செவ்வாய், 17 ஜூன், 2014

இது உங்களுக்காக....‘மனம் இருந்தால் மார்க்கம் உண்டு’.. ‘விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும்’-வெறும் வார்த்தைகள் அல்ல; சத்தியங்கள்

            தளராத முயற்சியால் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று கலெக்டர் ஆகப் போகிறார் சென்னையைச் சேர்ந்த பார்வையற்ற மாணவி பெனோ ஷெபைன். இது அவரது தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த பரிசு.

ஐஏஎஸ் தேர்வு முடிவு கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வங்கி பெண் அதிகாரி பெனோ ஷெபைன் (24) வெற்றி பெற்று அனைவரின் பார்வையையும் ஈர்த்தார். பெனோ, பிறவியிலேயே பார்வையில்லாதவர் என்பதுதான் அந்த வியப்புக்கு காரணம்.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாரான அனுபவங்களையும் சந்தித்த சவால்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சில் மனஉறுதி, தன்னம்பிக்கை, சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் கலந்திருந்தது.

ஐஏஎஸ் பதவி என்றாலே எல்லோருக்குமே ஒருவிதமான ஈர்ப்பு இருக்கும். அதுபோல்தான் எனக்கும் இருந்தது. பள்ளியில் படிக்கும்போதே ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன். சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும் என்ற திட்டத்துடன் தான் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். அதன்பிறகு எம்.ஏ. முடித்தேன்.

கல்லூரியில் படிக்கும்போதே ஐஏஎஸ் தேர்வுக்கான தயாரிப்பும் தொடங்கிவிட்டது. ஒருவேளை ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெறா மல் போனால், மாற்று ஏற்பாடாக ஆசிரியர் பணியில் சேர்ந்துவிட வேண்டும் என்பது எனது திட்டம்.

ஐஏஎஸ் தேர்வு என்றால் தினமும் 15 மணி நேரம், 20 மணி நேரம் படிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அப்படி எல்லாம் கிடையாது. நான் தினமும் 2 அல்லது 3 மணி நேரம் படிப்பேன். எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல, படிக்க வேண்டிய பாடங்களை எப்படி புரிந்து படிக்கிறோம் என்பதுதான் முக்கியம்.

நாம் படித்ததை நன்கு யோசித்து அசை போடவேண்டும். ஒவ்வொரு தகவலையும் மற்றவற்றுடன் தொடர்புப்படுத்தி படிக்க வேண்டும். தேர்வு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு படிப்பில் மும்முரமாக இறங்கிவிடுவேன். அப்போது இரவு, பகல் என்று பார்க்கமாட்டேன்.

எனது வெற்றியில், என் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், பயிற்சி மையங்களைச் சேர்ந்தவர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பங்கு இருக்கிறது.

உதவிய அத்தைகள்

ஐஏஎஸ் தேர்வுக்கு பார்வை யற்றவர்கள் தயார் ஆவது நிச்சய மாக ஒரு சவால்தான். பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் சொல்வதை பிரெய்லி முறையில் விரைவாக குறிப்புகளை எடுத்துக்கொள்வேன். தேர்வுக்கான பாடப்புத்தகங்கள் பிரெய்லியில் இல்லை. வீட்டில் பாடப்புத்தகங்களை அம்மா படித்துக் காட்டுவார். அதை கவனமுடன் கேட்டு, முக்கியமானவற்றை குறிப்பு எடுத்துக் கொள்வேன். படிப்பில் அம்மா எனக்கும் உதவும் நேரங்களில் என் அத்தைகள் ஜெசிந்தா, லூர்துமேரி ஆகியோர்தான் வீட்டு வேலைகளைப் பார்த்துக் கொள்வர். எனக்கு உறுதுணையாக இருந்த அவர்களை மறக்க முடியாது. நன்றியுடனும் தன்னம் பிக்கையுடன் சொன்னார் பெனோ ஷெபைன்.

பார்வையில்லாத குறைபாடு, உங்கள் பணிக்கு இடையூறாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா என்று பெனோவிடம் கேட்டபோது, "பார்வையின்மையை ஏன் ஒரு குறைபாடாகவோ அல்லது இடையூறாகவோ நினைக்க வேண்டும்?

அதையே ஒரு சவாலாக ஏன் கருதக்கூடாது? இப்போது தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்து விட்டது. பார்வையற்றவர்களுக்கு உதவுவதற்காக நிறைய சாப்ட் வேர்கள் வந்துள்ளன. பைல்களை ஸ்கேனிங் செய்து ஆடியோவாக கேட்கக்கூடிய வசதி இருக்கிறது" என்றார்.

தனக்கு பார்வையில்லையே என எப்போதாவது பெனோ கவலைப்படுவாரா என்று அவரது அத்தை நிர்மலா பாலசாமியிடம் கேட்டபோது, "ஒருபோதும் அவள் அப்படி கவலைப்பட்டதே இல்லை. ஐஏஎஸ் தேர்வில் முதல் தடவை தோல்வி அடைந்தபோதுதான் லேசாக வருத்தப்பட்டாள். பின்னர் மனதை திடப்படுத்திக்கொண்டு மீண்டும் 2-வது தடவையாக ஐஏஎஸ் தேர்வுக்கு முயன்று வெற்றி பெற்றிருக்கிறாள்" என்றார்.

முதல் தோல்வி

பெனோ முதல்முறையாக 2012-ல் ஐஏஎஸ் தேர்வெழுதிய போது முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், முதன்மை தேர்வில் வெற்றிபெற முடியாமல் போனது. முதல் வகுப்பில் இருந்து தோல்வியை சந்திக்காதவர், ஐஏஎஸ் தேர்வில்

முதல்முறையாக தோல்வி அடைந் ததும் துவண்டு விடவில்லை.

கடந்த ஆண்டு மீண்டும் 2-வது முறையாக முயன்றார். அகில இந்திய அளவில் 343-வது ரேங்க் பெற்று தேர்ச்சி அடைந்திருக்கிறார். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர், தற்போது திருவள்ளூரில் வங்கி அதிகாரியாக பயிற்சி பெற்று வருகிறார்.

சிவில் சர்வீசஸ் தேர்வில், பார்வையற்றவர்கள் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அந்த வகையில், அவருக்கு ஐஏஎஸ்

பணி கிடைப்பது உறுதி. ஒருவேளை அந்த வாய்ப்பு இல்லாவிட்டால் அவர் தனது 2-வது விருப்பப் பணியாக குறிப்பிட்டிருக்கும் ஐஎப்எஸ் (இந்திய வெளிநாட்டு பணி) கண்டிப்பாக கிடைக்கும். "ஐஏஎஸ் கிடைக்காமல் ஐஎப்எஸ் கிடைத்தாலும் அதில் சேர்ந்து விடுவேன்" என்கிறார் பெனோ.

10-ம் வகுப்பில் சாதனை

சென்னை அண்ணா மேம்பாலம் அருகேயுள்ள சிறுமலர் பார்வை யற்றோர் பள்ளியில்தான் தனது பள்ளிப் படிப்பை முடித்தார் பெனோ. 10-ம் வகுப்பு தேர்வில் 464 மதிப்பெண் பெற்று, பார்வையற்ற மாணவர் பிரிவில் மாநிலத்தில் முதலிடத்தைப் பிடித்தவர் பெனோ என்பது குறிப்பிடத்தக்கது. பிளஸ்-2 தேர்வில் 1,075 மதிப்பெண் வாங்கி மாநில அளவில் சிறப்பிடம் பெற்றார். தற்போது கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக பி.எச்டி., படித்து வருகிறார். இவரது அண்ணன் புருனோ சேவியர், கனடாவில் சாப்ட்வேர் இன்ஜினீயராக பணியாற்றுகிறார். தந்தை ஆன்டனி சார்லஸ், தெற்கு ரயில்வேயில் கம்ப்யூட்டர் பிரிவில் டெக்னீஷி யனாக உள்ளார்.

'மனம் இருந்தால் மார்க்கம் உண்டு'.. 'விடா முயற்சி விஸ்வரூப வெற்றியைத் தரும்'

என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல; சத்தியங்கள். அதைச் செயல்படுத்த உழைக்க வேண்டும். சாதிக்க வேண்டும் என்ற கனவு காண வேண்டும். அந்தக் கனவு நனவாக வேண்டுமானால், தன்னம்பிக்கையுடன் விடா முயற்சி அவசியம். அதுதான் தடைகளைத் தகர்த்தெறியும் ஆயுதம். அனைத்து மாணவர்களுக்கும் பெனோ கூறும் அறிவுரை இதுதான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக