வெள்ளி, 28 நவம்பர், 2014

TRB PG TAMIL: வெள்ளி வீதியார்


    வெள்ளி வீதியார் : இவர் பெண்பாலார். இவர் பாடிய பாடல்கள் பல தம் அனுபவங்களே ஆகும் என்பதும், இங்ஙனமே தம் அனுபவங்களைக் கூறும் ஆதிமந்தியார் என்ற பெண் புலவரும் இவரும் ஒரு காலத்தவர் என்பதும் தொல். அகத். சூ.54-க்கு நச்சினார்க்கினியர் எழுதிய விசேட உரையால் தெரிகின்றன. "கன்று முண்ணாது கலத்தினும் படாது கவினே ... இது (குறுந். 27) வெள்ளி வீதியார் பாட்டு; 'மள்ளர் குழீஇய விழவி னானும் ... மகனே' (குறுந். 31); இது காதலற் கெடுத்த ஆதிமந்தி பாட்டு. இவை தத்தம் பெயர் கூறிற் புறமாம் என்று அஞ்சி வாளாது கூறினார். ஆதிமந்தி தன் பெயராலும் காதலனாகிய ஆட்டனத்தி பெயராலும் கூறில் காஞ்சிப் பாற்படும்; 'ஆதிமந்திபோல, ஏதஞ் சொல்லிப் பேதுபெரி துறலே' (அகநா. 236) எனவும், 'வெள்ளி வீதியைப் போல நன்றும், செலவயர்ந் திசினால் யானே' (அகநா. 147) எனவும் அகத்திணைக்கட் சார்த்து வகையான் வந்தன அன்றித் தலைமை வகையாக வந்தில என்பது" அது. வெள்ளி வீதியார் தம் கணவனைத் தேடி அலைந்தமை இவர் வாக்கானும், ஒளவையார் "நெறிபடு கவலை நிரம்பா நீளிடை, வெள்ளி வீதியைப் போல நன்றுஞ், செலவயர்ந் திசினால் யானே" (அகநா. 147) என்று கூறியிருப்பதனாலும் தெரிய வரும். இவர் பாடிய ''தூது விட்டுத் தலைவரைத் தேடித் தருவேன்" என்ற தோழி கூற்று, "நிலந் தொட்டுப் புகாஅர் வான மேறார், விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார், நாட்டி னாட்டி னூரினூரிற்,குடிமுறை  குடிமுறை தேரிற், கெடுநரு முளரோநங் காதலோரே" (130) என்று அழகுபட அமைந்துள்ளது. நச்சினார்க்கினியர் இச் செய்யுளை "செவிலி இடைச் சுரத்துச் சென்று தலைவியையும் தலைவனையும் தேடத் துணிந்து கூறினது" என்பர் (தொல். அகத்.சூ. 37).

 "காலே பரிதப்பினவே கண்ணே, நோக்கி நோக்கி வாளிழந்தனவே ... ... பிறரே" (குறுந். 44) என்பதும் செவிலியின் கூற்றே. இச் செய்யுள் மிகுந்த நயம் வாய்ந்தது.
 தன் காமநோய் பரவுதலைத் தலைவன் பாங்கனுக்குக் கழற்று எதிர்மறையில், "ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கிற், கையிலூமன் கண்ணிற் காக்கும், வெண்ணெயுணங்கல் போலப், பரந்தன் றிந் நோய்'' (58) என்று கூறும் பகுதியுள் அந்நோயைத் தடுக்கத் தன் செயலின்மை குறிக்கப்படும் முறை அழகிது. 
முன் காலத்தில் மணம் பேசப் பெரியோரை விடுத்தலும் தலையில் பாகையை அணிந்து மங்களகரமான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதும் தமிழ் நாட்டின் மரபு. இம் மரபு 146-ஆம் செய்யுளில் இவரால் கூறப்படுகிறது.

 அன்னி என்பான் குறுக்கைப் பறந்தலையில் திதியனுடைய காவர் மரமாகிய புன்னையைக் குறைத்த செய்தி இவரால் குறிக்கப்பட்டுள்ளது (அகநா. 45). நற்றிணையில் மூன்றும் அகத்தில் இரண்டும் திருவள்ளுவ மாலையில் ஒன்றும் இவர் பாடிய வேறு செய்யுட்களாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக