திங்கள், 24 பிப்ரவரி, 2014

கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், அரசு பள்ளிகளின் தரத்தில்எந்த மாறுதலும் ஏற்படவில்லை-தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் குஷால் சிங்

கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், அரசு பள்ளிகளின் தரத்தில்
எந்த மாறுதலும் ஏற்படவில்லை என தேசிய குழந்தைகள் உரிமைகள்
பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் குஷால் சிங் கூறினார்.
அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிக்கும் அமைப்பாக இந்த ஆணையம்செயல்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்க வந்த அவர் கூறியது:
கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளை வலுப்படுத்துவது இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம். பணக்காரக் குழந்தைகள் தனியார்பள்ளிகளுக்கும், ஏழைக் குழந்தைகள் அரசு பள்ளிகளுக்கும் செல்லும் நிலையை மாற்றி, அனைத்துக் குழந்தைகளுக்கும் அரசு பள்ளிகளில்கல்வி வழங்குவதே இந்தச் சட்டத்தின் நோக்கம். ஆனால், இந்த நோக்கம் நாடு முழுவதும் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. அரசு பள்ளிகளை வலுப்படுத்தும்
நடவடிக்கைகளை விரைந்து செய்ய வேண்டியுள்ளது. பொருளாதார, சமுதாய ஏற்றத்தாழ்வுகளை இதன் மூலமே களைய முடியும்.

தனியார் பங்கேற்புடன் மாதிரிப் பள்ளிகள்: தனியார் பங்கேற்புடன் கூடியமாதிரிப் பள்ளிகள் என்கிற திட்டத்தை நான் எதிர்க்கிறேன்.மாணவர்களுக்கு கல்வி வழங்குவது என்பது முழுமையாக அரசின்கடமையாகும். தனியாரின் கடமையல்ல. ஏனென்றால், அவர்கள் லாபம் ஈட்டும் நோக்கத்தில்தான் கல்வி நிறுவனங்களை தொடங்க முன்வருகின்றனர்.
மத்திய அரசின் கடமையல்ல: கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார்பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான கட்டணத்தைத் திருப்பி வழங்குவது மத்திய அரசின் கடமையல்ல. இந்தக் குழந்தைகள் தனியார் பள்ளிகளுக்குச் செல்லவில்லையென்றாலும்அரசு பள்ளிகளுக்குச் செல்வார்கள். எனவே, அவர்களுக்குச் செலவிடும் தொகையை மாநில அரசுதான் வழங்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது.
இந்தச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு மத்திய அரசுதான் கட்டணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என மாநில அரசுகள் கூறுகின்றன. இதில் இரு தரப்பிடமும் நியாயம் இருக்கிறது. இதை அவர்கள் விவாதித்து முடிவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு கட்டணத்தைப் பெற முடியவில்லை என்றாலும் தனியார் பள்ளிகள் இந்தப் பிரிவின் கீழ் குழந்தைகளைச் சேர்க்க வேண்டும். அது அவர்களின் சமூகக் கடமையும் கூட.
அதிக புகார்கள்: குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் தொடர்பாக இப்போது ஏராளமான புகார்கள் வருகின்றன. இதன் மூலம் இந்தக் குற்றங்கள் அதிகரித்திருப்பதாக பொருள் இல்லை. இப்போது இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழகத்திலிருந்தும் பாலியல் கொடுமைகள், மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமைகள்பாதுகாப்பு ஆணையத்துக்கு அதிகமான புகார்கள் வருகின்றன. பள்ளிகளில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லை என இரண்டு மாணவர்கள் கூட எங்கள் ஆணையத்துக்குப் புகார்களை அனுப்பியுள்ளனர் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக