வெள்ளி, 10 அக்டோபர், 2014

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 7% உயர்த்திட அரசு முடிவு



தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 7% உயர்த்திட அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்களையும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கியதோடு, மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கும் அவ்வப்போது தமிழக அரசு வழங்கி வந்துள்ளது. 

அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 1.7.2014 முதல் அவர்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் ஏழு விழுக்காடு, அதாவது 100 விழுக்காடிலிருந்து 107 விழுக்காடாக உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளது போல், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும், அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் 7 விழுக்காடு உயர்த்திட முடிவு செய்துள்ளது. 

இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர், எழுத்தர், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும். 


இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவார்கள். இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.7.2014 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். 

இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,558 கோடியே 97 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்" இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக