திங்கள், 23 டிசம்பர், 2013

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி:முதல்வராகிறார் கெஜ்ரிவால்



டெல்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி தயாராக இருக்கிறது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை, டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், டெல்லியில் ஆட்சி அமைப்பது தொடர்பான இறுதி முடவு இன்று காலை 11 மணிக்குள் அறிவிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது: டெல்லியில் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி தயாராக இருப்பதாகவும், மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைப் தொடர்ந்து இன்று   டெல்லியில் ஆட்சி அமைக்க அனுமதி கோரி அம்மாநில துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கை, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார்.

மேலும், டெல்லி துணை நிலை ஆளுநர் அனுமதி அளித்தால், ஜந்தர் மந்தரில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்பார் என கட்சியின் மூத்த தலைவர் சிசோதியா தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆதரவு:

தேர்தலில் 8 தொகுதிகளை மட்டும் கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, 28 இடங்களை கைப்பற்றிய ஆம் ஆத்மிக்கு வெளியில் இருந்து ஆதரவளிக்க முன்வந்தது.

காங்கிரஸின் ஆதரவை ஏற்க ஆம் ஆத்மி கட்சி 18 நிபந்தனைகள் விதித்தது. இந்நிலையில் 18 நிபந்தனைகளில் 16 நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதாகவும் காங்கிரஸ் அறிவித்தது என்பது கவனிக்கத்தக்கது.

இந்நிலையில் காங்கிரஸ் ஆதரவை ஏற்பதா, டெல்லியில் ஆட்சி அமைப்பதா என்பது குறித்து ஆம் ஆத்மி கட்சி மக்கள் கருத்தை கேட்டு முடிவெடுக்கும் என அறிவித்தார் கெஜ்ரிவால்.

இதற்காக எஸ்.எம்.எஸ்./ துண்டு பிரசுரங்கள் மூலம் கருத்து கேட்கப்பட்டன. அரவிந்த் கெஜ்ரிவாலும் நேரடியாக பொது மக்களை சந்தித்து கருத்து கேட்டார். இதன் அடிப்படையில் இன்று ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைப்பது தொடர்பாக தனது இறுதி முடிவை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக