வெள்ளி, 20 டிசம்பர், 2013

உண்மையைச் சொல்ல கதை ஒரு கருவி!: ஆபிரகாம் வர்கீஸ் நேர்காணல்


நோயாளிகளைப் பரிசோதித்து நோயை அறிவதிலும் சிகிச்சை முறையைத் தேர்வுசெய்வதிலும் பல்லாண்டுகளுக்கு முன்னால் மருத்துவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகளை (பெட்சைடு மெடிசின்) இன்னமும் கடைப்பிடிக்கும் மேற்கத்திய நாடுகளின் மருத்துவர்களில் ஆப்ரகாம் வர்கீஸும் ஒருவர். இந்தியாவில் மருத்துவ மாணவராக இருந்தபோது தான் பெற்ற பயிற்சிகளிலிருந்து இதன் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருக்கிறார். கிருமிகளால் பரவக்கூடிய நோய்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் நிபுணரான இவர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடலின் உள்ளுறுப்புகளுக்குச் சிகிச்சை அளிக்கும் துறையில் அவருடைய நேரத்தின் பெரும்பகுதியைச் செலவிடுகிறார்.

அதே வேளையில் ‘மை ஓன் கண்ட்ரி’, ‘தி டென்னிஸ் பார்ட்னர்’, ‘கட்டிங் ஃபார் ஸ்டோன்’ ஆகிய புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். அடுத்து ‘மாரோமோன் கன்வென்ஷன்’ என்ற புத்தகத்தை எழுதிக்கொண்டிருக்கிறார். அவருடைய பெற்றோர்களின் சொந்த மாநிலமான கேரளத்தைக் களமாகக் கொண்டது இந்தப் புத்தகம். மருத்துவரும் எழுத்தாளருமான ஆபிரகாம் வர்கீஸ் தன்னுடைய இரு வேறு வேலைகள் குறித்தும் சுவாரசியமாகப் பேசினார்.

இரண்டு வெவ்வேறு விதமான வேலைகளை வெற்றிகரமாகச் செய்கிறீர்கள் – ஒன்று மருத்துவர் தொழில், மற்றொன்று எழுத்துப் பணி. எப்படி இரண்டுக்கும் நேரம் ஒதுக்குகிறீர்கள்?

என்னுடைய தொழில் ஒன்றுதான்; நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதுதான் அது. மருத்துவத்தில் எனக்கிருந்த பற்றுதான் என்னை எழுதத் தூண்டியது, அந்த எழுத்தும் மருத்துவத்தில் இருந்த ஈடுபாடு காரணமாகவே வெளிப்பட்டது. இப்போது அப்படிச் சொல்வது சரியல்ல என்று என் மனதுக்குப் படுகிறது. உண்மை என்னவென்றால், இரண்டு வேலைகளையும் தனித்தனியாகச் செய்கிறேன், ஒன்றை நிறுத்திவிட்டு இன்னொன்றுக்கு மாறும் அளவுக்கு இதைக் கையாள்கிறேன்.

எழுத்துப் பணிக்காகத் தனியே சில மணி நேரங்களை ஒதுக்கும் அளவுக்கு ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டக்காரன்தான். பல்கலைக்கழகமும் என்னுடைய மேலதிகாரியும் என்னுடைய படைப்பிலக்கியத் திறனையும் ஆய்வுக்கு இணையானதாகக் கருதுகின்றனர். என்னுடைய சக மருத்துவர்கள் ஆய்வுக் கூடத்துக்குள் சென்று சோதனைகளில் ஈடுபடுவதைப் போல நானும் ரகசிய அலுவலகத்துக்குச் சென்று அங்கே என் எழுத்துப் பணிகளைத் தொடர்கிறேன். இருவேறு வேலைகளைச் செய்வதால் நேரத்தைப் பகிர்ந்து வேலை செய்யவும் திட்டமிடவும் குறித்த காலத்தில் பணிகளை முடிக்கவும் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடிகிறது.

‘மை ஓன் கண்ட்ரி’, ‘தி டென்னிஸ் பார்ட்னர்’, ‘கட்டிங் ஃபார் ஸ்டோன்’ ஆகிய மூன்று நூல்களுமே சுயசரிதையைப் போன்றவை. உங்களுடைய அனுபவங்களையும் உணர்ச்சிகளையும் பிறர் அறியச் செய்யும் வகையில் எழுதுவது எவ்வளவு கடினமானது?

முதலிரண்டும் நினைவலைகள் என்பதால் சுயசரிதைபோல இருக்க வேண்டியதாகிவிட்டது. இவையெல்லாம் உண்மையாகவே இருந்தாலும் இவை என்னைப் பற்றியவை அல்ல. நான் அந்தச் சம்பவங்களை எல்லாம் ஒரு பார்வையாளனாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். ‘மை ஓன் கண்ட்ரி’ என்பது அமெரிக்காவின் டென்னஸியின் கிராமப் பகுதிகளில் நிலவிய ‘எய்ட்ஸ்’ பற்றியது. ‘டென்னிஸ் பார்ட்னர்’ என்பது மருத்துவர்கள்பற்றியும், போதை மருந்துக்கு அடிமையானவர்கள்பற்றியும் நான் அனுபவத்தில் தெரிந்துகொண்டது. நான் என்ன பார்த்தேனோ அதுதான் இவ்விரு நூல்களின் கதைக்களம் என்பதால் நூலை எழுதிய நானே இதில் கதாபாத்திரமாகி விட்டேன்.

பல விஷயங்களைச் சொல்லவந்து நான் எனக்குள் அதை நிறுத்துவதைப் போல எழுதியதைப் படித்துப் பார்த்த பதிப்பாளர்கள், “வாசகர்கள் விவரங்களை அறியவரும்போது கதவை அவர்களுடைய முகத்தில் ஓங்கி அறைந்து சாத்தாதீர்கள், நிறைய தகவல்களைத் தாருங்கள்” என்று என்னைக் கெஞ்சி சம்மதிக்க வைத்தார்கள். பிறகு நான் நிறைய தகவல்களை எழுதினேன். என்னுடைய புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து படிக்கும் வாசகனுக்கு இவற்றையெல்லாம் தெரிந்துகொள்ளும் உரிமை இருக்கிறது என்பது என் எண்ணம்.

‘கட்டிங் ஃபார் ஸ்டோன்’வித்தியாசமானது. அது ஒரு கற்பனைக் கதை. எனக்கு நன்றாகத் தெரிந்த புவியியலையும் வரலாற்றையும் அதில் கொண்டுவந்திருந்தேன். அதில் வெளிப்பட்ட பல உணர்வுகள் நிச்சயமாக என்னுடைய சொந்த அனுபவங்கள்தான். ஒரு நாவலாசிரியர் சில எண்ணங்களை விளக்க முற்படும்போது அது சுயசரிதையாகிவிடுகிறது என்று நினைக்கிறேன்.

இன்றைய உலகில் நோயாளிகளை நேரடியாகத் தொட்டுப்பார்த்து, பேசி, நோயாளியிடமிருந்தே நோயின் தன்மை, தீவிரம் குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்டுப் பிறகு சிகிச்சையை முடிவுசெய்யும் பழைய முறையை இன்னமும் கடைப்பிடிக்கும் ஒருசில மருத்துவர்களில் நீங்களும் ஒருவர். இதில் உங்களுடைய அனுபவம் கூறுவது என்ன?

நோயாளிகள் உடனடியாக இதைப் புரிந்துகொண்டு வரவேற்கின்றனர். இதை நீங்கள் பழைய முறை என்று அழைத்தாலும் இது மிகவும் அவசியமானது. நோயின் தன்மையைத் தெரிந்துகொண்டு, மேற்கொண்டு சோதனைகளைத் தீர்மானிக்க இது உதவுகிறது. நோயாளி சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு அவருக்கு வலி உள்ள இடத்தில் தொட்டு உணர்வதன் மூலம் தேவையற்ற கதிரியக்கச் சோதனைகளுக்கு அவர்களை ஆளாக்காமல் இருக்கலாம். பண விரயத்தை ஏற்படுத்தும் பல சோதனைகளைத் தவிர்த்துவிடலாம்.

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சடங்கு. தன்னுடைய வாழ்க்கைத் துணையிடமோ மதகுருவிடமோ நம்பிக்கை வைத்துச் சொல்லாததைக்கூட முன்பின் தெரியாத மருத்துவர்களிடம் சொல்கின்றனர். தங்களது ஆடைகளைக் களைந்துவிட்டு மருத்துவர் தொடுவதை அனுமதிக்கின்றனர். வேறு இடமாக இருந்தால் இதைக் கடுமையான குற்றமாகக் கருதிவிடுவார்கள். இதற்கெல்லாம் காரணம், மருத்துவர் என்பவர் தொழில்ரீதியாக அணிந்திருக்கும் வெள்ளைக் கோட்டு தரும் மரியாதைதான்.

உங்களுடைய வீட்டிலோ என்னுடைய வீட்டிலோ இல்லாத மரச்சாமான்களும் சுவர்களில் ஆய்வுக்கருவிகளும் இருக்கும் மருத்துவ அறையில் இந்த ஆய்வு நடப்பதால் இதற்கு தனி கௌரவம். நன்கு யோசித்துப்பார்த்தால் இதுவும் ஒரு சடங்குதான். நோயாளியின் வயிற்றில் ஏனோ தானோவென்று லேசாகத் தொட்டுப் பார்த்தாலோ, ஆடையின் மீதே ஒப்புக்கு ஸ்டெதாஸ்கோப்பை வைத்துவிட்டு அரை வினாடியில் எடுப்பதாலோ நோயாளி ஏமாற்றம்தான் அடைகிறார். இதே சோதனைகளை நீங்கள் அக்கறையுடனும் திறமையுடனும் செய்யும்போது நோயாளி அதை அங்கீகரிப்பதுடன் வியப்பிலும் ஆழ்ந்துபோகிறார். இந்தச் சோதனையே, அவர்களை நாம் நன்றாகக் கவனிக்கிறோம் என்ற மன அமைதியைத் தந்துவிடுகிறது.

- © தி இந்து (ஆங்கிலம்), தமிழில்: சாரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக