செவ்வாய், 5 மே, 2015

இலக்கணம் அறிவோம் 3

தமிழில் 'மெய்' என்றால் உடம்பு, அது உயிரைச் சாராமல் தனித்து இயங்கமுடியாது. அதேபோல, உயிர் எழுத்துகளோடு இணைந்து மொழியை உருவாக்கும் முதல் எழுத்துகளை மெய் எழுத்துகள் என்று அழைக்கிறோம்.

க், ங், ச், ஞ் என்று தொடங்கும் இந்தப் பதினெட்டு எழுத்துகள் எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். அவற்றை 'ஒற்று எழுத்துகள்' என்றும் சொல்வார்கள், தலைமேல் ஒரு புள்ளி இருப்பதால், 'புள்ளி எழுத்துகள்' என்று அழைப்பவர்களும் உண்டு.

உயிரெழுத்துகளில் குறில், நெடில் உள்ளதுபோல், மெய்யெழுத்துகளில் கிடையாது. எல்லாமே அரை மாத்திரை அளவு கொண்ட, அதாவது, குறிலைவிடக் குறுகி ஒலிக்கக்கூடிய எழுத்துகள்தாம்.

பதினெட்டு மெய்யெழுத்துகளை, தலா ஆறு எழுத்துகளைக் கொண்ட மூன்று வகைகளாகப் பிரிப்பார்கள். இதுவும் நம் எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த விஷயம்தான்:

* வல்லினம்
* மெல்லினம்
* இடையினம்

இந்தப் பெயர்களே அந்த எழுத்துகளின் தன்மையை நமக்கு உணர்த்திவிடும். 'வல்லினம்' அல்லது 'வல்லெழுத்துகள்' என்பவை மேஜைமேல் தட்டிப் பேசுவதுபோல் வன்மையாக ஒலிக்கக்கூடியவை, 'மெல்லினம்' அல்லது 'மெல்லெழுத்துகள்' பூவால் ஒற்றுவதுபோல் மென்மையாக ஒலிக்கக்கூடியவை, இந்த இரண்டு முனைகளுக்கும் இடையே உள்ளவை 'இடையின' எழுத்துகள்.

வல்லின, மெல்லின, இடையின வகையைச் சார்ந்த எழுத்துகள் எவை என்பதைச் சின்னப் பிள்ளைகூட அறியும். இந்த எளிய சூத்திரப் பாடலின்வழியாக:

கசடதபற வல்லினம்
ஙஞணநமன மெல்லினம்
யரலவழள இடையினம்

மூவகை மெய்யெழுத்துகளை நினைவில் வைத்துக்கொள்வதற்கு இந்தப் பாடல் உதவினாலும், அடிப்படையில் இதில் ஒரு சின்னப் பிரச்னை இருக்கிறது. க, ச, ட போன்றவை மெய்யெழுத்துகள் அல்ல, உயிர்மெய் எழுத்துகள். அதற்காக 'க்ச்ட்த்ப்ற் வல்லினம்' என்று பாடினால் பல் தெறித்துவிடும்!

ஆகவே, இந்தச் சூத்திரத்தில் வரும் ஒவ்வோர் எழுத்தின் தலையிலும் ஒரு புள்ளி வைத்து மனத்துக்குள் படித்துக்கொள்ளவேண்டும். அதாவது, க், ச், ட், த், ப், ற் வல்லினம்… இப்படி!

அது சரி, மெய்யெழுத்துகளை இப்படி மூன்று வகையாகப் பிரிக்கவேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது?

மறுபடி, உச்சரிப்புதான் காரணம். பதினெட்டு மெய்யெழுத்துகளையும் நாம் மூன்று வெவ்வேறுவிதமாக உச்சரித்தால்தான் அவற்றின் சரியான ஒலி கிடைக்கும்:

* வல்லின எழுத்துகள், மார்பிலிருந்து தொடங்கி ஒலிக்கவேண்டியவை (சொல்லிப்பாருங்கள்!)
* மெல்லின எழுத்துகள், மூக்கிலிருந்து ஒலிக்கவேண்டியவை
* இடையின எழுத்துகள், மார்புக்கும் மூக்குக்கும் இடையே, அதாவது கழுத்திலிருந்து ஒலிக்கவேண்டியவை

இந்த உச்சரிப்புமுறையை நாம் நன்கு நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். காரணம், தமிழில் பெரும்பாலான எழுத்துகள் (18 மெய், 216 உயிர்மெய்) இந்த முறையில்தான் உச்சரிக்கப்படுகின்றன.

அதாவது, நாம் 'கி' என்று சொன்னாலும், அது 'க்' என்ற வல்லின மெய்யெழுத்தில் தொடங்கி, பின் 'இ' என்ற உயிரெழுத்தின் தன்மையைப் பெற்று முடியும். ஆகவே, அதை மார்பிலிருந்து தொடங்கி உச்சரிக்கவேண்டும். இதே சூத்திரம்தான் மீதமிருக்கும் எல்லா எழுத்துகளுக்கும்!

மெய்யெழுத்துகளில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு முக்கியமான விஷயம், தமிழில் எந்தச் சொல்லும் மெய்யெழுத்தில் தொடங்காது.

இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு, ஒலிக்குறிப்புகள். உதாரணமாக, 'ச்சே', 'கதவு க்ரீச் எனச் சத்தமிட்டது' என்றெல்லாம் ஒரு சொல்லையன்றி, ஓர் ஒலியைக் குறிப்பிட்டு எழுதும்போதுமட்டும் இந்தக் கட்டுப்பாட்டை மீறலாம். அதையும் தவிர்க்கமுடிந்தால் ரொம்ப நல்லது.

அடுத்து, இன எழுத்துகள்.

முதலெழுத்துகள் முப்பதையும் சில குறிப்பிட்ட விதங்களாக ஜோடி சேர்த்துக் குறிப்பிடுவதைதான் 'இன எழுத்துகள்' என்கிறது இலக்கணம்.

எழுத்துகளை ஏன் இனம் பிரிக்கவேண்டும்?

இதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றை இந்த நன்னூல் சூத்திரத்தில் காணலாம்:

தானம், முயற்சி, அளவு, பொருள், வடிவு
ஆன ஒன்று ஆதி ஓர் புடை ஒப்பு இனமே!

அதாவது, கீழ்க்காணும் ஐந்து அம்சங்களில் ஒன்றோ, அல்லது பலவோ ஒத்துவருகிற எழுத்துகளை 'இன எழுத்துகள்' என்று அழைக்கிறோம்:

* ஒலி பிறக்கும் இடம்
* ஒலி எழுப்புவதற்கான முயற்சி செய்யும் விதம்
* ஒலி அளவு (மாத்திரை)
* பொருள்
* வடிவம்

உதாரணமாக, அ, ஆ என்ற இரண்டு உயிரெழுத்துகளை எடுத்துக்கொள்வோம். இவை இரண்டின் வடிவமும் பார்ப்பதற்கு ஒரேமாதிரி இருக்கிறது, இவற்றை உச்சரிக்கும் விதமும் ஒரேமாதிரி இருக்கிறது, இல்லையா?

இதனால், அ, ஆ ஆகியவை ஓர் இனம், இணை பிரியா நண்பர்கள் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். இதுபோல, முதலெழுத்துகளில் பல இனங்கள் உண்டு.

உயிர் எழுத்துகளில் அடுத்தடுத்து வரும் குறிலும் நெடிலும் இனமாகும். ஐ, ஔ ஆகிய இரண்டு நெடில்களுக்குமட்டும் இன எழுத்து கிடையாது. இப்படி:

* அ, ஆ
* இ, ஈ
* உ, ஊ
* எ, ஏ
* ஐ (தனி எழுத்து, இன எழுத்து இல்லை)
* ஒ, ஓ
* ஔ (தனி எழுத்து, இன எழுத்து இல்லை)

மெய் எழுத்துகளில், வல்லின எழுத்துகள் ஆறும், மெல்லின எழுத்துகள் ஆறோடு சேர்ந்து இனமாகும், இடையின எழுத்துகள் ஆறும் தனி இனமாகும். இப்படி:

* க், ங்
* ச், ஞ்
* ட், ண்
* த், ந்
* ப், ம்
* ற், ன்
* ய், ர், ல், வ், ழ், ள்

இன எழுத்துகளின் வகைகளைப் பார்த்துவிட்டோம், ஆனால், இவை எதற்காக என்பது இன்னும் புரியவில்லை. சும்மா எழுத்துகளை ஜோடி சேர்த்துவிட்டால் ஆயிற்றா? அதற்கு என்ன நோக்கம்?

இதற்குப் பல நோக்கங்கள் உண்டு. உதாரணமாக, கவிதை எழுதுகிறவர்கள் இன எழுத்துகளை வைத்து எழுதும்போது ஒலி நயம் கூடும்.

இதைப் புரிந்துகொள்வதற்கு, கீழே உள்ள இரண்டு வாக்கியங்களையும் அடுத்தடுத்து சொல்லிப்பாருங்கள்:

* அன்பே, ஆருயிரே!
* அன்பே, மான்விழியே!

இந்த இரண்டு வாக்கியங்களும் ஒரேமாதிரி ஒலிப்பவைதான். ஆனால், இரண்டாவது வாக்கியத்தைவிட, முதல் வாக்கியத்தைச் சொல்லும்போது ஒரு தனிப்பட்ட ஒலி அழகு சேர்ந்துகொள்ளும். அதைச் சொல்லும்போதே நம்மால் தெளிவாக உணரமுடியும்.

இதற்குக் காரணம், அ, ஆ இரண்டும் இன எழுத்துகள். அவற்றை அடுத்தடுத்த சொற்கள் அல்லது வாக்கியங்களின் தொடக்கத்தில் பயன்படுத்தும்போது, 'மோனை' என்கிற கவிதை அழகு சேர்கிறது.

கவிதைகளில் மோனையின் முக்கியத்துவத்தைப்பற்றி விளக்கமாகப் பேசுவதற்கு இது இடமல்ல. இப்போதைக்கு, இன எழுத்துகளைப் பேச்சில், எழுத்தில் பயன்படுத்துவது தனி நயம் என்பதைமட்டும் புரிந்துகொண்டால் போதுமானது.

இதற்குக் கவிஞர்களெல்லாம் வேண்டாம், சாதாரணமாக நம் பாமரர்கள் சொல்லும் பழமொழிகளிலேயே இன எழுத்தைப் பயன்படுத்தி மோனை நயத்தைக் கூட்டுவார்கள். உதாரணமாக:

* அகல உழுவதைவிட, ஆழ உழு
* ஆடிக் காற்றில், அம்மியும் பறக்கும்
* ஊர் வாயை மூட, உலை மூடி உண்டா?
* ஒரு கை தட்டினால், ஓசை எழுமா?

இப்படி நூற்றுக்கணக்கான உதாரணங்களைச் சொல்லமுடியும். இன எழுத்துகளின் மிகப் பிரபலமான பயன்பாடு, இந்த மோனை நயம்தான்.

மெய்யெழுத்துகளைப் பொறுத்தவரை, இன எழுத்துகளால் வேறுவிதமான பயன்பாடு உண்டு, இரண்டு சொற்கள் இணைவதற்கான புணர்ச்சி இலக்கணத்தில்.

இந்தத் தொடரில் புணர்ச்சி இலக்கணம்பற்றி விரிவாகப் பேசவிருக்கிறோம். இப்போதைக்கு, இன எழுத்துகளின் முக்கியத்துவத்தை உணர்த்த ஒரே ஒரு சிறிய உதாரணத்தைமட்டும் பார்ப்போம்.

'பூந்தொட்டி' என்ற வார்த்தையை எடுத்துக்கொள்ளுங்கள், அது 'பூ' மற்றும் 'தொட்டி' என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து உருவானது. அதாவது, பூ + தொட்டி = பூந்தொட்டி

ஆனால், 'பூ', 'தொட்டி' இரண்டிலும் இல்லாத ஒரு புதிய எழுத்து (ந்) இங்கே தோன்றியிருக்கிறது. அது எப்படி?

இதற்கான இலக்கண சூத்திரம், 'பூப் பெயர் முன் இன மென்மையும் தோன்றும்'. அதாவது, 'பூ' என்ற சொல்லுக்கு அருகே ஒரு வல்லின எழுத்து வந்தால், அதன் இன மென்மை, அதாவது, அதே இனத்தைச் சேர்ந்த மெல்லின எழுத்து அங்கே தோன்றும்.

பூ + தொட்டி … இங்கே 'பூ' என்ற சொல்லுக்கு அருகே 'த்' என்ற வல்லின எழுத்து வந்துள்ளது, அதன் இனத்தைச் சேர்ந்த மெல்லின எழுத்து 'ந்' (மேலே உள்ள பட்டியலைப் பார்க்கவும்), ஆகவே, பூ + தொட்டி = பூந்தொட்டி.

வேறோர் உதாரணம் பார்ப்போம் : பூ + சோலை.

இங்கே 'பூ' என்ற சொல்லுக்கு அருகே 'ச்' என்ற வல்லின எழுத்து வந்துள்ளது. அதன் இனத்தைச் சேர்ந்த மெல்லின எழுத்து 'ஞ்', ஆகவே பூ + சோலை = பூஞ்சோலை.

மெய்யெழுத்துகளில் உள்ள இனங்களை நினைவு வைத்துக்கொள்வது சுலபம். பல சொற்களில் இவை மெல்லினம், அதன்பிறகு வல்லினம் என்ற வரிசையில் அருகருகே வந்து ஒலி நயத்தைக் கூட்டும்.

உதாரணமாக, க், ங் ஆகியவை இன எழுத்துகள். இவை அருகருகே வரும் சொற்கள், அங்கு, இங்கு, தங்கு, தங்கம், எங்கள், உங்கள் போன்றவை.

இதேபோல் மற்ற மெய்யெழுத்து இனங்களுக்கும் ஏகப்பட்ட உதாரணங்களைக் காட்டமுடியும் : பஞ்சு, குண்டு, பந்து, பாம்பு, இன்று போன்றவை.

இதோடு, நமது முதலெழுத்துப் பகுதி நிறைவு பெறுகிறது. ஒருவேளை முக்கியமான தலைப்புகள் ஏதேனும் விடுபட்டிருந்தால் சொல்லுங்கள், பின்னர் சேர்த்துக்கொள்ளலாம்.

அடுத்து, சார்பெழுத்துகள்!

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* மெய்யெழுத்துகள் (18)
* வல்லினம் (6), மெல்லினம் (6), இடையினம் (6)
* வல்லினம், மெல்லினம், இடையினம் ஒலி தொடங்கும் இடம்
* இன எழுத்துகள்
* எழுத்துகளை இனம் பிரிப்பதற்கான அம்சங்கள்
* உயிர் இன எழுத்துகள், மெய் இன எழுத்துகள்
* மோனை
* பூப்பெயர்ப் புணர்ச்சி
* அருகருகே வரும் வல், மெல் இன எழுத்துகள்



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக