திங்கள், 13 ஏப்ரல், 2015

நேரம் தவறாமையை கடைபிடியுங்கள்.

நேரமும் காலமும் என நாம் பார்க்கப்போவது பஞ்சாங்கம் பார்த்து ஜோதிடரிடம் கேட்டுக்
குறிக்கின்ற நேரம் அல்ல. எந்த வேலையையும் தொழிலையும் சரியான நேரத்திலும் மிகப்
பொருத்தமான தருணத்திலும் செய்கின்ற போதுதான் வெற்றி கிடைக்கிறது.சில நிமிடம் கால
தாமதமானதால் ரயிலையும், பஸ்சையும், விமானத்தையும் கோட்டை விட்டவர்கள் உண்டு.
சரியான நேரத்தில் சரியான மனிதர்களைச் சந்திக்க முடியாமல் போனதால் வாழ்க்கையில் ஏற்படவேண்டிய நல்ல தருணங்களை இழந்தவர்கள் நம்மில் அதிகம் பேர். சரியான நேரத்தில் சரியான நபரை நேரம்தவறாது சந்தித்ததின் விளைவால் வாழ்க்கையில் உச்சத்தினைத் தொட்டவர்களும் உண்டு. நாம் எந்த வகை என்பதைச்சிந்திப்போம்.
வரலாறு ஆகட்டும் தொழில் ஆகட்டும்-- நேரமும் காலந்தவறாமையும் மிக முக்கியமானவை.
நெப்போலியனும் ஜெர்மானியர்களும் தவறான நேரத்தில் ரஷ்யாவிற்குள் நுழைந்ததால்தான், சிறந்த தளபதிகள் இருந்தும் வெற்றி பெற இயலவில்லை. மாவீரர் அலெக்சாண்டரின் தோல்விகளே இல்லா வெற்றிகளுக்கும் அவர் எடுத்த முடிவுகளுக்கும் சரியான நேரம் தான் முதல் காரணமாக இருந்திருக்கிறது. போரஸ் மன்னரிடம் போரிடுவதற்கு முன்பாக ஜீலம் நதிக்கரையில் ஒரு மாதத்திற்கும் மேலாகத் தன் படை
பரிவாரங்களுடன் அலெக்சாண்டர் காத்திருந்தார். சரியான நேரத்தில் படைகளுக்கு எந்தவொரு சேதாரமும் இல்லாது, ஆற்றைக் கடந்தார். வெற்றியும் பெற்றார்.நேரம்தான் அவரின் வெற்றியைத் தீர்மானித்தது. எதற்காக அலெக்சாண்டரைச் சொல்கிறேன் என்றால், அவர்தான்
முதன்முதலில் படைகளை மட்டுமில்லாது அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை, ஒரு
இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சரியான நேரத்தில் விரயமில்லாது கொண்டு சென்று சாதனை செய்தவர்.
ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலில் வந்தவருக்கும் இரண்டாவது வந்தவருக்கும் சில
நொடிப்பொழுது தான் வேறுபாடு. அனால் அந்த நொடிப் பொழுது தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது.
வியாபார உலகில் தொழில் வியூகம் அனைத்தும் ஜெயித்திட சரியான நேரத்தின் செயல்பாடுகள்தான் உதவியாகஇருக்கும்.எந்த ஒரு சிறு விஷயமானாலும் நேரம் தவறாமையை கடைபிடியுங்கள். இது வெளிநாடுகளில் மிக
முக்கியமான செயலாகப் பார்க்கப்படும். ஆனால் நம் நாட்டில் எந்த ஒரு கூட்டத்திற்கும் சரியான நேரத்திற்குவருபவர் ஏதோ ஒரு தவறு செய்தவர் போல பார்க்கப்படுவார். மற்றவர்கள் வரும்வரை காக்கவைக்கப்படுவார். நீங்கள் மட்டும் நேரம் தவறாமல் போனால் போதாது. உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நேரத்தின் முக்கியத்துவத்தைபுரிய வையுங்கள். நாளடைவில் உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் மாற்றம் நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக