செவ்வாய், 19 நவம்பர், 2013

சிறப்பு நிலை ஊதியம் கோரிய ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் மனுக்கள் தள்ளுபடி

துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதியத்தை தங்களுக்கும் வழங்கக் கோரி, ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், 128 பேர் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர்நீதிமன்றத்தில், இடைநிலை ஆசிரியர்கள் தாக்கல் செய்த மனுக்களில் கூறியிருப்பதாவது:நாங்கள், அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியர்களாக பணியாற்றினோம். 10 ஆண்டுகள், 20 ஆண்டுகள், பணி முடித்த பின், துவக்கப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை ஊதியம் பெற, 1993, மார்ச் மாதம், நிதித்துறை பிறப்பித்த அரசாணையின்படி, எங்களுக்கு உரிமை உள்ளது. இதுதொடர்பாக, மாநில நிர்வாக தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை, ஐகோர்ட் 'டிவிஷன் பெஞ்ச்', 2009ல் உறுதி செய்து, உத்தரவு பிறப்பித்து உள்ளது. பின் இந்த உத்தரவை, சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்துள்ளது. எனவே, 1988ல் இருந்து, எங்களுக்கு தேர்வு நிலை அந்தஸ்து மற்றும் சிறப்பு நிலை ஊதியம் வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டு உள்ளது. அரசு தரப்பில், அட்வகேட்ஜெனரல், சோமயாஜி, சிறப்பு அரசு பிளீடர்கள், டி.கிருஷ்ணகுமார், வி.சுப்பையா ஆஜராகினர். அட்வகேட்ஜெனரல் சோமயாஜி, ''மனுதாரர்கள் இவ்வாறு கோருவதற்கு, எந்த அடிப்படையும் இல்லை. அவர்கள், துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர்களாக பணியாற்றவில்லை. மேலும், அவர்கள் நீண்ட காலத்துக்கு முன்பே, ஓய்வு பெற்றுவிட்டனர்,'' என்றார்.
மனுக்களை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: பள்ளிக்கல்வித் துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், 'அரசு உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், துவக்கப் பள்ளிகளின் தலைமை ஆசிரியருக்கு வழங்கப்படும் தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலையை கோர முடியாது; ஏனென்றால், அவர்கள் வெவ்வேறு பணியில் இருப்பவர்கள்' என, உத்தரவிட்டு உள்ளது. 1998ல், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. துவக்கப் பள்ளிகளில் பணியாற்றும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், தமிழ்நாடு தொடக்கக் கல்வி பணி விதிகளின் கீழ் வருவர். உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், வேறு பணி விதிகளின் வருகின்றனர். அவர்களின் பணி நிபந்தனைகளும் வெவ்வேறானவை. அதாவது, துவக்கப் பள்ளிகள், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் எல்லாம், துவக்கக் கல்வி இயக்குனரின் கீழ் செயல்படுகின்றனர். உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், அதில் பணியாற்றும் ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி இயக்குனரின் கீழ் செயல்படுகின்றனர். அட்வகேட்ஜெனரலின் வாதத்தை, ஏற்றுக் கொள்கிறேன். பள்ளிக்கல்வி இயக்குனர் தொடுத்த வழக்கில், சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு, தெளிவாக இருப்பதால், மனுதாரர்கள் மேற்கோள் காட்டியுள்ள, உத்தரவுகளை முன்னுதாரணமாக கொள்ள முடியாது. ஏனென்றால், இந்த உத்தரவுகள், வழக்கு தொடுத்தவர்களுக்கும், அரசுக்கும் மட்டுமே பொருந்தும்.அதேநேரத்தில், இந்த உத்தரவுகளை மேற்கோள் காட்டி, துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியருக்கு வழங்கப்படும், தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம், தங்களுக்கு வழங்க வேண்டும் என, மனுதாரர்கள் உரிமை கோர முடியாது. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக