சனி, 28 டிசம்பர், 2013

விரிவான செய்தி:முதுகலை தமிழாசிரியர் தேர்வு- மீண்டும் வழக்குகள்


அரசுப்பள்ளிகளில் காலியாக கிடக்கும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் எழுத்து தேர்வு நடத்தி அதில்  தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. அதன்படி எழுத்து தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 21–ந்தேதி நடத்தியது. தமிழ் உள்பட அனைத்து பாடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வை 1 லட்சத்து 59 ஆயிரத்து 750 முதுகலை பட்டதாரிகள் எழுதினார்கள்.

 தேர்வு எழுதிய அன்றே தமிழ்பாடத்தில் 40–க்கும் மேற்பட்ட வினாக்கள் சரியாக தெரியவில்லை. வினாத்தாள் சரியாக அச்சாகவில்லை என்ற புகார் எழுந்தது. பலர் நீதிமன்றத்திற்கு சென்றனர். இதன்காரணமாக தமிழ் பாடத்திற்கு உரிய முடிவு தவிர மற்ற பாட முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 7– ந்தேதி வெளியிடப்பட்டது. பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பும் நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ்ப்பாடத்திற்கு உரிய முடிவு எப்போது வெளியிடப்படும் என்று தேர்வு எழுதியவர்கள் எதிர்பார்த்தபடி இருந்தனர்.

முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள் சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தபோது.நீதியரசர்கள் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர்   தேர்வு முடிவினை வெளியிட அனுமதி  அளித்தனர். அதே சமயத்தில் வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு   அவர்கள் தங்கள் மனுவில் கோரியுள்ளபடி கருணைமதிப்பெண் வழங்கவும் இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்து.வழக்கினை ஒத்திவைத்தனர்

 இந்த நிலையில் மாலை தமிழ் பாடத்திற்குரிய முடிவு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் 23.12.13  அன்று வெளியிடப்பட்டது.Dec 30 மற்றும் 31–ந்தேதிகளில் மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர் ஆகிய தேர்வு இடங்களில் 605 பணியிடங்களை நிரப்ப 694 பேருக்குசான்றிதழ் சரிபார்த்தல் நடக்கிறது

 இந்த சான்றிதழ் சரிபார்த்தல் மதுரையில் உள்ள சென்னை ஐகோர்ட்டு கிளையின் உத்தரவுப்படி நடத்தப்பட உள்ளது. ஒரே மதிப்பெண்ணை பலர் எடுத்திருப்பதால் ஒரே மதிப்பெண் பெற்ற அனைவரும் சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்த்தலுக்கு அழைக்கப்பட்டதால் வேலைக்கு உத்தரவாதம் என்று யாரும் நினைக்கக்கூடாது. இந்த பட்டியல் தற்காலிகமானதுதான். பணிக்கு தேர்வு செய்யப்பட்டோர் இறுதி பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்  என ஆசிரியர் தேர்வு வாரிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் தேர்வு முடிவு வெளியிடப்படும்போது பி வரிசை வினாத்தாள் குளறுபடிக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்த தேர்வர்களுக்கு அவ்வாறு எவ்வித தீர்வும் வழங்கப்படாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலம் வேலூர் திருவண்ணாமலை தருமபுரி  ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஒரீரு மதிப்பெண்களால் வாய்ப்பை இழந்த பலர் இதுகுறித்தும், பிழையான வினாக்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கக்கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தை அனுகமுடிவு செய்துள்ளனர். தற்போது  சென்னை உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பதால் அவசரவழக்காக 4 பேர் மனுதாக்கல் செய்துள்ளதாகவும் அவை 30. 12 1013 அன்று நீதியரசர் வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோல் மதுரை கிளையிலும் முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு  வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள (  TO IMPLEAD IN WA(MD).1089/2013 and WA(MD).1090/2013 ) வழக்குரைஞர்கள் பொன்ராம்குமார்,சங்கர் ஆகியோர் மனுதாரர் சர்பில் மனுஒன்றை தாக்கல் செய்துள்ளனர் இது விடுமுறைக்கால நீதிபதிகளான பிரகாஷ்,மகாதேவன் ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் டிசம்பர் 30 அன்று விசாரணைசெய்யப்படவுள்ளது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கையில், பலர் ஓரிரு மதிப்பெண்களால் வாய்ப்பை இழந்துள்ளனர் ஏற்கனவே வழக்கு தொடுத்த விஜயலட்சுமி மற்றும் ஆண்டனி கிளாரா ஆகியோருக்கு   21 கருணைமதிப்பெண் வழங்கவும் இரு பணியிடங்களை ஒதுக்கிவைக்கவும் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளாதால் அதேபோல் பாதிப்படைந்துள்ள  பலருக்கும் நீதிமன்றத்தால் தீர்வுகிடைக்கும் என்று நம்புகிறோம் என்றனர்

 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக