ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

ஆசிரியர்கள் போராட்டம்: 'ஜாக்டோ' குழு முதல்வரை சந்திக்க, பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடு

ஆசிரியர் சங்கங்கள் சார்பில், பல்வேறு கோரிக்கை குறித்து, கடந்த பல ஆண்டுகளாக, அரசுக்கு தொடர்ந்து மனு அனுப்பப்பட்டது; ஆனால், அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 26 சங்கங்கள்: அதனால், 2003க்கு பின், ஆசிரியர் சங்கங்கள் மீண்டும் ஒன்றாக இணைந்துள்ளன. தொடக்கப் பள்ளி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கழகம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம், தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், அனைத்து ஆசிரியர் நலச்சங்கம் உள்ளிட்ட, 28 சங்கங்கள், 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கைக் குழுவில் இணைந்துள்ளன. இந்த, 'ஜாக்டோ' உயர்மட்டக்குழு கூட்டம், சென்னையில் இரு நாட்கள் நடந்தது. இதில், 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கூட்டுப் போராட்டத்தை தீவிரப்படுத்துவது என்று முடிவாகி உள்ளது.

ஆசிரியர்கள் போராட்டம் குறித்து, இந்த முடிவை அறிந்த பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள், 'ஜாக்டோ' குழுவை சந்தித்து பேச ஒப்புக் கொண்டனர். 'ஜாக்டோ' குழு தலைமைச் செயலகம் சென்று, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அரசு முதன்மை செயலர் சபிதாவை சந்தித்து பேசினர். அப்போது, 'தற்போது சட்டசபை நடப்பதால், முதல்வரால் சந்திக்க இயலாது; வரும் 25ம் தேதி, முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்கிறோம்; அதுவரை பொறுத்திருங்கள்; பிளஸ் 2, 10ம் வகுப்பு உள்ளிட்ட வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு வருவதால், தற்போது போராட்ட முடிவுகள் எடுக்க வேண்டாம்' என்று, கல்வித் துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, நிதித் துறைச் செயலர், பள்ளிக்கல்வித் துறைச் செயலர் மற்றும் முதல்வர் அலுவலகத்தில், மனு அளித்து விட்டு, ஆசிரியர் சங்கங்கள் நம்பிக்கையுடன் திரும்பி உள்ளனர்.
கோரிக்கைகள்:
* மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக, 6வது சம்பளக் கமிஷன் பரிந்துரைப்படி, தமிழக ஆசிரியர்களுக்கு ஊதியம் மற்றும் படிகள் வேண்டும்.

* அகவிலைப்படியில், 50 சதவீதத்தை, அடிப்படை ஊதியத்துடன் தர வேண்டும்.

* பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

* தமிழ்ப்பாடம் கடைசியாக உள்ள அரசாணையை ரத்து செய்து, தமிழை முதல் பாடமாக்க வேண்டும்.

* அரசின் நலத் திட்டங்களை அமல்படுத்த, பள்ளிகளுக்கு தலா ஒரு அலுவலர் வேண்டும்.

* மருத்துவப் பணி சார்ந்த பாதுகாப்புச் சட்டம் போல், ஆசிரியர் பாதுகாப்புச் சட்டம் வேண்டும்.
போராட்ட வடிவம் குறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத் தலைவர், சத்தியமூர்த்தி கூறியதாவது: விளக்க கூட்டம்: ஆசிரியர் சங்க கூட்டு நடவடிக்கைக் குழு, முதற்கட்டமாக, நாளை மாவட்ட வாரியாக, விளக்கக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. வரும் 25ம் தேதி, முதல்வரை சந்திக்க அனுமதி கிடைக்கும் என்று, கல்வித் துறை அதிகாரிகள் உறுதியளித்து உள்ளனர். பின், மார்ச் 8ம் தேதி, மாவட்ட வாரியாக ஆசிரியர் சங்கங்களின் சார்பில், கோரிக்கை குறித்துப் பேரணி நடத்தப்படும். அடுத்தகட்ட திட்டம் குறித்து, உயர்மட்டக் குழு விரைவில் முடிவெடுக்கும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக