கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 21 பேரில் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி நிறுவனர் பழனிச்சாமி உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகள் என தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதேவேளையில், இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி முகமது அலி, இந்த வழக்கில் இருந்து 8 அதிகாரிகள், 3 ஆசிரியைகள் உள்ளிட்ட 11 பேரை விடுவிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்த வழக்கின் குற்றவாளிகளுக்கான தண்டனை விபரம் அரை மணி நேரத்திற்குப் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

பத்து வருடங்களுக்கு முன்னர் 94 குழந்தைகள் இறந்த கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில், நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பை எதிர்பார்த்து, தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்ற வளாகத்தில் காலை முதலே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் குவிந்திருந்தனர்.

இந்த வழக்கில் இருந்து 11 பேர் விடுவிக்கப்பட்டதை அறிந்த பெற்றோர், மிகுந்த வேதனையையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தினர். | படிக்க - கும்பகோணம் தீ விபத்து வழக்கின் தீர்ப்பு வேதனையளிக்கிறது: பெற்றோர் குமுறல் |

ஜூலை 16, 2004-ல் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி சத்துணவு சமையலறையில் தீப்பிடித்து, பள்ளியின் முதல் மாடிக்குப் பரவியதில், அங்கு கூரை வேயப்பட்ட நீண்ட வகுப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 200 குழந்தைகளில் 94 பேர் உடல் கருகி இறந்தனர். 18 குழந்தைகள் கடும் தீக் காயமடைந்தனர். உலகையே உலுக்கிய இந்த கோர விபத்துதான் பள்ளிகளின் பாதுகாப்பு நிலை பற்றிய பல கேள்விகளை எழுப்பியது.

இங்கு, ஒரே சிறிய கட்டிடத்தில் 3 பள்ளிகள் இயங்கி வந்துள்ளன. விபத்துக்குப் பிந்தைய கடந்த 10 ஆண்டுகளில் இந்த வழக்கு ஒரு நீதிமன்றத்திலிருந்து மற்றொரு நீதிமன்றத்துக்கு மாறி மாறிச் சென்று, எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.

குற்றம் சாட்டப்பட்டிருந்த 24 பேரில், அரசு அதிகாரிகள் 3 பேர் தமிழக அரசின் பரிந்துரையால் 2010-ல் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கின் 10-வது எதிரியான மாவட்டக் கல்வி அலுவலர் பாலகிருஷ்ணன் தன்னையும் விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன் றத்தில் மனு செய்தபோதுதான், இந்த வழக்கு இன்னும் முடிவடை யாமல் உள்ளது உச்ச நீதி மன்றத்தின் கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி 2012, செப்.12 முதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எதிரிகள் 21 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்து, 15 நாட்களுக்குப் பின்னர் விசாரணை தொடங்கப்பட்டு கடந்த ஒன்றரை ஆண்டு களுக்கும் மேலாக அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்த மற்ற அனைத்து நாட்களும் விசாரணை நடைபெற்றது.

ஒவ்வொரு நாளும் சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அப்போது அரசு வழக்கறிஞர் நூற்றுக்கணக்கான ஆவணங்கள் குறித்தும், சாட்சிகளிடமும் விசாரணை செய்தார்.

501 சாட்சியங்கள்

இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் 15,000 பக்கங்களும், நீதிமன்ற வழக்கு விசாரணையில் 5,000 பக்கங் களும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

மொத்தமுள்ள 501 சாட்சியங்களில், இறந்த குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உயிர் பிழைத்த குழந்தைகள் உள்ளிட்ட முக்கியமான 230 சாட்சியங்களிடம் நடைபெற்ற நீண்ட விசாரணைகள் மற்றும் ஆய்வுக்குப் பின்னட் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

10 பேர் குற்றவாளிகள்:

ஸ்ரீகிருஷ்ணா பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் துரைராஜ், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பாலாஜி, பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமியின் மனைவியும் தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி, பொறியாளர் ஜெயச்சந்திரன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலக உதவியாளர் சிவபிரகாசம், கண்காணிப்பாளர் தாண்டவன் ஆகிய 10 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.

விடுதலையானோர் விபரம்:

தஞ்சை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பி.பழனிச்சாமி, அப்போதைய தஞ்சை மாவட்ட கல்வி அலுவலர் நாராயணசாமி, நகரமைப்பு அலுவலர் முருகன், வகுப்பு ஆசிரியைகள் தேவி, மகாலெட்சுமி, அந்தோணியம்மாள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன். கூடுதல் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாதவன் பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையர் சத்தியமூர்த்தி ஆகிய 11 பேர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.