வியாழன், 27 நவம்பர், 2014

தேவாரத் திருமுறைகள்


 தேவாரத் திருமுறைகள்

    சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் திருஞானசம்பந்தர்,
திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய பாடல்கள் முதல்
ஏழு திருமுறைகளாகத் தேவாரம் என்ற பெயரில் தொகுக்கப்
பெற்றன. மூவர் பாடல்களைத் தேவாரம் என வழங்கும் வழக்கம்
நம்பியாண்டார் நம்பி காலத்திற்கு முன்னமேயே இருந்திருக்கிறது.
தேவாரம் என்ற சொல்லுக்குப் பல்வேறான பொருள்களை
அறிஞர்கள் தருவர். தே + ரம் (தே = தெய்வம்,
ஆரம் = மாலை) எனப்பிரித்து இறைவனுக்கு மாலை ஆகியது
எனச் சிலர் பொருள் கூறுவர். தே + வாரம் (வாரம் = அன்பு 
எனப் பிரித்து இறைவனிடத்தில் அன்பை விளைவிப்பது எனவும் 
பொருள் கூறுவர். தமிழகத்தில் கிடைக்கப் பெற்றுள்ள 11ஆம்
நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் தேவாரம் என்ற சொல் இடம்
பெற்றுள்ளது. கல்வெட்டு்களில் அச்சொல் வழிபாடு என்ற
பொருளில் இடம் பெற்றுள்ளது. எனவே தேவாரம் என்ற
சொல்லுக்கு இறைவன் முன் பாடப்பெறுகின்ற பாடல்கள் என்ற
அடிப்படையில் பல்வேறு நிலையில் பொருள் கூறப்படுகிறது
எனலாம்.

    இத்தகைய தேவாரப் பாடல்களில் முதல் மூன்று
திருமுறைகளாகத் திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள்
தொகுக்கப் பெற்றன. திருநாவுக்கரசர் பாடிய தேவாரப் பாடல்கள்
அடுத்த மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றன. அடுத்து
ஏழாம் திருமுறையாகச் சுந்தரர் பாடிய தேவாரப் பாடல்கள்
தொகுக்கப்     பெற்றன. மூவராலும் தேவாரப் பாடல்கள்
ஆயிரக்கணக்கில் பாடப் பெற்றன. எனவேதான் திருஞானசம்பந்தர்
பாடியவை பதினாறு ஆயிரம் எனவும், திருநாவுக்கரசர் பாடியவை
நாற்பத்தொன்பதாயிரம் எனவும், சுந்தரர் பாடியவை முப்பத்து
எட்டாயிரம் எனவும் தேவாரப் பதிகங்கள் திருமுறை கண்ட
புராணத்தில் குறிக்கப் பெறுகின்றன. ஆனால் அப்பதிகங்கள்
அனைத்தும் கிடைக்கப் பெறவில்லை. கிடைத்த திருஞானசம்பந்தர்
பதிகங்கள் - 384, திருநாவுக்கரசர் பதிகங்கள் - 310, சுந்தரர் 
பதிகங்கள் - 100 என்பனவாகும். ஒவ்வொரு பதிகத்திலும் பத்து
அல்லது பதினோரு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. மூவர் பாடிய
பிற பாடல்கள் தமிழ் மக்களின் விழிப்பின்மையால் செல்லரித்துப் 
போய்விட்டன என்பது வருத்தத்திற்கு உரியது. பண்டைக்காலத்தில் 
பாடல்கள் பனைஓலை ஏடுகளால் எழுதப் பெற்றமையால் 
கரையானுக்கு எளிதாக உணவாயிற்று. கி.பி 11ஆம் நூற்றாண்டில் 
வாழ்ந்த    சோழர்    படைத்தலைவன்     மணவிற்கூத்தன் 
காளிங்கராயன்
 என்பவன் தேவாரப் பதிகங்களைச் செப்பேடுகளில் 
எழுதுவித்தான். இச்செய்தி கல்வெட்டுகளில் காணப்பெறுகிறது.

    நம்பியாண்டார் நம்பியின் காலத்திற்குப் பின் தேவாரத்
திருமுறைகள் போற்றப் பெற்றுச் செப்பேட்டிலும் கல்லிலும்
எழுதிப் பாதுகாக்கப் பெற்றன. தேவாரப் பாடல்கள் இறைவனுக்குப்
பக்கத்தில் வைத்துப் பூசனையும் செய்யப்பெற்றன. சோழமன்னர்கள்
காலத்தில் தேவாரப் பாடல்கள் கோயிலில் பண்ணோடு பாடுவதற்கு
நிவந்தங்களும் (அறக்கொடைகள்)     அளிக்கப்     பெற்றன.
பண்ணோடும் இசையோடும் திருக்கோயில்களில் நாள்தோறும்
பாடப்பெற்று, பாடுவோருக்கு ஊதியமும் வழங்கப் பெற்றன.
இத்தகைய செய்திகள் சோழ மன்னர்கள் காலக் கல்வெட்டுகளால்
தெரிய வருகின்றன. இன்றைக்கும் தேவாரத் திருமுறைகள் சைவத்
திருக்கோயில்களிலும் சைவசமயத்தார் இல்லங்களிலும் பண்ணோடு
இசைக்கப் பெற்று வருகின்றன. தேவாரத் திருமுறைகள்
பண்முறை, திருக்கோயில்கள் அமைந்துள்ள திருத்தலங்களின்
வரிசை முறை என்னும் இருவகையில் அச்சேற்றிப் பதிப்பிக்கப்
பெற்று வருகின்றன.

3.1.1 திருஞானசம்பந்தர் அருளியவை

    தேவாரம் பாடிய ஆசிரியர்களில் திருஞானசம்பந்தரும்
திருநாவுக்கரசரும் கி.பி. 7ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்
ஒரே     காலக் கட்டத்தில் வாழ்ந்தவர்கள். இவ்விருவர்
வரலாற்றையும் சேக்கிழார் தன்னுடைய பெரியபுராணத்தில்
விரிவாகப்     பாடியருளியுள்ளார்.     பெரியபுராணத்தில்
திருஞானசம்பந்தர் வரலாறே அதிகமான பாடல்களைப் பெற்றது.
எனவேதான் பெரியபுராணத்தைப் "பிள்ளைபாதி புராணம் பாதி"
என்று கூறும் வழக்கம் ஏற்பட்டது. இவர்களுடைய வரலாற்றைப்
பெரியபுராணம் கொண்டு விரிவாக அறியலாம். வரலாற்றில் சில
குறிப்புகள் மட்டுமே இப்பாடத்தில் தரப்பெற்றுள்ளன.

    திருஞானசம்பந்தர் சீர்காழியில் அந்தணர் குலத்தில்
பிறந்தவர். தந்தை பெயர் சிவபாத இருதயர், தாயார் பகவதியார்.
அவர் குழந்தைப் பருவத்தில் பிள்ளையார் என அழைக்கப்
பெற்றார். பிள்ளையார் தந்தையோடு சீர்காழித் திருக்கோயிலில்
உள்ள திருக்குளத்திற்கு நீராடச் செல்கின்றார். தந்தை குளத்தில்
விதிப்படி மூழ்கிச் சிறிதுநேரம் மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்த
பொழுது தந்தையைக் காணாது குளத்தின் கரையில் இருந்த
பிள்ளையார் 'அப்பா' என்று ஓலமிட்டு அழுதார். அவரின்
அழுகுரல் கேட்ட சிவபெருமான் உமாதேவியின் மூலம் அவருக்கு
ஞானப்பால் ஊட்டினார். நீராடிவிட்டுத் திரும்பி வந்த தந்தை பால்
உண்ட மகனைக் கண்டார். மகனிடம் 'பால் ஊட்டியது யார்?'
என்று கேட்டார். தந்தையின் கேள்விக்குச் சீர்காழியில்
எழுந்தருளியுள்ள தோணியப்பர்தான் பாலூட்டினார் என்ற
பொருள் அமைந்த தோடுடைய செவியன் என்று தொடங்கும்
தேவாரப் பதிகத்தைப் பாடி அருளினார். இவ்வாறு ஞானப்பால்
உண்ட நிகழ்ச்சியால் ஞானசம்பந்தர் ஆனார். அந்தநாள் முதல்
திருஞானசம்பந்தர் இறைவனையே போற்றி வணங்கிப் பாடுகின்ற
பணியை மேற்கொண்டார். திருத்தலங்கள் (ஊர்கள்) தோறும்
யாத்திரை     (பயணம்) செய்து வழிபட்டார். வழிபடும்
பொழுதெல்லாம் பாடல்கள் பாடினார். சில திருத்தலங்களில்
தெய்வீக அருளிச் செயல்பாடுகளையும் செய்வித்தார். அவற்றில்
குறிப்பிடத்தக்கவை :

  • திருக்கோலக்காவில் பொற்றாளம் (பொன்தாளம்) பெற்றது.

  • திருநனிபள்ளியில் பாலை (மணல்) நிலத்தை நெய்தல் நிலமாக
    மாற்றியது.

  • நெல்வாயில் அறத்துறையில் முத்துச்சிவிகை, குடை பெற்றது.

  • திருப்பாச்சிலாச்சிரமத்தில் சிற்றரசன் கொல்லிமழவன்
    மகளுக்கு ஏற்பட்டிருந்த முயலக நோயை நீ்க்கியது.

  • திருவாவடுதுறையில் உலவாக்கிழி (பணமுடிப்பு) பெற்றுத்
    தந்தைக்குக் கொடுத்தது.

  • திருமருகலில் பாம்புகடித்து நஞ்சு (விடம்) தீண்டப்பெற்ற
    வணிகனின் விடத்தைப் போக்கியது.

  • திருவீழிமிழலையில் பொன்காசு பெற்றது.

  • திருமறைக் காட்டில் திருக்கோயில் கதவைத் திறந்தது.

  • மதுரையில் சமணரை வாதில் வென்றது.

  • பாண்டியனின் வெப்புநோயை நீக்கியது.

  • திருத்தெளிச்சேரியில் புத்தரை வாதில் வென்றது.

  • சென்னை மயிலாப்பூரில் எலும்பைப் பெண்ணாக்கியது.

  • திருநல்லூரில் திருமண நாளில் பெருஞ்சோதி (நெருப்பில்)யில்
    கலந்தது.

    இவ்வாறு மண்ணுலகில் 16 ஆண்டுக்காலம் வாழ்ந்து
தேவாரப் பதிகங்கள் தந்து திருவருட் செயல்களைச் செய்து
திருஞானசம்பந்தர் பெருமை பெற்றார்.

    திருஞானசம்பந்தர் பாடி அருளிக் கிடைத்த தேவாரப்
பதிகங்கள் பண் முறையில் மூன்று திருமுறைகளாகத் தொகுக்கப்
பெற்றுள்ளன. முதல் திருமுறையில் நட்டபாடை, தக்கராகம்,
பழந்தக்கராகம், தக்கேசி, குறிஞ்சி, வியாழக்குறிஞ்சி, மேகராகக்
குறிஞ்சி என்னும் 7 பண்களுக்குரிய 135 திருப்பதிகங்களும்,
யாழ்முரி என்ற திருப்பதிகமும் சேர்த்து 136 திருப்பதிகங்கள்
தொகுக்கப் பெற்றன.

    இரண்டாம் திருமுறையில் இந்தளம், சீகாமரம், காந்தாரம்,
பியந்தைக் காந்தாரம், நட்டராகம், செவ்வழி என்னும் ஆறு
பண்களில் அடங்கிய 122 திருப்பதிகங்கள் தொகுக்கப் பெற்றுள்ளன.

    மூன்றாம் திருமுறையில் காந்தார பஞ்சமம், கொல்லி,
கொல்லிக் கவ்வாணம், கௌசிகம், பஞ்சமம், சாதாரி,
பழம்பஞ்சுரம், புறநீர்மை, அந்தாளிக்குறிஞ்சி என்னும் 9
பண்களுக்குரிய 125 பதிகங்கள் தொகுக்கப் பெற்றுள்ளன.

    திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகத்தில் பதிகந்தோறும்
11ஆம் பாடல் திருக்கடைக்காப்பு என்று கூறப் பெறும். அந்தப்
பாடல் அந்தப் பதிகத்தைப் பாடுவதால் வரும் பயனைக்
குறிப்பதாகும். அதுபோல ஒவ்வொரு பதிகத்திலும் எட்டாம்
பாடல் இராவணன் கயிலைமலையைத் தூக்க முயன்று
துன்பப்பட்டதைக் குறிக்கும். ஒன்பதாம் பாடல் பிரமனும்,
திருமாலும் அடி, முடி தேடிக் காணமுடியாத சிவனின் பெருமை
கூறும். பத்தாம் பாடல் சைவ, பௌத்த துறவிகளின் போலி
வாழ்க்கையை எள்ளி நகையாடும். பாடல்கள் தோறும் அவ்வத்
திருத்தலங்களின் இயற்கை வனப்பும், அத்திருத்தல இறைவனின்
தலபுராணச் செய்திகளும் குறிக்கப் பெற்றிருக்கும். சிவபெருமானின்
திருவிளையாடல்கள், சிவனடியார்களின் வாழ்வியல் சிறப்புகள்
ஆகியவையும் இடம் பெற்றிருக்கும். இளமைப் பருவத்தாராகிய
திருஞானசம்பந்தர் தனக்குக் கிடைத்த அருள் ஞானத்தால்
தேவாரப் பதிகங்களைப் பாடியதால் அப்பதிகங்களில் சைவத்
தத்துவக் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. இப்பொருள்களைத்
தனித்தனியே ஆராய்ந்தால் திருஞான சம்பந்தரின் தேவாரத்
திருப்பதிகங்கள் சைவ வரலாற்றுத் தத்துவநூல் என அறியலாம்.

3.1.2 திருநாவுக்கரசர் அருளியவை

    தேவாரம் பாடிய ஆசிரியர்களில் 4, 5, 6 திருமுறைகளைத்
தந்தவர் அப்பர் என்கிற திருநாவுக்கரசர். இவருடைய
வரலாற்றையும் பெரியபுராணம் சிறப்பாக எடுத்துக் கூறுகிறது.
இவர் பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாட்டில் உள்ள திருவாமூர்.
தந்தை புகழனார், தாய் மாதினியார். இயற்பெயர் மருள்நீக்கியார்.
இளம்வயதில் தாய் தந்தையரை இழந்ததால் தம் சகோதரி
திலகவதியாரால் வளர்க்கப் பெற்றார். சூழ்நிலையால் சைவசமயத்தை
விட்டுச் சமண சமயம் சேர்ந்தார். தருமசேனர் என்ற பெயரோடு
அச்சமயத்தில் குருவாக வாழ்ந்தார். இவரை மீண்டும் சைவத்திற்கு
மாற்றுவதற்காகச் சிவபெருமான் அருளால் இவருக்குத் தீராத
வயிற்றுவலி     ஏற்பட்டது.     சமணர்களின் மருந்துகளாலும்
மந்திரங்களாலும் தீராத வயிற்று வலியைத் தீர்த்துக் கொள்ளத்
தமக்கையாரைத் தேடி வந்தார். திலகவதியாரின் சிவத்தவத்தால்
வயிற்றுவலி தீர்ந்தது. சமணத்திலிருந்து சைவ சமயத்திற்கு மாறினார்.
திருவதிகைவீரட்டானத்து இறைவன் மீது முதன்முதலில் பாடல்கள்
பாடத் தொடங்கினார். சமணர்கள் மற்றும் பல்லவனின் சூழ்ச்சிகளை
வென்றார். திருஞானசம்பந்தரைப் போல இவரும் திருத்தல
யாத்திரைகள் செய்து திருத்தலங்கள் தோறும் இறைவனைப் போற்றிப்
பதிகங்கள் பாடினார். இவரும் பல அற்புதச் செயல்களைச் செய்தார்.
அவற்றில் குறிப்பிடத்தக்கன :

  • சுண்ணாம்பு நீற்றறையின் துன்பத்தை நீக்கிக் கொள்ளுதல்.

  • கொல்ல ஏவப்பட்ட யானையை அடக்கியது.

  • கட்டப்பெற்ற கல்லையே தெப்பமாக மாற்றிக் கடலில் மிதந்து
    உயிர்பெற்றது.

  • திருநல்லூரில் இறைவனின் திருவடியைச் சூடிக்கொண்டது.

  • பாம்பு தீண்டப்பெற்ற அப்பூதியின் மகனின் விடத்தை
    நீக்கியது.

  • திருவீழிமிழலையில் படிக்காசு பெற்றது.

  • திருமறைக்காட்டில் திருக்கோயில் கதவைத் திறக்கச் செய்தது.

  • பழையாறையில் உண்ணாநோன்பு இருந்து கடவுட்காட்சி 
    பெற்றது.

  • இறுதியில் திருப்புகலூரில் இறைவனோடு இரண்டறக் கலந்தது.

    இவ்வாறு பல அற்புதச் செயல்களைச் செய்து தேவாரத்
திருப்பதிகங்களைப் பாடி எண்பத்தொரு வயதில் திருவருளோடு
இரண்டறக்கலந்தார்.

    திருநாவுக்கரசர் பாடிய தேவாரத் திருமுறைகள் மூன்று
திருமுறைகளாக வகுக்கப் பெற்றன. இவர் பாடிய திருப்பதிகங்களில்
113 பதிகங்கள் பண் முறையில் நான்காம் திருமுறையாகத்
தொகுக்கப் பெற்றன. திருக்குறுந்தொகைப் பதிகங்கள் 100-ம்
ஐந்தாம் திருமுறையாகத் தொகுக்கப் பெற்றன. திருத்தாண்டகப்
பதிகங்கள் 99-ம் ஆறாம் திருமுறையாகத் தொகுக்கப் பெற்றன.
திருநாவுக்கரசர் பாடிய     திருப்பாடல்கள்     சைவசித்தாந்தக்
கருத்துகளைப் பின்னால் சாத்திரங்களாகத் தொகுப்பதற்குப்
பெரிதும் உதவின. இறைத்தொண்டு என்பதை அவரின் பதிகங்கள்
வகைப்படுத்திக்     காட்டின.     கற்றவர்களும்,     ஞானிகளும்
இறைவனிடத்தில் வைத்திருக்கும்     அன்பினை     எடுத்துக்
கூறுவதாகவும் அமைந்துள்ளன. உழவாரப் படையைத் (புல்,
பூண்டு நீக்கும் ஆயுதம்) தாங்கி, இறைத்தொண்டும் திருநாவுக்கரசர்
செய்ததால் அவருடைய பாடல்கள் திருக்கோயில் தொண்டினையும்,
மனிதநேயத்தினையும் வலியுறுத்துவதாக உள்ளன. சிறுதெய்வ
வழிபாடு, சாதிச்சண்டைகள், சமயச்சண்டைகள் ஆகியவை
நீங்கவேண்டும் எனவும் அவருடைய பாடல்கள் கூறுகின்றன.
தாண்டகம் என்ற செய்யுள் அமைப்பு இவருடைய பாடல்களில்
அமைந்ததால் தாண்டக வேந்தர் என்று திருநாவுக்கரசர்
அழைக்கப் பட்டார்.

3.1.3 சுந்தரர் அருளியவை

    தேவாரம் பாடிய மூவரில் மூன்றாமவர் சுந்தரமூர்த்தி ஆவார்.
பிறந்த ஊர் திருமுனைப்பாடி நாட்டின் திருநாவலூர் ஆகும்.
பெற்றோர் சடையனார், இசைஞானியார். இவர் காலத்தில்
அரசராய் இருந்த நரசிங்க முனையரையர் என்பார் இவரைத்
தத்துப் பிள்ளையாகப் (மகன்மை கொண்டு) போற்றி வளர்த்தார்.
திருவெண்ணெய் நல்லூர் என்ற ஊரில் இவருக்குத் திருமணம்
நடக்க இருந்த நேரத்தில் இறைவன் இவரைத் தடுத்தாட்
கொண்டார். அதுமுதல் இறைவனுக்கு இவர் அடிமையானார்.
திருவாரூரில் வாழ்ந்த கணிகையர் குலத்தைச் சார்ந்த பரவையார்
என்ற பெண்ணையும் திருவொற்றியூரில் வாழ்ந்த வளோளர்
குலத்தைச் சேர்ந்த சங்கிலியார் என்ற பெண்ணையும் திருமணம்
செய்து கொண்டார். இறைவனைத் தம் தோழராக எண்ணிப் பாடிப்
போற்றித் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொண்டார்.
நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்றெல்லாம் இவர்
பெருமையாக அழைக்கப்பட்டார். தம்முடைய திருப்பாடல்களால்
பல அரிய நிகழ்வுகளை நிகழ்த்தினார்.

  • தமக்குக் கிடைத்த நெற்குவியலை எடுத்துச் செல்ல 
    வேலையாட்களைப் பெற்றமை.

  • பரவை நாச்சியாருக்காக இறைவனிடத்தில் பொன்பெற்று
    அதனை எடுத்துச் செல்ல, மணிமுத்தாற்றில் பொன்னை
    இட்டுத் திருவாரூர்த் திருக்குளத்தில் எடுத்தமை.

  • இறைவனிடத்தில் சோறு பெற்றுப் பசியாற்றிக் கொண்டமை.

  • சத்தியத்தை மீறியதால் கண்களை இழந்து, இறைவனருளால்
    மீண்டும் பெற்றமை.

  • பரவையாரின் ஊடலைத் தீர்க்க இறைவனை இருமுறை
    தூதுவிட்டமை.

  • ஏயர்கோன் என்ற அடியவரின் வயிற்று நோயைத் தீர்த்தமை.

  • முதலை உண்ட பாலனை மீட்டமை.

  • இறைவனால் அனுப்பப் பெற்ற வெள்ளை யானையின்மேல்
    ஏறி நேரே கயிலாயம் சென்றமை.

    இவர் வாழ்ந்த காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதி -
எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். இவர் 84 திருப்பதிகளில்
எழுந்தருளி உள்ள இறைவனைப் பாடிய 100 திருப்பதிகங்கள்
இப்பொழுது கிடைத்துள்ளன. இவருடைய தேவாரப் பதிகங்கள்
பண்களின் வரிசையில் தொகுக்கப் பெற்றுள்ளன. இவருடைய
திருப்பதிகங்களில் இந்தளம், தக்கராகம், நட்டராகம் உள்ளிட்ட
17 பண்கள் அமைந்துள்ளன. இவருடைய திருத்தொண்டத்
தொகையில் அமைந்துள்ள பாடல்கள்தாம் பின்னால் சேக்கிழாரால்
பெரியபுராணமாக விரித்துப் பாடப் பெற்றன. இவருடைய
பதிகங்களில் இயற்கை வருணனைகள் அதிகம் உண்டு. மேலும்
தமிழகத்து உள்நாட்டுப் பிரிவுகள், ஊர்களின் பெயர்கள், ஆறுகளின்
பெயர்கள் ஆகிய பல குறிக்கப் பெற்றுள்ளன. இவருடைய
பாடல்களில் பல தன் வரலாற்றுப் பாடல்களாக அமைந்துள்ளன.
இவர் மண்ணுலகில் 18 ஆண்டுகள் வாழ்ந்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக