திங்கள், 20 ஏப்ரல், 2015

தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்-எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கோரிக்கை மனு


தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 25 சதவீதம் ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கல்வி உரிமை சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டத் தலைவர் ஐ. உஸ்மான்கான் தலைமையில் பெண்கள், குழந்தைகள், கட்சி நிர்வாகிகள் திங்கள்கிழமை திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டு கோரிக்கை மனு அளித்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களின் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டு, அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட்டது.இச்சட்டத்தின்படி தனியார் சுயநிதி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் மொத்த இடங்களில் 25 சதவீத இடங்களை ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்து, அவர்களிடமிருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்காமல் கல்வி கற்பிக்க வேண்டும். அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அச்சட்டத்தின்படி, தனியார் சுயநிதி பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீடு விவரங்களை பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். அத்துடன் அதற்கான நகலினை தனியார் பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.தற்போது தனியார் பள்ளிகளில் வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில் 25 சதவீத ஒதுக்கீடு குறித்த எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. அவ்வாறு ஏழை எளிய மாணவர்களுக்கு இடஒதுக்கீடு ஏதுவும் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் மாணவர் சேர்க்கைக்காக அரசு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் கட்டாய கல்விச் சட்டத்தின்படி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். வகுப்பு வாரியாக அரசு நிர்ணயம் செய்துள்ள கல்வி கட்டணம் குறித்த விபரப் பட்டியலினை அனைத்து பள்ளிகளில் வெளியிட வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் இயங்கும் தனியார் சுயநிதி பள்ளிகளில் கட்டாய கல்விச் சட்டத்தை அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக