திங்கள், 4 மே, 2015

தமிழ் இலக்கணம் அறிவோம்! - 2

Question & Answer

'வினவுதல்' என்பதிலிருந்து வந்தது 'வினா', நமக்குப் பரிச்சயமான வார்த்தையைச் சொல்வதென்றால், 'கேள்வி'.

ஒரு பொருளைச் சுட்டுவதற்குத் தனி எழுத்துகள் உள்ளதுபோல், தமிழில் கேள்வி கேட்பதற்கென்றே சில எழுத்துகளை வரையறுத்திருக்கிறார்கள். அவை 'வினா எழுத்துகள்' எனப்படுகின்றன.

வினா எழுத்துகள் மொத்தம் ஐந்து : எ, யா, ஆ, ஓ மற்றும் ஏ.

உதாரணமாக, 'எங்கே?' என்ற வினாவின் தொடக்கத்தில் 'எ' என்ற எழுத்து வருகிறது, 'சாப்பிட்டாயா?' என்ற வினாவின் நிறைவுப் பகுதியில் 'ஆ' என்ற எழுத்து வருகிறது. இந்த எழுத்துகள்தான் அந்தச் சொல்லை ஒரு வினாவாக மாற்றுகின்றன. ஆகவே, அவை வினா எழுத்துகள்.

சுட்டெழுத்துகளைப்போலவே, வினா எழுத்துகளிலும் அக வினா, புற வினா உண்டு.

அக வினா என்றால், வினா எழுத்து அந்தச் சொல்லின் ஒரு பகுதியாகக் கலந்திருக்கும், அதை நீக்கிவிட்டால் சொல்லுக்குப் பொருள் இருக்காது.

உதாரணமாக, 'ஏன்?' என்ற கேள்வியில் வினா எழுத்து, 'ஏ', அதை நீக்கிவிட்டால் 'ன்' என்று பொருளற்ற ஒரு சொல்தான் நமக்குக் கிடைக்கும். ஆகவே, இது அக வினா.

மாறாக, 'எப்பரிசு?' என்ற கேள்வியில் 'எ' என்ற வினா எழுத்தை நீக்கிவிட்டால்கூட, 'பரிசு' என்ற பொருளுள்ள சொல் நமக்குக் கிடைக்கும். ஆகவே, இது புற வினா.

ஆனால், நாம் சாதாரணமாக 'எப்பரிசு?' என்று எழுதுவதில்லை. 'எந்தப் பரிசு?' என்றுதான் எழுதுகிறோம்.

சென்ற அத்தியாயத்தில் அ, இ, உ என்ற சுட்டெழுத்துகள் அந்த, இந்த, உந்த என்று திரிந்ததாகப் பார்த்தோம், அதுபோல, இங்கேயும் 'எ' என்ற வினா எழுத்து 'எந்த' என்ற சொல்லாகத் திரிந்துள்ளது.

உண்மையில் 'எந்த' என்ற சொல் நமக்கு அவசியமே இல்லை, 'எந்த வீடு' என்பதற்குப் பதில் 'எவ்வீடு' என்று கேட்டாலே போதும். ஆனாலும், பழக்கத்தால் அதைத் தொடர்ந்து பயன்படுத்திவருகிறோம்.

சுட்டெழுத்துகளுக்கும் வினா எழுத்துகளுக்கும் நிறைய ஒற்றுமைகளைப் பார்த்துவிட்டோம், அவற்றினிடையே ஒரு முக்கியமான வேறுபாடு உள்ளது.

ஒரு பொருளைச் சுட்டும் எழுத்து எப்போதும் அந்தப் பொருளுக்கு முன்பாகதான் வரும். நடுவிலோ நிறைவிலோ வராது. உதாரணமாக, அப்பழம், இம்மரம், உக்குடை… இப்படி.

ஆனால், 'நல்லவன் இவன்' என்று சொல்லும்போது, சுட்டுச்சொல் பொருளுக்குப் பின்பாக வருகிறதே.

உண்மைதான். ஆனால், இங்கேயும், 'இ' என்ற சுட்டெழுத்து 'இவன்' என்ற சொல்லின் முன் பகுதியில்தான் வருகிறது, நடுவிலோ, பின்னாலேயோ வருவதில்லை.

வினா எழுத்துகள் அப்படியில்லை, சொல்லின் முதலில் வரலாம், அல்லது, பின்னால்கூட வரலாம், இப்படி இரண்டு விதங்களில் அவை வினாக்களாக ஒலிக்கும்.

அந்தவிதத்தில், ஐந்து வினா எழுத்துகளை நாம் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்:

1. சொல்லின் முதல் பகுதியில்மட்டும் வரும் வினா எழுத்துகள் : எ, யா
2. சொல்லின் பின் பகுதியில்மட்டும் வரும் வினா எழுத்துகள் : ஆ, ஓ
3. சொல்லின் முன்பாகவோ பின்பாகவோ வரும் வினா எழுத்துகள் : ஏ

இதனைச் சில உதாரணங்களோடு பார்த்தால் புரிந்துவிடும்.

முதலில், சொல்லின் முதல் பகுதியில்மட்டும் வரும் வினா எழுத்துகளுக்கான (எ, யா) உதாரணங்கள் : எங்கே? எப்போது? எப்படி? எவர்? யார்? யாது?…

அடுத்து, சொல்லின் பின் பகுதியில்மட்டும் வரும் வினா எழுத்துகளுக்கான (ஆ, ஓ) உதாரணங்கள் : அவனா? நீயா? அவனோ? நீயோ? பாம்போ? கயிறோ? சரிதானா? முறைதானா?…

'ஏ' என்ற வினா எழுத்துமட்டும் சொல்லுக்கு முன்பாகவும் வரும் (உதாரணம்: ஏன்), சொல்லுக்குப் பின்பாகவும் வரும் (உதாரணம்: ஆரே?)

கொஞ்சம் பொறுங்கள், 'ஆரே' என்பது எப்படிக் கேள்வியாகும்? இந்தச் சந்தேகம் நியாயமானதுதான். காரணம், 'ஆரே' என்ற சொல் இப்போது வினாவாகப் புழக்கத்தில் இல்லை. ஆனால் பழைய பாடல்கள், உரைநடைகளில் நிறையப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. பிரபலமான உதாரணம் வேண்டுமா? ஒரு நல்ல கண்ணதாசன் பாட்டு இருக்கிறது, 'ஆட்டுவித்தால் யாரொருவர், ஆடாதாரே கண்ணா?' இங்கே 'ஆடாதாரே' என்பதில் 'ஏ' என்ற எழுத்து சொல்லின் பின்பகுதியில் வந்து, கேள்வியாக நிற்கிறது. இல்லையா?

வினாச் சொற்களைப்பற்றி விரிவாகப் பார்த்துவிட்டோம், அடுத்த பகுதிக்குச் செல்லுமுன், இடைச்செருகலாக இன்னோர் இலக்கணக் குறிப்பு, வினாக்களைப்பற்றி.

தமிழில் எத்தனைவிதமான கேள்விகள் கேட்கப்படலாம் என்று ஒரு நன்னூல் சூத்திரம் விளக்குகிறது:

அறிவு, அறியாமை, ஐயுறல், கொளல், கொடை,
ஏவல் … தரும் வினா ஆறும் இழுக்கார்!

அதாவது, மொத்தம் ஆறுவிதமான கேள்விகள் கேட்கப்படலாம். அவை:

1. அறி வினா
2. அறியா வினா
3. ஐயுறல் வினா
4. கொளல் வினா
5. கொடை வினா
6. ஏவல் வினா

'அறி வினா' என்பது, பதில் தெரிந்தே கேட்கும் கேள்வி. உதாரணமாக, ஆசிரியர் மாணவனைக் கேட்கிறார், 'இந்தியாவின் தலைநகரம் எது?'

'அறியா வினா' என்பது, பதில் தெரியாமல் கேட்கும் கேள்வி. உதாரணமாக, மகன் தாயைக் கேட்கிறான், 'அம்மா, இன்னிக்கு என்ன டிஃபன்?'

'ஐயம்' என்றால் சந்தேகம், 'ஐயுறல்' என்றால், சந்தேகப்படுதல், ஆகவே, 'ஐயுறல் வினா' என்றால், சந்தேகமாகக் கேட்கும் கேள்வி, உதாரணமாக, 'நீங்க வெறும் தாஸா? லார்ட் லபக் தாஸா?'

அடுத்து, 'கொளல் வினா', அதாவது, ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகக் கேட்கும் கேள்வி. உதாரணமாக, 'கடைக்காரரே, உளுத்தம்பருப்பு இருக்கா?'

'கொடை வினா' என்பது இதற்கு எதிரானது, ஒன்றைக் கொடுப்பதற்காகக் கேட்கும் கேள்வி அது. உதாரணமாக, 'என்னய்யா? முகம் சோர்ந்திருக்கே? காலையில சாப்பிடலையா?'. இந்தக் கேள்வியின் நோக்கம், 'இந்தா, சாப்பிடு!' என்று எதையாவது தருவதுதான்.

நிறைவாக, 'ஏவல் வினா', தமிழில் ஏவுதல் என்றால், கட்டளை இடுதல், அதன்பொருட்டுக் கேட்கும் கேள்விதன 'ஏவல் வினா', உதாரணமாக, 'என்னய்யா? சாப்டாச்சா?'. இந்தக் கேள்வியின் நோக்கம், 'போய்ச் சாப்பிடுய்யா' என்று ஏவுவதுதான்.

இப்போது, உங்களுக்கு ஒரு சின்னப் பயிற்சி, ஏதேனும் புத்தகத்திலோ, இணைய தளத்திலோ அல்லது பத்திரிகையிலோ இடம்பெற்ற பேட்டிக் கட்டுரை ஒன்றை எடுத்துக்கொள்ளுங்கள், அல்லது, வசனங்கள் மலிந்த ஒரு கதைப் பகுதியை எடுத்துக்கொள்ளுங்கள், அதில் இடம்பெறும் ஒவ்வொரு கேள்வியும் மேற்சொன்ன ஆறு வகைகளில் எதில் அடங்கும் என்று யோசியுங்கள்.

வினாக்களில் ஆறு வகை, அப்போ, விடைகளில்?

அதற்கும் ஒரு நன்னூல் சூத்திரம் இருக்கிறது:

சுட்டு, மறை, நேர், ஏவல், வினாதல்,
உற்றது உரைத்தல், உறுவது கூறல்,
இனமொழி எனும் எண்ணிறையுள் இறுதி
நிலவிய ஐந்தும் அப் பொருண்மையின் நேர்ப!

அதாவது, ஆறு கேள்விகளுக்கு, நாம் எட்டுவிதமான பதில்களைச் சொல்லலாமாம்:

1. சுட்டு விடை
2. மறை விடை
3. நேர் விடை
4. ஏவல் விடை
5. வினாதல் விடை
6. உற்றது உரைத்தல் விடை
7. உறுவது கூறல் விடை
8. இனமொழி விடை

'சுட்டு விடை' என்பது, ஒன்றைச் சுட்டிக்காட்டிச் சொல்வது, உதாரணமாக, 'அதோ அந்த வழியா நடந்தா ஆத்தங்கரைக்குப் போகலாம்.'

'மறை விடை' என்பது, எதிர்க் கருத்தைச் சொல்வது. உதாரணமாக, 'இந்த வேலையைச் செய்வாயா?' என்ற கேள்விக்கு, 'செய்யமாட்டேன்' என்ற பதில்.

'நேர் விடை' என்பது, நேர்க் கருத்தைச் சொல்வது. உதாரணமாக, 'இந்த வேலையைச் செய்வாயா?' என்ற கேள்விக்கு, 'செய்வேன்' என்ற பதில்.

இங்கே ஒரு விஷயம், 'நேர்மறை எண்ணங்கள்' என்று படித்திருப்பீர்கள். எனக்குத் தெரிந்து, அப்படி எழுதுவது சரியல்ல, 'நேர் எண்ணங்கள்' போதும்

உதாரணமாக, மேலே சொன்ன சூத்திரத்தில் 'மறை, நேர்' என்ற பகுதியைக் கவனியுங்கள். 'நேர்' என்றால் 'நேர்'தான், குழப்பம் இல்லை, அதற்கு oppositeஆக 'எதிர்' என்று சொல்லாமல் 'மறை' என்று பயன்படுத்துகிறார் பவணந்தி முனிவர், தமிழில் இதன் அர்த்தம், எதிர்மறுத்தல்

ஆக, 'எதிர்மறை' என்றால், கொஞ்சம் ஸ்ட்ராங்காக இருமுறை 'எதிர்'க்கிறோம். அதுகூடக் கொஞ்சம் பரவாயில்லை. 'நேர்மறை' என்றால்? 'நேர் எதிர்' என்று அர்த்தமா?

சுருக்கமாகச் சொன்னால், 'நேர்மறை' என்று எழுதும் இடங்களில் 'நேர்' என்றுமட்டும் எழுதினால் போதும். 'எதிர்மறை' என்று எழுதும் இடங்களில் 'எதிர்' என்றோ, 'மறை' என்றோ எழுதினால்மட்டும் போதும்.

மீண்டும் விடை வகைகளுக்குத் திரும்புவோம், நான்காவது வகை, ஏவல் விடை, அதாவது, கட்டளை இடுதல். உதாரணமாக, 'இந்த வேலையைச் செய்வாயா?' என்ற கேள்விக்கு, 'நீயே செய்' என்ற பதில்.

ஐந்தாவது வகை, 'வினாதல் விடை', அதாவது, ஒரு கேள்விக்குப் பதிலாக இன்னொரு கேள்வியையே கேட்பது. உதாரணமாக, 'இந்த வேலையைச் செய்வாயா?' என்ற கேள்விக்கு, 'செஞ்சா எனக்கு என்ன தருவே?' என்ற பதில்.

அடுத்து, 'உற்றது உரைத்தல் விடை', அதாவது நடந்ததைச் சொல்வது. உதாரணமாக, 'இந்த வேலையைச் செய்வாயா?' என்ற கேள்விக்கு, 'நேத்துலேர்ந்து எனக்கு ஒரே தலைவலி' என்ற பதில்.

மாறாக, 'உறுவது கூறல் விடை' என்பது இனிமேல் நடக்கப்போவதைச் சொல்வது. உதாரணமாக, 'இந்த வேலையைச் செய்வாயா?' என்ற கேள்விக்கு, 'செஞ்சா என் உடம்பு வலிக்கும்' என்ற பதில்.

நிறைவாக, 'இனமொழி விடை', அதாவது, ஒரு கேள்விக்கு நேரடிப் பதில் சொல்லாமல் அதோடு தொடர்புடைய, அதே இனத்தைச் சேர்ந்த இன்னொரு விஷயத்தைச் சொல்வது. உதாரணமாக, 'கடைக்காரரே, உளுத்தம்பருப்பு இருக்கா?' என்ற கேள்விக்கு, 'துவரம்பருப்பு இருக்கு' என்ற பதில்.

'இந்த எட்டில் முதல் மூன்றும் நல்ல விடைகள், அடுத்த ஐந்தும் அதைவிட நல்ல விடைகள்' என்கிறார் நன்னூலை எழுதிய பவணந்தி முனிவர்.

உயிர் எழுத்துகளைப் பலவிதமான குறுக்குவெட்டுத் தோற்றங்களில் அலசி ஆராய்ந்துவிட்டோம், அடுத்து, மெய்யெழுத்துகளுக்குள் புகுவோம்.

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* வினா எழுத்துகள் (5)
* அக வினா, புற வினா
* சொல்லின் முன்பகுதியில்மட்டும் இடம் பெறும் வினா எழுத்துகள் (2)
* சொல்லின் பின்பகுதியில்மட்டும் இடம் பெறும் வினா எழுத்துகள் (2)
* சொல்லின் முன்பகுதியிலும் பின்பகுதியிலும் இடம் பெறும் வினா எழுத்துகள் (1)
* ஆறு வகை வினாக்கள் : அறி வினா, அறியா வினா, ஐயுறல் வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா
* எட்டு வகை விடைகள் : சுட்டு விடை, மறை விடை, நேர் விடை, ஏவல் விடை, வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக