திங்கள், 30 டிசம்பர், 2013

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பார்வையற்ற மாணவருக்கு மட்டும் பிரெய்லி வினாத்தாள்


பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பார்வையற்ற மாணவருக்கு மட்டும் பிரெய்லி வினாத்தாள் வழங்கப்பட்டுள்ளது.

தேர்வில் பங்கேற்ற பிற பார்வையற்ற மாணவர்களுக்கு இந்த பிரத்யேக வினாத்தாள் வழங்கப்படவில்லை.

யுஜிசி நடத்தும் உதவிப் பேராசிரியர் பணிக்கான "நெட்' தகுதித் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேர்வெழுதினர். சென்னையில் 13 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 47 மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த நிலையில், சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மிராண்டா டாம்கின்ஸன் என்பவர் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "நெட்' தேர்வில் பங்கேற்கும் பார்வையற்ற மாணவர்களுக்கு பிரெய்லி முறை வினாத்தாள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

270 பார்வையற்றோர் பங்கேற்பு:

ஆனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "நெட்' தேர்வில் தமிழகத்தில் மட்டும் 270-க்கும் மேற்பட்ட பார்வையற்ற மாணவர்கள் பங்கேற்றபோதும், வழக்கு தொடர்ந்த மிராண்டாவுக்கு மட்டும் பிரெய்லி முறை வினாத்தாள் வழங்கப்பட்டது.

இவர் தேர்வெழுதிய எம்.ஜி.ஆர். ஜானகி பெண்கள் கல்லூரி மையத்தில் தேர்வெழுதிய மற்ற பார்வையற்ற மாணவர்களுக்கு இந்த பிரத்யேக வினாத்தாள் வழங்கப்படவில்லை.

அவர்கள் அனைவரும் வழக்கம்போல், உதவியாளர் ஒருவரின் உதவியுடனே தேர்வெழுதினர்.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பார்வையற்ற தேர்வர் கூறியது:

பிறரது உதவியுடன் தேர்வெழுதும்போது, தவறாக பதிலளிக்க வாய்ப்புள்ளது என்பது உள்ளிட்ட காரணங்களால்தான் பிரெய்லி முறை வினாத்தாள் வழங்க வேண்டும் என மிராண்டா டாம்கின்ஸன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக மிராண்டாவுக்கு மட்டுமே பிரத்யேக வினாத்தாள் வழங்கியிருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

எனவே, வரும் காலங்களில் பார்வையற்ற மாணவர்கள் அனைவருக்கும் பிரெய்லி வினாத் தாள் வழங்க யுஜிசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து யுஜிசி அதிகாரி ஒருவர் கூறுகையில், போதிய கால அவகாசம் இல்லாத காரணத்தாலேயே வழக்கு தொடர்ந்த மாணவருக்கு மட்டும் பிரெய்லி வினாத்தாள் வழங்கும் நிலை ஏற்பட்டது. வரும் காலங்களில் தேவைப்படும் எண்ணிக்கையில் இந்த வினாத் தாள்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக