வெள்ளி, 24 ஏப்ரல், 2015

TRB OG TAMIL :தமிழ்மொழியின் தொன்மை

உலகில் இன்று ஏறத்தாழ மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளனவென்றும், எழுத்து வடிவம் கொண்டவை முந்நூறுக்கும் குறைவானவையே என்றும் குறிப்பிடுகின்றனர். அவற்றுள் காலப் பழமையும், இலக்கிய வளமையும் கொண்டவை சிலவே. அவற்றைச் செவ்வியல் மொழிகள் (Classical Language) என்று அழைப்பர். தமிழ்மொழி அச்செவ்வியல் மொழிகளுள் ஒன்று எனும் பெருமையுடையது. ஏனையவை, கிரீக், இலத்தீன், ஈபுரு, சீனம், வடமொழி ஆகியனவாகும். இவற்றுள், ஈபுரு, வடமொழி, இலத்தீன் ஆகியவை வழக்கு ஒழிந்துவிட்டன. தமிழ்மொழி பழமைக்குப் பழமையானதாகவும் புதுமைக்குப் புதுமையானதாகவும் விளங்குகிறது. இன்று பேச்சு வழக்கில் உள்ள முதன்மையான மொழிகளுள் தமிழும் ஒன்று.


ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியா முழுவதும் பேசப்பட்டு வந்தது தொல்திராவிட மொழி (Proto-Dravidian). அதன் மூத்த உறுப்பினராகத் திகழ்வது தமிழ். இந்தியா முழுவதும் பேசப்பட்ட அப்பழந்தமிழையே தொல்திராவிட மொழி என்று மொழியியல் அறிஞர்கள் குறிக்கின்றனர். இந்த உண்மையைப் பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை,


சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்
அரியதுனது இலக்கணம் என்று அறைகுவதும் வியப்பாமே.

(தமிழ்த்தெய்வ வணக்கம்)


என்று, தாம் இயற்றிய மனோன்மணீயம் என்ற நாடக நூலில் குறிப்பிடுகின்றார். தொல்காப்பியர், முன்னோர் சொல்வனவாகவும் பழைய நூல்களில் கூறப்படுவனவாகவும் கூறும் குறிப்புகள் இருநூற்று ஐம்பதற்கு மேல் உள்ளன. இவற்றிலிருந்து, தொல்காப்பியருக்கு முன்பே, இலக்கண நூல்களும் இலக்கியங்களும் தமிழில் இருந்தன என்பதை அறிந்துகொள்ள முடிகிறதல்லவா!


3.1.1 தமிழ்மொழியின் சிறப்புகள்


தொல்காப்பியர் தமிழ்மொழியின் உலக வழக்கையும் (பேச்சு வழக்கு) செய்யுள் வழக்கையும் (இலக்கிய வழக்கு) அடிப்படையாகக் கொண்டு தமிழ் மொழியை ஆராய்ந்தார் என்பதைத் தொல்காப்பியப் பாயிரம் சுட்டிக்காட்டுகிறது. டாக்டர் கால்டுவெல், தமிழ் மொழியில், உலக வழக்கும் செய்யுள் வழக்கும் என்றும் ஒன்றாக இருந்ததில்லை, மிக முற்பட்ட காலத்திலிருந்தே இன்று போல் வேறுபட்டே இருந்தன என்று காட்டுகிறார். தமிழின் தனித்த இயல்புகளுள் ஒன்று பேச்சு மொழியும் எழுத்து மொழியும் ஒன்றையொன்று துலக்கியும் போற்றியும் வளர்ந்து வந்த தன்மை ஆகும்.


தனித்தன்மை


திராவிட மொழிகளில் வழங்கும் சொற்கள் பலவும் தமிழில் வழங்குகின்றன. கன்னடம், மலையாளம் முதலிய திராவிட மொழிகளில் ஏறக்குறைய ஐயாயிரம் தமிழ்ச்சொற்கள் உள்ளன என்று மொழியியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், சமஸ்கிருதத்திலும், தமிழ்ச் சொற்கள் பல கடன் வாங்கப்பட்டுள்ளன என்று பர்ரோ (Burrow) போன்ற மொழியியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இந்திய மொழிகளில் முதலாவதாகவும், முதன்மையானதாகவும் சமஸ்கிருதத்தைத் தூக்கிப் பிடிக்கும் போக்கு திராவிடமொழி ஆராய்ச்சிக்கு முன்பு நிலவியிருந்தது. இந்திய மொழிகளின் தாய் என சமஸ்கிருதத்தைக் கருதினர். திராவிட மொழியை ஆராய்ந்து ஒப்பிலக்கணம் படைத்த கால்டுவெல், பர்ரோ போன்ற அறிஞர்கள். ஆரியர் இந்தியாவுக்குள் நுழைவதற்கு முன்பே பண்பட்டிருந்த திராவிட நாகரிகம் பற்றியும், திராவிட மொழிகளில் மூத்த செம்மொழித் தமிழின் சொற்கள் சமஸ்கிருதத்தில் கடன் வாங்கப்பட்டிருந்தது பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தனர். பின்னரே தமிழின் தொன்மையையும் தனித்தன்மையையும் அறிஞர் உலகம் உணர்ந்தது.

கடன் வாங்கலில் வரையறை


தொல்காப்பியர், இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் என நான்கு வகைச் சொற்களைக் குறிப்பிடுகின்றார். இயற்சொல் என்பன அன்றாட வழக்கில் உள்ள சொற்கள். திரிசொல் என்பன செய்யுளில் மட்டும் வழங்கும் இலக்கிய வழக்குச் சொற்கள். திசைச்சொல் என்பன நாட்டின் பல்வேறு பகுதிகளில், வெவ்வேறு வகையாக வழங்கும் வட்டார வழக்குச் சொற்கள். வடசொல் என்பவை தமிழில் இடம்பெற்றுள்ள வடமொழிச் சொற்களாகும். அவ்வாறு வடசொற்களைக் கடன் வாங்கும்போது, வடமொழியாகிய சமஸ்கிருதத்திற்கு உரிய ஒலிகளை நீக்கிவிட்டு அவற்றுக்கேற்ற தமிழ் ஒலிகளை அமைத்துத் தமிழ் எழுத்துக்களால் எழுத வேண்டும் என்று தொல்காப்பியர் விதி வகுத்துள்ளார்.


சொற் கட்டமைப்பும் தொடர்க்கட்டமைப்பும்


தமிழ் மொழியிலுள்ள சொற்கட்டமைப்பும், சொற்றொடர்க் கட்டுக் கோப்பும் இலக்கணக் கட்டுப்பாடும் சிறப்புடையன. சொற்கள் பெயர், வினை, இடை, உரி என நான்கு வகைப்படும். அவற்றுள் பெயர்ச் சொல்லும் வினைச் சொல்லும் தனித்து இயங்குவன. உரிச்சொல் அடையாகவும், அடிச்சொல்லாகவும் வரும் இயல்புடையது. சொற்கட்டமைப்பிற்கும், சொற்றொடர்க் கட்டமைப்பிற்கும் உதவ இடையே வருவன இடைச்சொற்கள். எல்லாத் தமிழ்ச் சொற்களும் இந்நான்கு பிரிவுகளுள் அடங்கும். பொருளின் பெயரை உணர்த்துவன பெயர்ச் சொற்கள், தொழிலை அல்லது வினையை உணர்த்துவன வினைச் சொற்கள், இவற்றின் அமைப்பிற்கும் சொற்றொடர் அமைப்பிற்கும் துணை செய்வன இடைச் சொற்கள். உரிச் சொற்கள் என்பவை இன்றைய வழக்கில் குறைவே எனினும் தமிழ் இலக்கியப் பெரும்பரப்பில் நின்று நிலவுகின்றன. பெயர்ச் சொற்கள் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தும். திணை, உயர்திணை, அஃறிணை என இருவகை. பகுத்தறிவு உடைய மனிதர் உயர்திணை; மற்ற, உயிருள்ளவை, உயிரில்லாதவை எல்லாம் அஃறிணை. திணை, பால் வேறுபாடு சொற்களின் பொருளை ஒட்டியே அமைந்துள்ளது. தமிழ்மொழியின் சொற்கள், அடிச் சொற்களோடு மற்ற உறுப்புகள் சேர்ந்து ஒட்டி அமையும் சொற்கள் (Agglutinative). எனவே, சொற்களின் அமைப்பு தெளிவாகத் தோன்றும். அவற்றை இணைப்பதும் பிரித்துப் பார்ப்பதும் எளிது. இளம் வகுப்புகளில் சொற்களைப் பதம் பிரித்துப் பயின்றிருப்பீர்கள் அல்லவா!


தமிழ் எழுத்துகள்


பழைய தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் பிராமி எழுத்திலும் வட்டெழுத்திலும், கிரந்த எழுத்திலும் உள்ளன. கி. பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பின் எழுதப்பட்ட கல்வெட்டுகளில் இன்றைய தமிழ் எழுத்துகள் உள்ளன. தமிழ்மொழி நெடுங்காலமாகத் தனி எழுத்து வடிவம் பெற்றிருந்தது. இன்று வழக்கிலுள்ள தமிழ் எழுத்து வடிவம் வட்டெழுத்திலிருந்து வளர்ந்து அமைந்ததே ஆகும்.


தமிழ்மொழி பேசுவோர்


திராவிட மொழிகளுள் இடத்தால் பரப்பு உடைய மொழி தமிழ். அது ஆறு கோடி மக்கள் வாழும் தமிழ் நாட்டின் மொழியாக இருப்பதுடன், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா, பிஜித்தீவு, மொரீசீயஸ் முதலான பல நாடுகளிலும் பல இலட்சக்கணக்கான மக்கள் பேசும் மொழியாக உள்ளது. இது நீங்கள் நன்கறிந்த உண்மை.


மேற்குறிப்பிட்ட வகையில், தமிழ்மொழி பல்வேறு தனித்தன்மையும் சிறப்புகளும் வாய்ந்த ஒரு மொழி என்பது புலனாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக