வியாழன், 30 ஜனவரி, 2014

ஒரு நேர சாப்பாட்டிற்கு அரசு 7 ரூபாய் : விலை உயர்வால் தவிக்கும் விடுதி வார்டன்கள்

தமிழகத்தில் உள்ள மாணவர் விடுதிகளில், ஒரு நேர சாப்பாட்டிற்கு அரசு 7 ரூபாய்
மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்வதால், தற்போதைய விலை ஏற்றத்தை சமாளிக்க முடியாமல்
வார்டன்கள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் அரசு சார்பில் ஆதிதிராவிட நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கள்ளர்சீரமைப்புத்துறைகள் சார்பில் மாணவ, மாணவிகளின் விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதி மாணவர்களின் ஒரு மாத உணவு கட்டணமாக, மாணவர் ஒருவருக்கு தலா 650 ரூபாய் மட்டுமே அரசு வழங்கி வருகிறது.

இந்த தொகையை மூன்று வேளை சாப்பாட்டிற்கு பிரித்து பார்த்தால்,ஒரு மாணவருக்கு ஒரு வேளை சாப்பாட்டிற்கு அரசு வழங்கும் தொகை 7.22 ரூபாய் மட்டுமே. தவிர,
அரசு விடுதி காப்பாளர்களுக்கு வழங்கியுள்ள விலைப்பட்டியல் 2005ம் ஆண்டு விலைப்படி வழங்கப்பட்டவை.
தற்போது, ஒவ்வொரு பொருளின் விலையும் 100 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளன. தற்போதையவிலையில், இந்த 7 ரூபாயில் பொருட்களை வாங்க முடியவில்லை.தவிர, இந்த 7 ரூபாய் சாப்பாட்டில் வாரந்தோறும் மூன்று வேளை உணவு, முட்டையுடன் வழங்க வேண்டும்.
ஒரு வேளை உணவு கோழிக்கறி அல்லது ஆட்டுகறியுடன் இருக்க வேண்டும். சனி,ஞாயிற்றுக் கிழமைகளில்கட்டாயம் இட்லி போன்ற டிபன் வழங்க வேண்டும். தினமும் மாலை 5 மணிக்கு சுண்டல்,காபி கொடுக்கவேண்டும். சுண்டல், காபி கணக்கிலேயே தினமும் குறைந்தது 3 ரூபாய் செலவாகி விடும். மதிய உணவில்காய்கறி பொறியல், மோர், ரசம், சாம்பார் கட்டாயம் இடம் பெற வேண்டும். தினமும் காலையும், இரவும்வெவ்வேறு வகையான மெனு செய்து வழங்க வேண்டும் என அரசு ஒரு பட்டியலே வழங்கி உள்ளது.
இந்த பட்டியல் படிதான் உணவு வழங்க வேண்டும். இந்த விடுதிகளுக்கு மானிய விலையில் சிலிண்டர்கள் வழங்கப்பட்டு வந்தன.கடந்த 2012ம் ஆண்டு முதல் மானிய சிலிண்டர்களையும் அரசு நிறுத்தி விட்டது. இதனால் விடுதி நிர்வாகங்கள் ஒரு சிலிண்டரை 1275 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்க வேண்டியது உள்ளது.
குறைந்தபட்சம் ஒரு விடுதிக்கு மாதந்தோறும் 15 சிலிண்டர்களாவது தேவைப்படுகிறது. இந்த வகையில்ஒவ்வொரு விடுதிக்கும் மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 14 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் செலவாகிறது. சிலிண்டர் வாங்க அதிகரித்த செலவுகளை ஈடுகட்டும் வகையில் அரசு ஒரு மாணவருக்கு, மாதம் 105 ரூபாய் அதிகரித்து மாதம் 755 ரூபாய் என ஒதுக்கீடு செய்தது. இந்த ஒதுக்கீடு பணம், பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளுக்கும், கள்ளர் சீரமைப்பு நலத்துறை விடுதிகளுக்கும் வழங்கப்பட்டு விட்டது.அரசு உத்தரவு வெளியாகி ஓராண்டிற்கு மேலாகியும் இன்னும் ஆதிதிராவிடர்நலத்துறை விடுதிகளுக்கு வழங்கப்படவில்லை.

இதனால், இந்த துறை விடுதி வார்டன்கள் கடும் நிதி நெருக்கடியில் விடுதிகளை நடத்த முடியாமல் தவிக்கின்றனர்.அரசு விடுதி மாணவர்களுக்கு தற்போதைய விலை ஏற்றத்திற்கு ஏற்ப கூடுதல் நிதி வழங்க வேண்டும். தவிர ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியையும் ஆதிதிராவிட நல மாணவர் விடுதிகளுக்கு உடனடியாக அனுமதித்து,அரசு உத்தரவிட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக