திங்கள், 21 ஏப்ரல், 2014

ஐ.ஏ.எஸ். என்பது படிப்பல்ல; பதவியுமல்ல; அது ஒரு சேவை மட்டுமே!

ஐ.ஏ.எஸ். என்பது படிப்பல்ல; பதவியுமல்ல; அது ஒரு சேவை மட்டுமே!

ஐ.ஏ.எஸ். என்பது பட்டமும் அல்ல; படிப்பும் அல்ல, அது பணி. பணிபுரியும் போது மட்டுமே அது பொருந்தும். சில மாநிலங்களில் ஐ.ஏ.எஸ். என்பதைப் பெயருக்குப் பின்னால் அறவே போடுவது கிடையாது. சிலரோ அது அலங்காரமல்ல என்றே கருதுகிறார்கள்.

பணிபுரிவது என்றால் யோக்யதை யுடனும், தன்முனைப் பற்றும், நேர்மை யுடனும், வாய்மையுடனும் தன்னலங் கருதாமல் செயலாற்றுவது மட்டுமே. சுபாஷ் சந்திர போஸ் சிவில் சர்வீஸ் தேர்வில் தேறியபோது, 'அந்தப் பணி வேண்டாம்' என மறுத்தவர். அன்று வெள்ளையர்களின் கைக்கூலிகளாக மட்டுமே குடிமைப் பணிபுரிபவர்கள் இருந்ததால், அப்படிப்பட்ட முடிவை அவர் எடுக்க வேண்டியிருந்தது.

என்னுடைய குடிமைப் பணி முடிவுகள் வந்தபோது, நான் ஐ.ஏ.எஸ். என்பது தேர்வில் வெற்றி பெறுவது அல்ல என்பதை முழுமையாக உணர முடிந்தது. அப்பணிக்கு சிறிதும் தகுதியற் றவன் என்று என்னை யாரும் கருதி, அதனால் என்னால் அப்பணிக்கான மதிப்பு நீர்த்துப் போகக்கூடாது என்பதே எனக்கு மிகப் பெரிய அச்சமாக இருந்தது.

இன்றும் என்றும் இரண்டுவிதமான மதிப்பீடுகள் இருக்கின்றன. துறையில் இருப்பவர்களும் தொடர்புடையவர் களும் வைத்திருக்கும் மதிப்பீடு. அது வெளியே இருப்பவர்களுக் குப் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அழுத்தமான ஆழமான பங்களிப்புகளை அவற்றின் வீரியத்தையும் விளைவையும் அறிந்தவர்கள் மட்டுமே எடைபோட முடியும்.

இன்றும் குடிமைப் பணிகள் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த முடியும். மேலோட்டமாக அரசளவில் சில அறிவிப்புகள் எல்லாக் காலகட்டங் களிலும் வெளியானாலும் அவற்றை கொள்கைகளாக அறிவிப்பதற்கும் அறிவிக்கப்பட்டவற்றை நடைமுறை யாக்கிக் காட்டு வதற்கும் பல கூர்மை யான அரசு அதிகாரிகள் பின்னணியில் தீவிரமாகச் செயல்படுவதைப் பார்க்கலாம். நல்ல குடிமை அதிகாரி அரசின் சார்பாகவே இயங்கி பகிரங்கப்படுத்திக் கொள்ளாமல் ஊக்கியைப் போல் இருக்கிறார். அது ஒருவிதமான அடிப் படைக் கோட்பாடும் கூட. அவர் திட்டங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் போது அவர் மீது விழும் வெளிச்சத்தை மட்டுமே அனுமதிக்கிறார். நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்துவது மேலோட்ட அதிர்வுகளைவிடக் கடினமானது. கலைப்படம் எடுப்பது சண்டைப் படத்தை விட நுட்பமாக இருப்பதைப் போல.

நேர்மை என்பது அடிப்படையான கட்டுமானம். ஆனால் அது ஒன்று மட்டுமே முக்கியத் தகுதியாகாது. ஆனால் மற்ற எல்லா திறமைகள் இருந் தாலும் நேர்மையில்லாவிட்டால் அவற்றின் ஆற்றல் பயனற்றுப் போய் விடும்.

எனக்குத் தெரிந்து `கோப்புகள் என் மேசைக்கு வரட்டும்' என காத்திருப் பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். கோப்புகளைத் துரத்திப் பிடித்து மக்களுக்கு நல்லது பயக்கும் பணிகளில் விரைவாக ஆணை பிறப்பிக்கின்ற ஆற்றல் மிகுந்தவர்களையும் சந்தித்திருக்கிறேன். துறைத் தலைவருக்குப் பதிலாக முன்மொழிவுகளைத் தாங்களே தயாரித்து அவர்களிடம் கையொப்பம் வாங்கி கோப்பு களைத் துரித மாக ஓடவிடுபவர்களையும் பார்த்து வியந்திருக்கிறேன். எந்த முடிவையும் எடுத்து விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு ஏதேனும் ஒரு கொக்கி போடுபவர் களையும் கண்டிருக்கிறேன் எல்லா சந்தேகங்களையும் ஒரேமுறை எழுப்பாமல், ஒவ்வொருமுறை ஒவ்வொன்றை எழுப்புபவர்களையும், கோப்பில் முதல் பக்கம் முதல் இறுதிப் பக்கம் வரை ஒரு வரி விடாமல் படித்து முடித்தபின்பு அப்படியே கட்டி வைத்திருப்பவர் களையும் அறிவேன். அறை முழுவதும் கோப்புகளாகப் பரப்பிவைத்து அதிகப் பணி இருப்பதுபோல காட்டிக் கொள் பவர்களையும் சந்தித்துள்ளேன்.

நாம் ஒவ்வொரு நொடியும் ஊதியம் பெறுகிறோம். மாதச் சம்பளம் பெற வில்லை. நாம் தூங்குகிற நேரத்துக்கும் அரசு நமக்கு ஊதியமளிப்பது, விழித் திருக்கும்போது தூங்கக் கூடாது என்பதற் காகவே. பொதுப்பணத்தின் ஒவ்வொரு காசுக்கும் கணக்கு சொல்லவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்த நொடியை மக்களுக்காக எவ்வளவு பயனுள்ள வகையில் நாம் செலவழிக்கிறோம் என்பதே நம் ஊதியத்த நியாயப்படுத்தவல்லது.

அரசு இன்று கை நிறைய சம்பளம் அளிக்கிறது. குடிமைப் பணி அலுவலர்கள் அதிக அளவில் திறமை யுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதன் பொருட்டு தனியாருக்கு இணையான சில வசதிகளும் தரப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் சம்பளத்தைக் குறைத்த ஒரு கட்டத் தில், ஊதியத்தை உயர்த்திக் கொடுத்தது அரசு மட்டுமே. எனவே அரசு அலுவலர்களின் பொறுப்புணர்வு கூடிக்கொண்டே போக வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

முக்கோணத்தின் கூம்புப் பகுதியை நெருங்கும்போது, முக்கியத்துவம் மட்டுமல்ல; நேரமும் முக்கியம். குடிமைப் பணி அலுவலர் 10 நிமிடம் தாமதமாகச் செல்லும்போதோ, செயல்படும்போதோ அது கீழே உள்ளவர்களின் ஒட்டுமொத்த நேரமாக பத்தாயிரம் மணி நேரத் தாமதத்தை ஏற்படுத்திவிடலாம்.

இந்தியக் குடிமைப் பணி அலுவலர்கள் வெறும் ஊதியத்துக்காக மட்டும் இப்பணியில் சேருவதில்லை. அவற்றின் மூலம் மிகப் பெரிய மறுமலர்ச்சியை அவர்களுக்கான எல்லையில் செம்மையாகச் செய்யமுடியும் என்கிற நம்பிக்கையில் அவர்கள் மிகக் கடினமான தேர்வை எதிர்கொள்ள உந்துசக்தியாக இருக்கிறது. இப்போது இத்தேர்வில் நீதிநெறி, நேர்மை போன்றவற்றில் ஒரு தாள் பொது அறிவுப் பகுதியில் 250 மதிப்பெண்களுக்குச் சேர்க்கப் பட்டிருக்கிறது. தேர்வில் வெற்றி பெறு பவர்களுடைய மனநிலை களத்திலும் கட்டாயம் இருக்கும் என்பதற்கு எந்த எழுதப் படாத விதியும் இல்லை என்றாலும் இது வரவேற்கத்தக்க நிகழ்வு என்பதில் ஐயமில்லை.

சவால்களை சந்திக்கும் மனப்பான் மையும் மக்களுடன் மக்களாக இணைந்து பணியாற்றும் ஆர்வமும் உள்ளவர் கள் இப்பணிகளில் அமைதி யாக அவர்களுடைய பணிகளைச் செய்து வருகிறார்கள்.

`மக்களிடம் செல்
அவர்களைச் சந்தி
அவர்களோடு வாழ்
அவர்களை நேசி
அவர்களிடமிருந்து கற்றுக்கொள்
அவர்களுக்குத் தெரிந்ததில் இருந்து தொடங்கு
அவர்களிடம் இருப்பதிலிருந்து கட்டுமானம் செய்
இறுதியில் அவர்களே அப்பணியைச் செய்த திருப்தியை அளித்துவிட்டுத் திரும்பிவா'

- என லாவோட்ஸு சொன்னது இன்றும் குடிமைப் பணியாளர்களுக்கும் பொருந்தும்.

ஏனென்றால் ஐ.ஏ.எஸ். என்பது படிப்பல்ல; பதவியுமல்ல; அது ஒரு சேவை மட்டுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக