செவ்வாய், 23 செப்டம்பர், 2014

ஆட்சியாளர்கள் எப்போதுமே அப்படித்தான்!

காமராஜர் போன்ற வெகு சில ஆட்சியாளர்களை மட்டுமே மக்கள் எளிதில் சந்திக்க முடிந்தது.




தெக்கன் திருவிதாங்கூர் என்னும் இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் கேரளத்திலிருந்து பிரிந்து தமிழகத்துடன் இணைந்த புதிது. காமராஜர்தான் அப்போது தமிழக முதலமைச்சர். புதிய மாவட்டத்தின் மக்களிடம் நேரடியாகச் சென்று குறைகள் கேட்டார். காமராஜரை யார் வேண்டுமானாலும் நேரடியாகச் சந்திக்கலாம் என்ற செய்திகூட நாளிதழில் வந்தது. திருவிதாங்கூர் அரசருக்குக் கீழே பணியாற்றிய அதிகாரிகளுக்கு இது புதிய அனுபவம்.

காமராஜர் கரடுமுரடான சாலைகளில் செல்லத் தோதான வருவாய்த் துறை ஜீப்பில் வந்தார். முக்கிய சாலையில் ஜீப்பை நிறுத்திவிட்டு நடந்துவந்த சமயம்தான் எங்கள் ஆரம்பப் பள்ளிக்கூடத்தைப் பார்த்தார். 19-ம் நூற்றாண்டுக் கட்டிடம். ஆசிரியர்கள் முன்னே நிற்க, மாணவர்கள் கூடி நின்றோம். திட்டமிடப்படாத வரவேற்பு. யாரும் தடுக்கவில்லை. போலீஸ் கெடுபிடி இல்லை.

எங்களைப் பார்த்ததும் முதலமைச்சர் நின்றார். அவருடன் மிகக் குறைவான போலீஸார்; இரண்டோ மூன்றோ அதிகாரிகள்; அமைச்சர் கக்கனும் மாவட்ட ஆட்சியர் அம்பா சங்கரும் இருந்தனர். யாரும் யாரையும் விலக்கவில்லை. போலீஸ் அதிகாரிகூட அவருக்குப் பாதுகாப்பாக முன்னே வரவில்லை. மூத்த ஆசிரியர் கதர் நூல் மாலையைக் காமராஜர் கழுத்தில் போட்டார். அவர் அதற்கு வாகாகத் தலையைத் தாழ்த்திக்கொடுத்தார். ஆஜானு பாகுவான உருவம்; முழங்கால் வரை எட்டும் தொளதொள சட்டை; சாதாரண செருப்பு; பாதங்கள் தெரியும்படி கட்டப்பட்ட வேட்டி.

நல்லாப் படிக்கணும்

காமராஜர் எங்கள் அருகில் வந்தார். சுற்றிலும் பார்த்தார். நாங்கள் இரண்டு கைகளைக் கூப்பியபடி நின்றோம். கூட்டத்தில் கிழிந்த சட்டையுடன் கூடிய மாணவர்கள் நாலைந்து பேர் இருந்தனர். காமராஜர் ஒருவன் தலையைத் தடவிவிட்டார். "என்ன படிக்கிறே" என்றார். அவன் "மூணாப்பு" என்றான்.

எங்களைப் பார்த்துப் பொதுவாகச் சொன்னார்: "நல்லாப் படிக்கணும்; அப்பா, அம்மா சொன்னா கேக்கணும்; நல்ல பேரு வாங்கணும்; உழைச்சு முன்னுக்கு வரணும்." ஒரு ஆசிரியர், காமராஜர் முன்னே தயங்கித் தயங்கி வந்து நின்றார். "என்ன விஷயம்?" என்று காமராஜர் கேட்டார். "இப்போ 30 குழந்தைகளுக்கு உச்ச நேரம் (நண்பகல்) கஞ்சி ஊத்துறோம். அது பத்தல்ல. 50 பேருக்குக் கஞ்சி ஊத்த திருமனசு தயவு பண்ணணும்" என்றார். பழக்கதோஷம்; ஆசிரியர் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியிலும் இருந்தவர்; திவான் பேஷ்காரிடம் விண்ணப்பம் செய்யும் பாணியில் பேசினார். காம ராஜருக்கு அவரது பேச்சு முழுவதும் புரியவில்லை. என்றாலும் ஆசிரியருடன் பேசினார்; பக்கத்தில் நின்ற அதிகாரிகளுடன் பேசினார்.

இந்த நிகழ்ச்சி நடந்து 30 ஆண்டுகள் கழிந்து வகுப்பில் என் மாணவர்களிடம் அதைப் பற்றிச் சொன்னேன். மாணவர்கள் நம்பவில்லை; மாணவிகள் நமட்டுச் சிரிப்புடன் பார்த்தார்கள். ஒரு மாணவி "கேட்க நல்லா இருக்கு சார். உண்மையா நடந்ததா?" என்று கேட்டாள். இதுபோன்ற செய்திகள் இன்றைய தலைமுறையினருக்குக் கற்பனைதான்!

ராமாயண காலம்

எல்லாக் காலத்திலும் ஆட்சியாளர்கள் எப்படி இருந்தார்கள். குடிமக்கள் நெருங்கும்படியான சூழ்நிலையில் இருந்தார்களா? இதற்கெல்லாம் சரியான பதிவுகள் இல்லை. ராமாயண ராமனைக் குடிமக்கள் காண அதிகாரிகள் தடையாய் இருந் தார்கள் என்று ஒரு நாட்டார் கதை உண்டு. இந்தக் கதை, பார்வதிக்குப் பரமசிவன் சொல்வது மாதிரி அமைந்தது.

பரமசிவன் சொன்ன கதை

"ராமன், ராவணாதிகளை ஒழித்துவிட்டான்; பட்டாபிஷேகம் நடந்துவிட்டது. இப்போது எப்படி இருக்கிறான்?" என்று பரமசிவனிடம் கேட்டார் பார்வதி. பரமசிவன் கண்களை மூடிக்கொண்டார். கொஞ்ச நேரம் கழித்துப் பேசினார். "ராமன் ராமனாக இருக்கிறான். அதிகாரிகள்தான் அவனிடம் குடிமக்களை நெருங்கவிடாமல் தடுக்கிறார்கள். லட்சுமணன் இதைக் கண்டும் காணாமல் இருக்கிறான்" என்று சொல்லிவிட்டு, அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியையும் கூறினார்.

அவரைப் போய்ப் பாரு!

ஒரு சம்சாரி தனது விளைச்சல் நிலத்தில் மேய்ந்த மாட்டை விரட்டினார். அது அந்த வழியாக வந்த வயதான பெண்ணின் மேல் போய் மோத, அவளுக்குக் காயம் ஏற்பட்டது. இதற்காக அரசனிடம் முறையிடப் போனாள். "ராமனை நேரில் சந்திக்க முடியாது, லட்சுமணனிடம் சொல்லு" என்றான் ஒரு காவலன். அவள் லட்சுமணனைக் கண்டு நியாயம் கேட்டாள். லட்சுமணன் "பரந்த சாம்ராஜ்யத்தை ஆட்சிசெய்பவன் இதைக் கவனிக்க முடியுமா? உன் ஊர்த் தலைவனிடம் போய்ச் சொல்" என்றான்.

வசிட்டர் சொன்ன கதை

இந்த நிகழ்ச்சியை வசிட்டர் அறிந்தார். லட்சுமணனை அழைத்தார். அவனது மூதாதையரான ரூபகன் என்ற அரசனின் கதையைச் சொன்னார். ரூபகன் நீதி தவறாமல் ஆட்சி செய்தான். அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது: நண்பர்கள் புடைசூழ எப்போதும் சூது விளையாடுவான். அதனால், குடிமக்களைச் சந்திப்பதைத் தவிர்த்தான். ஒருமுறை ரூபகன் தன் தந்தையின் திதியை நடத்தினான். அன்று அரண்மனைத் தொழுவத்திலிருந்து நல்ல கொழுத்த பசு ஒன்றைப் பிராமணர் ஒருவருக்குத் தானம் செய்தான்.

அந்தப் பசு அரசரின் தொழுவத்தில் பிறந்து வளர்ந்தது. அதற்கு வேறு இடம் பிடிக்கவில்லை. பிராமணர் வீட்டில் கயிற்றை அறுத்துக்கொண்டு அரண்மனைத் தொழுவத்துக்குச் வந்துவிட்டது. இதை அறியாத வேலைக்காரர்களும் பசுவைத் தொழுவத்தில் கட்டி வைத்தார்கள். யாரோ தன் பசுவைத் திருடிவிட்டார்கள் என்று நினைத்து, பிராமணர் அரசனிடம் முறையிடப் போனார்; முடிய வில்லை. அரசனின் தம்பியைச் சந்தித்துத் தன் பசு திருடுபோனதைச் சொன்னார். அவன், காவலரை அனுப்பிப் பசுவைத் தேடச் சொல்கிறேன் என்றான்.

சில நாட்கள் கழித்து ரூபகனின் அம்மாவின் திதி. ஏற்கெனவே தானம் கொடுக்கப்பட்டுத் திரும்பி வந்த பசு என்று தெரியாமல், அரண்மனைப் பசுவை அரசன் இன்னொரு பிராமணருக்குத் தானம் கொடுத்தான். பிராமணர் அதை வீட்டுக்குக் கொண்டுசெல்லும்போது ஏற்கெனவே பசுவை இழந்த பிராமணர் தற்செயலாக அங்கே வந்தார். பசு தன்னுடையது என்று கண்டுகொண்டார். புதிய பிராமணரைப் பிடித்து, "திருடனே! வா அரசனிடம்" என்றார். அவரோ "அரசனின் அம்மாவின் திதியில் இந்தப் பசு எனக்குத் தானமாகக் கிடைத்தது. என்னையா திருடன் எனப் பழித்தாய்! உன்னைச் சும்மா விட மாட்டேன்" என்றார்.

காத்திருந்து காத்திருந்து...

சண்டை பெரிதான பிறகு, அரசனை நாடிச் சென்றனர். அரசனைச் சந்திக்க வேண்டும் என்று காவலனிடம் சொன்னார்கள். காவலன் அவர்களைக் காத்திருக்கச் சொன்னான். அவர்கள் காத்திருந்தனர். வேறு சிலரும் அரசனைச் சந்திக்கக் காத்திருந்தனர். அரசன் வரவில்லை. அடுத்த நாளும் சென்றார்கள்; காத்திருந்தனர். இப்படியே பல நாட்கள். பிராமணர்கள் இருவரும் அலுத்துப்போனார்கள். அவர்கள் தங்களுக்குள் சமாதானம் ஆனார்கள். இரண்டாவதாக தானம் பெற்ற பிராமணரே பசுவை வைத்துக்கொள்ளலாம் என்று முடிவுக்கு வந்தனர்.

பிராமணர்களின் கோபம் அரசன் பக்கம் திரும்பியது. அரண்மனையைப் பார்த்துப் பிராமணர் இருவரும் "ரூபகனே - குடிமக்களை அலைக்கழிக்கும் நீ அரசனே அல்ல; நீ ஓணானாகச் சிம்மாசனத்தில் அமர்வாய். இது எங்கள் சாபம்" என்றனர். அரசன் உடனே ஓணானாகிவிட்டான். இதை அறியாத காவலர்கள் சிம்மாசனத்திலிருந்து ஓணானை விரட்டிவிட்டார்கள்.

இப்படியாகக் கதைக்குள் கதை என்று சொல்லப்பட்ட இந்தக் கதைகள் சொல்லும் உண்மை இதுதான்: ஆட்சியாளர்கள் எப்போதும் ஒரே மாதிரிதான். இதில், காமராஜர் போன்றவர்கள் அரிதான விதிவிலக்கே!

- அ.கா. பெருமாள், நாட்டுப்புறவியலாளர், 
'சடங்கில் கரைந்த கலைகள்', 'சிவாலய ஓட்டம்' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். 
தொடர்புக்கு: perumalfolk@yahoo.com

 வாசகர் கருத்து
Type in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். 
1.  நெறியாளர் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும்.
2.  இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. 
3.  கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நெறியாளருக்கு முழு உரிமை உண்டு.
4.  தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
5.  இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
6.  தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக