வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி முதல்–அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ரூ.419 முதல்ரூ.9,344 வரை கூடுதலாக கிடைக்கும்.

கூட்டுறவு வங்கி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் ரூ.419 முதல்ரூ.9,344 வரை கூடுதலாக கிடைக்கும்.

இது தொடர்பாக, முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– அகவிலைப்படி மொத்தமுள்ள 4,524 தொடக்க வேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கங்களில், 671 சங்கங்கள் தொடர் லாபத்திலும், 3,442 சங்கங்கள் சில ஆண்டுகளில் லாபம் ஈட்டியும், மீதமுள்ள 411 சங்கங்கள் நட்டத்திலும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. மேற்படி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களின் நலனைக்கருத்தில் கொண்டு, அரசு அறிவித்த அகவிலைப்படியினை அவர்களுக்கும் வழங்கிட நான் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். மேற்படி கூட்டுறவுக்கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், தங்களுக்கான ஊதிய விகிதம் மாற்றியமைக்கப்பட்டு, 31–3–2013 உடன் ஐந்தாண்டுகள் ஆகிவிட்டதால், ஊதிய விகிதத்தை திருத்தியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்தனர். இவர்களது கோரிக்கையை ஏற்று, புதிய ஊதிய விகிதங்களை பரிந்துரை செய்ய ஏதுவாக கூட்டுறவுத் துறை அலுவலர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க நான் ஆணையிட்டேன். இந்தக்குழு தற்போது தனது பரிந்துரையை அரசுக்கு அளித்துள்ளது. இந்தக்குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்த நான், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக்கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கீழ்க்காணும் ஊதிய உயர்வினை வழங்குமாறு ஆணையிட்டுள்ளேன்.

நிலுவைத்தொகை இதன்படி, தொடர்ந்து 5 ஆண்டுகளாக நிகர லாபத்தில் செயல்பட்டு வருவதோடு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து எந்த நிதியுதவியும் பெறாமல் சொந்த நிதியில் இருந்து செயல்படும் கூட்டுறவுச்சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 12 சதவீதம் ஊதிய உயர்வு 1–4–2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்.
3 ஆண்டுகள் தொடர்ந்து நிகர லாபத்தில் இயங்கி, சங்கத்தின் உறுப்பினர்களுக்கு கூட்டுறவு சங்க விதிகளின்படி உச்சபட்சமான 14 சதவீதம் ஈவுத்தொகையை தொடர்ந்து வழங்கி வரும் சங்கங்களில் பணியாற்றும பணியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, கூடுதலாக ஓர் ஊதிய உயர்வு ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து நிதியுதவி பெற்று தொடர்ந்து 5 ஆண்டுகள் நிகர லாபத்தில் இயங்கி வரும் கூட்டுறவுச்சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு 1–4–2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்.

7 சதவீதம் ஊதியம் உயர்வு
சில ஆண்டுகள் லாபம் ஈட்டி, குவிந்த நட்டத்துடன் செயல்படும் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 7 சதவீதம் ஊதிய உயர்வு 1–4–2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்.
நடப்பு மற்றும் குவிந்த நட்டத்தில் செயல்படும் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு 1–4–2013 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக வழங்கப்படும்.
ஒரு கோடி ரூபாய் மற்றும் அதற்கு கீழ் கடன் நிலுவையிலுள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு, இச்சங்கங்களின் கடன் நிலுவை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்த பின்னர் 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். தற்போது வழங்கப்படும் அடிப்படையில் அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த ஊதிய உயர்வு மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள், குறைந்த பட்சம் 558 ரூபாயும், அதிக பட்சம் 5,661 ரூபாயும் ஊதிய உயர்வு பெறுவர். இதனால் 26 கோடியே 89 லட்சம் ரூபாய் அளவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ஆண்டுதோறும் கூடுதல் செலவினம் ஏற்படும்.

20 சதவீத ஊதிய உயர்வு
நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கீழ்க்காணும் ஊதிய உயர்வினை வழங்குமாறு நான் ஆணையிட்டுள்ளேன். இதன்படி, தொடர்ந்து 5 ஆண்டுகள் லாபம் ஈட்டி, 100 கோடி ரூபாய்க்கு மேல் வாணிபம் செய்யும் 27 நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு 1–1–2012 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக 2 தவணைகளில் வழங்கப்படும்.
தொடர்ந்து 5 ஆண்டுகள் லாபம் ஈட்டி, 50 கோடி ரூபாய் முதல் 100 கோடி ரூபாய் வரை வாணிபம் செய்யும் 37 நகர கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 15 சதவீதம் ஊதிய உயர்வு 1–1–2012 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக 2 தவணைகளில் வழங்கப்படும்.
நகர கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளில் லாபம் ஈட்டி, 50 கோடி ரூபாய்க்கு கீழ் வாணிபம் செய்யும் 42 வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு 1–1–2012 முதல் வழங்கப்படும். முன் நிலுவைத்தொகை ரொக்கமாக 2 தவணைகளில் வழங்கப்படும்.
சில ஆண்டுகள் லாபம் ஈட்டி, குவிந்த நட்டத்துடன் இயங்கும் 14 நகரக் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 5 சதவீதம் ஊதிய உயர்வு 1–1–2012 முதல் நிலுவைத் தொகையின்றி வழங்கப்படும்.
நகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கு 1–1–2012 அன்று நுகர்வோர் குறியீட்டு புள்ளிகள் 4,443 ஆக இருந்ததில், 2,836 புள்ளிகள் சம்பளத்துடன் இணைக்கப்படும். 1–1–2012 அன்று 60.15 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுவதுடன், ஒவ்வொரு காலாண்டில் 4 விலைப்புள்ளிகளுக்கு 0.15 சதவீதம் அகவிலைப்படி என்ற அளவிலான உயர்வு அனைத்து நகர கூட்டுறவு வங்கிப் பணியாளர்களுக்கும் வழங்கப்படும்.

1,701 பணியாளர்களுக்கு பயன்
இந்த ஊதிய உயர்வினால் 120 நகரக் கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் 1,701 பணியாளர்களுக்கு மாதம் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 419 ரூபாயும், அதிகபட்சம் 9,344 ரூபாயும் கூடுதலாகக் கிடைக்கும். இதன் காரணமாக நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 13 கோடியே 33 லட்சம் ரூபாய் செலவினம் ஏற்படும்.

அனைத்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்களிலும், கூட்டுறவு நகர வங்கிகளிலும் பணியாளர்களுக்கான இந்த ஊதிய உயர்வு, உரிய சட்ட நடைமுறைகளின்படி வழங்கப்படும். எனது தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைகள், கூட்டுறவுப் பணியை மேற்கொள்ளும் பணியாளர்களின் வாழ்வு மேலும் சிறக்க வழிவகுக்கும். இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.


Sent from my iPad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக