வியாழன், 23 ஜனவரி, 2014

திருநெல்வேலியில்  தமிழறிஞர் ராபர்ட் கால்டுவெல் 200ஆவது ஆண்டு தொடக்கவிழா


திருநெல்வேலியில்  தமிழறிஞர் பேராயர் ராபர்ட் கால்டுவெல் 200ஆவது ஆண்டு தொடக்கவிழா

தமிழுக்கும் தமிழர்களுக்கும் முகவரி தந்தவராகக் கருதப்படும் தமிழறிஞர் பேராயர் ராபர்ட் கால்டுவெல் 200ஆவது ஆண்டு தொடக்கவிழா திருநெல்வேலியில் சனிக்கிழமை (ஜன.25) விமரிசையாகக் கொண்டாடப்படவுள்ளது. 
இது தொடர்பாக, 200ஆவது ஆண்டு விழாக் குழு சார்பில் திருநெல்வேலி மண்டல சிஎஸ்ஐ பேராயர் ஜெ.ஜெ. கிறிஸ்துதாஸ்,கத்தோலிக்க மறை மாவட்ட முதன்மை குழு ஜோமிக்ஸ் அடிகள், பேராசிரியர் தொ. பரமசிவன் ஆகியோர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: 7.5.1814-ல் வடக்கு அயர்லாந்தில் பிறந்து, ஸ்காட்லாந்தில்கல்வி கற்று 8.1.1838-ல் இந்தியா வந்தவர் ராபர்ட் கால்டுவெல். அன்று முதல் 53ஆண்டுகளாக தமிழ்ப் பணி, இறைப் பணி, கல்விப் பணி, சமூகப் பணிகளில் தன்னை வித்திட்டவர். மொழியியல் புலமைப் பெற்ற இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளை ஆராய்ந்து தனிப்பட்ட ஆற்றல் மிக்க மொழிகள் என்பதை உணர்த்தியவர். இதன் தொடர்ச்சியாக திராவிட மொழிகளின் ஒப்பிட்டு இலக்கணத்தை வெளியிட்டார். திராவிட இயக்கம் தோன்ற அடித்தளமாக இருந்தவர். திருநெல்வேலி மாவட்டம், இடையன்குடியில் 21 திருச்சபைகளையும், 9 பள்ளிகளையும் நிறுவியவர். 

இவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் 2ஆவது உலகத் தமிழ் மாநாட்டில் சென்னை மெரீனா கடற்கரையில் கால்டுவெல்சிலை தமிழக அரசால் நிறுவப்பட்டது. இவர் வசித்த இடையன்குடி இல்லம் அரசு நினைவிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலம் முழுவதும் தமிழுக்கு செலவிட்டவரின் 200ஆம் ஆண்டு தொடக்கவிழா சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக விழாக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (ஜன. 25) காலை 10.30 மணிக்கு இடையன்குடியிலிருந்து சுடரொளிப் பயணம் தொடங்குகிறது. இந்த பயணத்தில் 200 இருசக்கர வாகனங்களில் அணிவகுப்பு திசையன்விளை, பரப்பாடி, நான்குனேரி வழியாக பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தை வந்தடையும்.  சுடரொளியை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் பெற்றுக் கொள்கிறார். இதன் தொடர்ச்சியாக விழா நிகழ்வுகள் நடைபெறும். தமிழசைக் கச்சேரி, ஒயிலாட்டம், குறுநாடகம், களியல் உள்ளிட்டவை நடைபெறும். தொடர்ந்து மாலை 5 மணிக்கு தமிழறிஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு நடைபெறுகிறது. ஓராண்டு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படும் என்றனர் அவர்கள். மேலும், அவர்கள் கூறுகையில், கால்டுவெல்லுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கல்லூரி, பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் கால்டுவெல் வாழ்க்கை வரலாற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். அரசே விழா நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக