பிரபல கவிஞர், சிந்தனையாளர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (Pattukkottai Kalyanasundaram) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை அருகே உள்ள செங்கப் படுத்தான்காடு (சங்கம்படைத் தான்காடு) என்ற கிராமத்தில் எளிய விவசாயக் குடும்பத்தில் (1930) பிறந்தார். தந்தை நாட்டுப் புறக் கவிஞர். உள்ளூர் சுந்தரம் பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத் தில் 2-ம் வகுப்பு வரை படித்தார்.

 குடும்பத் தொழிலான விவசாயம் மட்டுமின்றி, உப்பளம், நாடகம், மாம்பழ வியாபாரம், இட்லி கடை என 10-க்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுவந்தார்.

 சிறு வயதிலேயே கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். இவரது பாடல்களில் கிராமிய மணம் கமழ்ந்தது. கருத்துச் செறிவும் கற்பனை வளமும் படைத்த இவரது பாடல்களை 'ஜனசக்தி' பத்திரிகை வெளியிட்டுவந்தது.

 விவசாய சங்கம், பொதுவுடைமைக் கட்சியில் ஈடுபாடு கொண்டிருந்தார். 1952-ல் பாண்டிச்சேரி சென்று பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் பயின்றார். பின்னர் அவர் நடத்திய 'குயில்' இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். தனக்கு தமிழ் கற்பித்த குரு பாரதிதாசன் வாழ்க என்று எழுதிவிட்டுதான் கடிதம் எழுதத் தொடங்குவாராம்.

 பொதுவுடைமை சித்தாந்தங்களைப் பரப்ப அயராது பாடுபட்டார். ஏராளமான தத்துவப் பாடல்களை எழுதியுள்ளார். 'படித்த பெண்' திரைப்படத்துக்காக 1955-ல் முதன்முதலாக பாடல் எழுதினார். இதன் மூலம் திரைப்படத் துறையில் தன் முத்திரையை அழுத்தமாகப் பதித்தார்.

 1959 வரை எம்ஜிஆர் நடித்த 7 திரைப்படங்கள், சிவாஜி கணேசனின் 11 திரைப்படங்கள் உட்பட பல திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதினார். 180 திரைப்படப் பாடல்கள் மட்டுமே எழுதியுள்ளார். ஆனால், அவை அனைத்துமே காலத்தால் அழியாதவையாகத் திகழ்கின்றன. இயற்கை, சிறுவர், காதல், மகிழ்ச்சி, சோகம், நாடு, சமூகம், அரசியல், தத்துவம், பாட்டாளி வர்க்கம் ஆகியவை இவரது பாடல்களின் கருப்பொருளாக இருந்தன.

 இவரது பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. 'சின்னப் பயலே சின்னப் பயலே', 'தூங்காதே தம்பி தூங்காதே', 'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே', 'எல்லோரும் இந்நாட்டு மன்னரே', 'செய்யும் தொழிலே தெய்வம்' ஆகியவை குறிப்பிடத்தக்க பாடல்கள்.

 எளிய தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகள், வாழ்வியல் தத்துவங்களை வெளிப்படுத்தியவர். பாடுவதிலும் வல்லவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் இவரது நெருங்கிய நண்பர்.

 மக்கள் கவிஞர் என்ற பட்டம், பாவேந்தர் விருது உள்ளிட்ட பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 வயதில் (1959) மறைந்தார். குறுகிய காலமே வாழ்ந்த இவர், அதற்குள் பல்லாண்டு காலம் வாழ்ந்து நிகழ்த்தவேண்டிய சாதனைகளை நிகழ்த்திவிட்டார்.

 இவரது பாடல்கள் தொகுப்பு 1965-ல் வெளிவந்தது. இவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் பட்டுக்கோட்டையில் 2000-ல் மணிமண்டபம் அமைக்கப்பட்டது.