கிரிமினல், வரி உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் நான் பணியாற்றி இருக்கிறேன்.
நான் எங்கிருந்தாலும் தமிழ் நாட்டுக்கும் தமிழ்மக்களுக்கும் சென்னை ஐகோர்ட்டுக்கும் பெருமையையும் புகழையும் சேர்ப்பேன். சென்னை ஐகோர்ட்டைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் கடின உழைப்போடு பணியாற்றுவார்கள் என்பதை நிலை நிறுத்துவேன் என்று உங்கள் அனைவருக்கும் உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தன்னுடன் பணியாற்றிய நீதிபதிகள், அலுவலர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் நேர்மையாக பணியாற்ற உதவியாக இருந்த குடும்பத்தினருக்கு நீதிபதி ஆர்.பானுமதி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு பார் கவுன்சில் மற்றும் பல்வேறு வக்கீல் சங்க நிர்வாகிகள் வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக