ஞாயிறு, 29 டிசம்பர், 2013

தமிழ் வளர்ச்சித்துறை நடத்திய கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு


தமிழ் வளர்ச்சித்துறை நடத்திய கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாநில அளவிலான போட்டி இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– 
தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, மாவட்ட அளவில் முதலிடத்தைப் பெற்ற மாணவ– மாணவியர்களுக்கு இடையே மாநில அளவிலான போட்டிகள் சென்னை மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 27–ந் தேதி (நேற்று) அன்று நடத்தப்பட்டது.
 விழா நிகழ்ச்சி மாநில போட்டிக்கான நிகழ்ச்சியில் சென்னை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் சு.தம்புசாமி வரவேற்புரை ஆற்றினார். உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் கோ.விசயராகவன் முன்னிலை உரையும், சென்னை பொதிகைத் தொலைகாட்சி நிலைய இயக்குநர் பால ரமணி, கவிஞர் பிறைசூடன், கவிஞர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரையும் நிகழ்த்தினர். தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு.சேகர், வெற்றி பெற்ற மாணவ– மாணவியருக்கு பங்கேற்பு சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார். தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் கோ.செழியன் நன்றி தெரிவித்தார். 
பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பள்ளி முத்தமிழ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11–ம் வகுப்பு மாணவி ச.சரண்யா முதலிடத்தையும், சேலம் மாவட்டம் மேட்டூர் அணை புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி 12–ம் வகுப்பு மாணவி ரா.பூமணி இரண்டாம் இடத்தையும், ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 12–ம் வகுப்பு மாணவன் சி.பூவரசன் மூன்றாம் இடத்தையும் வென்றனர். 

 கட்டுரை போட்டியில் மதுரை ஜோதி மேல்நிலைப்பள்ளி 11–ம் வகுப்பு மாணவி ச.பவித்ரா முதலிடத்தையும், தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மகளிர் மேல்நிலைப்பள்ளி 11–ம் வகுப்பு மாணவி ர.வித்யா இரண்டாம் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப்பள்ளி 11–ம் வகுப்பு மாணவன் கெ.சச்சின் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
 பேச்சு போட்டியில் புதுக்கோட்டை வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11–ம் வகுப்பு மாணவி மு.பு.லாவண்யா முதலிடத்தையும், பெரம்பலூர் மவுலானா மேல்நிலைப்பள்ளி 12–ம் வகுப்பு மாணவன் சி.அலிமுதீன் இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் தர்ம வாவன விநாயகர் மேல்நிலைப்பள்ளி 12–ம் வகுப்பு மாணவன் மு.லெனின்குமார் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

 கல்லூரி மாணவர்கள் 
மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற கவிதை போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி ஆண்டவர் செவிலியர் பயிற்சிப் பள்ளி முதலாமாண்டு மாணவி ரா.நீலாவதி முதலிடத்தையும், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சாரதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி பூ.ரஞ்சிதா இரண்டாம் இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் ரோவர் பொறியியல் கல்லூரி மாணவன் க.கலைவண்ணன் மூன்றாம் இடத்தையும் வென்றனர். 
கட்டுரைப் போட்டியில் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவன் ரா.கண்ணன் முதலிடத்தையும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவனைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவி சுவாதி பிரியா இரண்டாம் இடத்தையும், விழுப்புரம் மாவட்டம் கொல்லியங்குணம் பவுட்டா கலை மற்றும் அறிவியல் மாணவி கோ.சாந்தகுமாரி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். 
 பேச்சுப் போட்டியில் திருவண்ணாமலை கம்பன் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி மாணவி க.அபிதா முதலிடத்தையும், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாணவன் க.ஆதிலிங்கம் இரண்டாம் இடத்தையும், திருவாரூர் சுவாமி தயானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவன் ரா.கார்த்திக் ராஜா மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

 ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.12 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக