வெள்ளி, 24 ஜனவரி, 2014

வருகின்றது தாவணி தினம்...


வேட்டி தினத்துக்கு பொதுமக்களிடம் இருந்து வந்த வரவேற்பு, வாழ்த்துகளைத் தொடர்ந்து தாவணி தினம் கொண்டாட தீர்மானித்திருக்கிறது கோ-ஆப்டெக்ஸ். தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை அனைவரையும் அணியச் செய்யும் விதமாகவும் கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் வேட்டி தினம் அறிவித்தார் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் உ.சகாயம்.

இதன்படி, ஜனவரி முதல் தேதியிலிருந்து 15-ம் தேதிக்குள் ஏதாவதொரு நாளை வேட்டி தினமாக அறிவித்து அன்றைய தினம் பணியாளர்கள் அனைவரையும் வேட்டி அணிந்து வர அறிவுறுத்தும்படி தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்களுக்கு கடிதம் எழுதினார் சகாயம்.

நூறு விதமான வேட்டி ரகங்கள்

இதற்கு பொதுமக்களிடம் இருந்தும் தொண்டு நிறுவனங்களிடம் இருந்தும் அமோக வரவேற்பு கிடைத்தது. வேட்டி தினத்துக்காக இளவட்ட வேட்டி, நாட்டாமை வேட்டி, ஜமீன் வேட்டி, வாசனை வேட்டி (மூன்று சலவை வரை குறிப்பிட்ட மலரின் வாசனை இருக்கும்), காந்தி வேட்டி என நூறு விதமான வேட்டி ரகங்களை அறிமுகப்படுத்தியது கோ-ஆப்டெக்ஸ். இந்நிலையில், சகாயத்தின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் முழுவதும் அரசு, தனியார் அலுவலகங்கள், கல்லூரிகளில் வேட்டி தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

வேட்டிக்கு மாறிய ஆட்சியர்கள்

சில இடங்களில் இனி மாதத்தில் இரண்டு நாட்கள் வேட்டி அணிந்து வருவது என உறுதிப்பாடும் எடுக்கப்பட்டுள்ளது.

இதில்லாமல், ஒன்றிரண்டு மாவட்டங்களைத் தவிர தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட ஆட்சியர்கள், ஒரு நாள் வேட்டி அணிந்து வந்து வேட்டி தினத்தைக் கொண்டாடி இருக்கிறார்கள்.

75 ஆயிரம் வேட்டிகள் விற்பனை

வேட்டி தின வெற்றி குறித்து கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் உ.சகாயம்  கூறியதாவது: கடந்த ஏப்ரலில் இருந்து இதுவரை சுமார் ரெண்டே கால் லட்சம் வேட்டிகள் கோ-ஆப்டெக்ஸில் விற்பனையாகியுள்ளன.

இதில், வேட்டி தினத்துக்கான விற்பனை மட்டுமே சுமார் 75 ஆயிரம் வேட்டிகள். இது நாங்கள் எதிர்பார்க்காத வரவேற்பு.

சிறுவர்களுக்கான வேட்டிகளைக் கேட்டு நிறையப் பேர் வந்தார்கள். ஆனால், எங்களிடம் அந்த ரகங்கள் போதிய ஸ்டாக் இல்லை. கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தமிழ் மரபின் வேரை இனம் கண்டு மதிக்கத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு வேட்டி தின கொண்டாட்டம் நல்ல உதாரணம்.

கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் ஒரு நாள் வேட்டி அணிந்து வர முடிவெடுத்திருக்கிறோம். மற்ற அலுவலகங்களிலும் இதே வழக்கத்தை கடைபிடிக்கும்படி அனைவருக்கும் மீண்டும் கடிதம் எழுத தீர்மானித்திருக்கிறோம்’’என்றார்.

இளம்பெண்களுக்காக தாவணி தினம்

வேட்டி தினத்தை அறிவித்து இளைஞர்கள் மத்தியில் எழுச்சியை உண்டாக்கியதுபோல் அடுத்ததாக தாவணி தினம் அறிவித்து இளம் பெண்கள் இடையே கைத்தறிப் புரட்சியை உண்டாக்கப் போகிறதாம் கோ-ஆப்டெக்ஸ்.

ஏற்கெனவே பள்ளி, கல்லூரி மாணவிகள் பண்டிகை மற்றும் முக்கிய நாட்களில் மட்டும் தாவணி அணிந்து வருகின்றனர்.

இனி இதை வழக்கத்துக்குக் கொண்டுவரும் வகையிலும், நமது பாரம்பரிய உடை மறக்கடிக்கப்படாமல் இருக்கவும் வாரத்துக்கு ஒரு நாள் தாவணி அணிந்து வருவது குறித்து பள்ளி, கல்லூரிகளுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக