வெள்ளி, 28 நவம்பர், 2014

TRB PG TAMIL :மதுரைச் சீத்தலைச் சாத்தனார்

     மதுரைச் சீத்தலைச் சாத்தனார் : இவர் கடைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் சாத்தனார் என்பது; வணிக மரபினர். இவர் பத்தினிக் கடவுளாகியகண்ணகியின் வரலாற்றையும் அவள் மேம்பாட்டையும் சேரன் செங்குட்டுவனுக்கு அறிவுறுத்தி அவனைக் கொண்டு அவளுக்கு ஒரு கோயில் கட்டுவித்து நித்திய பூசை முதலியன நடக்கும்படி செய்தனர். கண்ணகியின் வரலாற்றை அவனுடன் கேட்டவரும் அவன் சகோதரரும் துறவு பூண்ட வருமாகிய இளங்கோவடிகள் அவளுடைய சரிதத்தைப் பொருட்டொடர் நிலைச் செய்யுளாகச் செய்தற்கு வேட்கை அடையும் வண்ணம் செய்தவர் இவரே. அதுவே சிலப்பதிகாரம். அதைக் கேட்டவரும் இவரே. மணிமேகலையின் ஆசிரியர் இவர். குறுந்தொகைச் செய்யுளையன்றி எட்டுத் தொகையில் இவர் செய்தனவாக உள்ள செய்யுள்கள்-9 (நற். 3; அகநா. 5; புறநா. 1). திருவள்ளுவ மாலையிலும் இவர் செய்யுள் ஒன்று உண்டு. மருத்துவன் தாமோதரனாரும் இவரும் நெருங்கிய நட்பினர். சேரன் செங்குட்டுவன் பாலும் இளங்கோவடிகள்பாலும் இவர் மிக்க அன்புடையவர். காஞ்சி, வஞ்சி, காவிரிப் பூம்பட்டினம் இவற்றைப் பற்றி இவர் விரிவாகக் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக