ஞாயிறு, 17 மே, 2015

, இலக்கணம் அத்தியாயம் 9

voice

கல்லூரி மாணவர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். 'எப்படி இருக்கிறது வாழ்க்கை?' என்று நான் குசலம் விசாரித்தபோது, 'ரொம்பப் பறபறப்பா இருக்குங்க' என்றார்.

'நீங்க என்ன ஏரோநாடிகல் எஞ்சினியரிங்கா படிக்கறீங்க?' என்றேன் கடிக்கும் நோக்கத்துடன்.

'இல்லையே, கம்ப்யூட்டர் சைன்ஸ்!' அப்பாவியாகப் பதில் சொன்னார்.

எஅப்புறம் எதுக்குப் பறபறப்பெல்லாம்? சிம்பிளா பரபரப்புன்னு சொன்னாப் போதுமே!'

அவருக்கு நான் என்ன சொல்லவருகிறேன் என்றே புரியவில்லை. காகிதத்தில் 'பரபரப்பு' என்று எழுதிக்காட்டி 'சரிதானே?' என்றார்.

'இது சரிதான், ஆனா பேசும்போது பறபறப்புன்னு சொல்றீங்க, இடையின ரகரத்துக்குப் பதிலா வல்லின றகரம் வருது.'

'சின்ன வயசுலேர்ந்தே இந்த ர, ற, ல, ழ, ள, ண, ன, ந எல்லாம் எனக்கு ரொம்பக் குழப்பம் சார்' என்று முகம் சோர்ந்தார் அவர், 'ஸ்கூல்ல எங்க தமிழ் வாத்தியார் என்னைக் கண்டபடி திட்டுவார், சரியாப் புரியலைன்னு சொன்னா, நாக்கு ஒழுங்கா மடங்கினா எல்லாம் புரியும்ன்னு அதட்டுவார்.'

அவர் சொல்வது ஓரளவுதான் உண்மை. வெறுமனே நாக்குமட்டும் மடங்கினால் போதாது, தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பு அதற்கு முன்பாகவே தொடங்கிவிடுகிறது.

சரி, ஒரு மொழிக்கு உச்சரிப்பு எந்த அளவுக்கு முக்கியம்?

கொஞ்சம் சிக்கலான விவாதம்தான் இது. சரியாக உச்சரித்துப் பழகாதவர்கள், அல்லது அதில் குழப்பம் உள்ளவர்கள், 'செய்தி சென்று சேர்ந்தால் போதுமே' என்பார்கள். 'பறபறப்பு' என்று அந்த இளைஞர் தவறாக உச்சரித்தபோதும், நான் அதைப் 'பரபரப்பு' என்று புரிந்துகொண்டுவிட்டேனல்லவா? அதற்குமேல் என்ன வேண்டும்?

இந்த வாதம் எல்லா இடங்களிலும் பயன்படாது. உதாரணமாக, 'மரப்பேனா' என்றால் ஓர் அர்த்தம், அதையே 'மறப்பேனா' என்று உச்சரித்தால் முற்றிலும் மாறுபட்ட இன்னோர் அர்த்தம். இதுபோல் குழப்பம் தரும் இணைச் சொற்கள் தமிழில் ஏராளமாக உண்டு:

* பல்லி, பள்ளி
* இரங்கு, இறங்கு
* இரை, இறை
* ஊன், ஊண்
* தன்மை, தண்மை
* அலை, அளை, அழை
* வால், வாள், வாழ்

இப்படி இன்னும் நிறைய சொல்லமுடியும். இந்த இணைச் சொற்களை அடிப்படையாக வைத்து நகைச்சுவைத் துணுக்குகளும் சமத்கார வாசகங்களும் கவிதை(?)களும் எக்கச்சக்கம். (உதாரணம்: பணி செய்வது தொண்டர், பனி செய்வது ஐஸ் க்ரீம் கடைக்காரர்!)

அப்படிக் குழப்பமே வராவிட்டாலும்கூட, தமிழ் எழுத்துகளை இப்படிதான் உச்சரிக்கவேண்டும் என்று ஒரு தெளிவான இலக்கணம் இருக்கிறது. சரியாக எழுதுவது எந்த அளவு முக்கியமோ, அதே அளவு, சொல்லப்போனால் அதைவிட அதிகமாகவே சரியாகப் பேசுவதும் முக்கியம் என்கிற அக்கறை நமக்கு வரவேண்டும். காரணம், தமிழைப் படிக்கிறவர்களைவிட, கேட்கிறவர்கள் அதிகம்.

அந்த அக்கறையைக் கோட்டைவிட்ட காரணத்தால்தான், வானொலி, தொலைக்காட்சியில் தொடங்கி சினிமாப் பாட்டுகள், வசனங்கள்வரை சகலத்திலும் பிழை மலிந்த உச்சரிப்புகளைப் பார்க்கிறோம். தெரியாமல் தவறு செய்பவர்கள் ஒருபக்கம், ஸ்டைலுக்காக வேண்டுமென்றே தமிழை மாற்றி உச்சரிப்பவர்கள் இன்னொருபக்கம்.

தமிழின் அழகு, அதைச் சரியாக உச்சரிப்பதில் இருக்கிறது. ஒழுங்காக உச்சரித்தால் அத்துணை இனிமையாக இருக்கும், அதையே மாற்றி உச்சரித்தால் காது வலிக்கும். சந்தேகமிருந்தால், உதித் நாராயண் பாடிய பாடல்களைத் தொடர்ந்து இருபத்தேழு நிமிடங்கள் கேட்டுப்பாருங்கள்.

பெரும்பாலானோர் நினைப்பதுபோல், தமிழ் உச்சரிப்பு சிரமமான விஷயமே அல்ல. மிகச் சில எழுத்து இணைகளைத்தவிர மற்ற எல்லாம் எளிமையாக உச்சரிக்கக்கூடியவை, குழப்பமே இல்லாதவை.

இருந்தாலும், ஒவ்வோர் எழுத்தையும் எங்கிருந்து தொடங்கி, எங்கே கொண்டுவந்து எப்படி உச்சரிக்கவேண்டும் என்று இலக்கண நூல்கள் புட்டுப்புட்டு வைத்திருக்கின்றன. அவற்றைப் புரிந்துகொண்டு உச்சரித்துப் பழகினால் சில நாள்களில் இருக்கிற குழப்பமெல்லாம் தீர்ந்துவிடும்.

குறிப்பாக, இதை ஒரு விளையாட்டுபோல சொல்லித்தந்தால், குழந்தைகள் இதை லட்டுமாதிரி பிடித்துக்கொள்வார்கள். 'என் பிள்ளை எவ்ளோ ஸ்பஷ்டமா இங்க்லீஷ் பேசறான்' என்று பெருமைப்படுகிற பெற்றோர் அவ்வப்போது தமிழையும் கேட்டுக் கைதட்டலாம்.

அது சரி, இப்போது நாம் பழகவேண்டியது எழுத்து உச்சரிப்பா? அல்லது, சொல் உச்சரிப்பா?

தமிழில் அந்தப் பிரச்னையே இல்லை. இங்கே எழுத்து உச்சரிப்பைக் கற்றுக்கொண்டால் போதும், சொல் உச்சரிப்பு என்று தனியாக எதையும் படிக்கவேண்டாம்.

உதாரணமாக, ஆங்கிலத்தில் 'C' என்ற எழுத்தை 'சி' என்று உச்சரிக்கப் பழகுகிறோம். ஆனால் அதுவே 'Car' என்ற சொல்லில் வரும்போது 'க' என்ற உச்சரிப்போடு வருகிறது.

ஆனால் தமிழில் அந்தக் குழப்பங்கள் கிடையாது. 'சி' என்ற எழுத்து எந்தச் சொல்லில் வந்தாலும் அதை 'சி' என்றுதான் உச்சரிப்போம். சில நேரங்களில் ச்சி, ஜி என்று சிறு மாற்றங்கள் வரக்கூடுமேதவிர, சம்பந்தமே இல்லாமல் 'க' என்று உச்சரிப்பு மாறாது.

ஆங்கிலத்தைக் குறைத்துப் பேசுவதற்காக இதைச் சொல்லவில்லை. தமிழ் உச்சரிப்பு பழகுவது மிக எளிது என்பதற்காகச் சொல்கிறேன். பன்னிரண்டு உயிரெழுத்துகள், ஓர் ஆய்த எழுத்து, பதினெட்டு மெய்யெழுத்துகள் என்று மொத்தம் 31 ஒலிகளைப் பழகிக்கொண்டுவிட்டால் போதும். தமிழில் உள்ள லட்சக்கணக்கான சொற்களையும் எந்தப் பிழையும் இல்லாமல் சரியாக உச்சரிக்கலாம்.

பீடிகை போதும். தமிழ் உச்சரிப்புக்கான உடல் பாகங்களை முதலில் பட்டியல் போட்டுவிடுவோம்.

உண்மையில், எழுத்துகளை உச்சரிக்க உதவும் இந்த உடல் பாகங்களை இரண்டு பிரிவுகளாகப் படிக்கவேண்டும். நம்முடைய வசதிக்காக, அவற்றைத் தொட்டி, குழாய் என்று குறிப்பிடுவோம்.

அதென்ன தொட்டி, குழாய்?

வீட்டில் நாம் குழாயைத் திறந்தால் நீர் கொட்டுகிறது. ஆனால் உண்மையில் மேலே தொட்டியில் உள்ள நீர்தான் இப்போது குழாய் வழியே வருகிறது.

ஒருவேளை அந்தத் தொட்டியில் நீருக்குப் பதில் தேனோ பாலோ இருப்பதாக வைத்துக்கொள்வோம். அப்போது நாம் குழாயைத் திறந்தால் தேன் அல்லது பால் கொட்டும்.

ஆக, தொட்டியில் என்ன இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் குழாயில் வருவது மாறும். வெறுமனே குழாயைமட்டும் பார்த்துக் குழம்பிக்கொண்டிருக்கக்கூடாது.

அதுபோல, தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பும் ஓர் இடத்தில் தொடங்குகிறது (அதை நாம் 'தொட்டி' என்று அழைப்போம்), இன்னோர் இடத்தில் வெளிவருகிறது (அதை நாம் 'குழாய்' என்று அழைப்போம்). மேல்பார்வைக்குக் குழாய்மட்டும்தான் தெரியும், ஆனால் நம் கவனம் தொட்டியிலும் இருக்கவேண்டும்.

இதைப் புரிந்துகொள்ள மிகச் சுலபமான உதாரணம், 'ப' என்ற எழுத்து. அதை நீங்கள் எப்படி உச்சரிக்கிறீர்கள் என்று யோசித்துப்பாருங்கள், சொல்லிப்பாருங்கள்.

மேலுதடும் கீழுதடும் கண நேரம் சேர்ந்து பிரிகிறது. 'ப' என்ற ஒலி உண்டாகிவிடுகிறது. அவ்வளவுதான்.

ம்ஹூம், அதே மேலுதடும் அதே கீழுதடும் அதே கண நேரம் சேர்ந்து பிரியும்போது, 'ம' என்ற ஒலியும் உண்டாகிறதே. அது எப்படி?

இதற்குதான் குழாயைப் பார்த்துக்கொண்டு நிற்கக்கூடாது. தொட்டி எது என்று கவனிக்கவேண்டும். தொட்டி மாறினால் அதே குழாயிலிருந்து தண்ணீருக்குப் பதில் தேனோ பாலோ வரக்கூடும்!

'ப' என்ற எழுத்து, நம்முடைய மார்பிலிருந்து பிறக்கிறது. பின்னர் உதடுகளில் வெளிப்படுகிறது. மார்புதான் தொட்டி, உதடுதான் குழாய்.

'ம' என்ற எழுத்து, நம்முடைய மூக்கிலிருந்து பிறக்கிறது. பின்னர் உதடுகளில் வெளிப்படுகிறது. அதே குழாய்(உதடு)தான், ஆனால் வேறு தொட்டி. ஆகவே 'ப' என்ற ஒலி அன்றி, 'ம' என்ற இன்னோர் ஒலி கிடைக்கிறது.

இப்படித் தமிழில் ஒவ்வோர் எழுத்தும் எங்கிருந்து பிறக்கிறது (தொட்டி), எங்கே வெளிப்படுகிறது (குழாய்) என்று தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. நன்னூலும் தொல்காப்பியமும் இதை மிக அழகாகப் பதிவு செய்துள்ளன.

நம் உடலில் உள்ள தொட்டிகள், அதாவது ஒலி பிறக்கும் இடங்கள் நான்கு. அவை:

* மார்பு
* கழுத்து
* மூக்கு
* ஒட்டுமொத்தத் தலை

அடுத்து, குழாய்கள், அதாவது ஒலி வெளிப்படும் இடங்கள் நான்கு. அவை:

* பல்
* உதடு
* நாக்கு
* அண்ணம்

மற்றதெல்லாம் புரிகிறது. அதென்ன அண்ணம்?

சாப்பாடு அல்ல, பாலில் இருந்து தண்ணீரைப் பிரித்துப் பருகும் வெள்ளைப் பறவையும் அல்ல, அவையெல்லாம் 'அன்னம்', இது 'அண்ணம்', நம்முடைய உடல் பாகங்களில் ஒன்று, ஆனால் நாம் பேச்சுவழக்கில் அதிகம் பயன்படுத்தாத சொல்.

'அண்ணம்' என்பது வாயின் மேல் பகுதி. உங்கள் நுனி நாக்கினால் அதனை வருடிப் பார்த்தால் லேசாகக் கூச்சம் ஏற்படும். சிலர் பேசமுடியாமல் தவிக்கும்போது, 'என்ன? நாக்கு மேலண்ணத்துல ஒட்டிக்கிச்சா?' என்பார்கள்.

வேடிக்கையாகத் தோன்றினாலும், இது மிகவும் உண்மையான வாசகம். ஒருவருடைய நாக்கு சுழலாமல் எங்கேயாவது ஒட்டிக்கொண்டுவிட்டால் போச்சு, பெரும்பாலான எழுத்துகளை உச்சரிக்கமுடியாது.

நாக்கு, அண்ணம் போன்றவற்றைப்பற்றிப் பின்னர் 'குழாய்'களை விவரிக்கும்போது விரிவாகப் பார்ப்போம். இப்போது நாம் 'தொட்டி'களைக் கவனிக்கவேண்டியிருக்கிறது.

நம் உடலில் நான்கு உச்சரிப்புத் தொட்டிகள் இருப்பதாகப் பார்த்தோம். அவற்றில் எந்த எழுத்து எங்கே பிறக்கிறது?

  • உயிரெழுத்துகள் அனைத்தும் கழுத்திலிருந்து பிறக்கும்
  • மெய்யெழுத்துகளில் வல்லினங்கள் அனைத்தும் மார்பிலிருந்து பிறக்கும்
  • மெல்லினங்கள் அனைத்தும் மூக்கிலிருந்து பிறக்கும். யாருக்காவது ஜலதோஷம் பிடித்திருந்தால் 'மூக்கால பேசறான்' என்பார்கள், அப்போது கவனித்துப்பார்த்தால், அவர்கள் பேசுவதெல்லாம் மெல்லினம்போலவே கேட்கும்
  • இடையினங்கள் அனைத்தும், மார்புக்கும் மூக்குக்கும் இடையே, அதாவது கழுத்திலிருந்து பிறக்கும்
  • ஆய்த எழுத்துமட்டும் ஒட்டுமொத்தத் தலையிலிருந்து பிறக்கும்
  •  உயிர்மெய் எழுத்துகள் அனைத்தும் தங்களுடைய மெய்யெழுத்துகள் எங்கிருந்து பிறக்கிறதோ, அங்கிருந்தே பிறக்கும். உதாரணமாக, 'க்' என்ற மெய்யெழுத்து மார்பிலிருந்து பிறப்பதால், க, கா, கி, கீ போன்றவையும் மார்பிலிருந்துதான் பிறக்கும்

மேலே தந்திருக்கும் பட்டியலை நீங்கள் அப்படியே நம்பவேண்டியதில்லை. ஒவ்வோர் எழுத்தாக எடுத்துக்கொண்டு சத்தமாகச் சொல்லிப்பாருங்கள். எந்த ஒலி எங்கிருந்து பிறக்கிறது என்று நீங்களே தெளிவாக உணரலாம்.

சரி, ஒவ்வோர் எழுத்துக்கும் தொட்டிகள் எவை எவை என்று புரிந்துவிட்டது. குழாய்கள்?

ஒரு தொட்டியிலிருந்து கிளம்பும் திரவம், வெவ்வேறு குழாய்களின்வழியே வெளிவருவதுபோல, ஓர் உடல்பாகத்திலிருந்து பிறக்கின்ற எழுத்துகள், பின்னர் வெவ்வேறு உடல்பாகங்களின்மூலம் வெளிவருகின்றன. அதன்மூலம்தான் வெவ்வேறு சத்தங்கள் உண்டாகின்றன.

உதாரணமாக, உயிரெழுத்துகளைப்பற்றி முதலில் பார்ப்போம். இவை அனைத்தும் 'கழுத்து' எனும் தொட்டியிலிருந்து பிறப்பவை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். குழாய், உச்சரிக்கும் விதம்மட்டும் எழுத்துக்கு எழுத்து மாறும்:

  • அ, ஆ என்ற இரு எழுத்துகளும், உதடுகளை நன்கு பிரித்து வாயை அகலத் திறப்பதன்மூலம் பிறக்கும்
  • இ, ஈ என்ற இரு எழுத்துகளையும் உச்சரிப்பதற்கு, அதேபோல் உதடுகளை நன்கு பிரிக்கவேண்டும், அதேசமயம், நாக்கின் விளிம்பு மேல்பல்லின் அடியைத் தொடவேண்டும் (சொல்லிப்பாருங்கள்)
  •  எ, ஏ, ஐ ஆகிய மூன்று எழுத்துகளையும் உச்சரிக்கும் முறை இ, ஈ போலவேதான்
  • உ, ஊ என்ற இரு எழுத்துகளை உச்சரிப்பதற்கு, உதடுகளைக் குவிக்கவேண்டும்
  • ஒ, ஓ, ஔ என்ற மூன்று எழுத்துகளையும் உச்சரிக்கும் முறை உ, ஊ போலவேதான்

'என்னய்யா, ஆனா, ஆவன்னா எப்படிச் சொல்றதுன்னெல்லாம் ஒண்ணாங்கிளாஸ்லயே நாங்க படிச்சுட்டமே!' என்று சலித்துக்கொள்ளவேண்டாம். அதில் பிழை செய்பவர்களுக்கு இந்த விவரங்கள் உதவும்.

அடுத்து, மெய்யெழுத்துகளில் முதல் ஆறு:

  •  க, ங : அடி நாக்கு, அடி அண்ணத்தைத் தொடவேண்டும்
  •  ச, ஞ : நாக்கின் நடுப்பகுதி, அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடவேண்டும்
  •  ட, ண : நாக்கின் நுனிப்பகுதி, அண்ணத்தின் நுனிப்பகுதியைத் தொடவேண்டும்

இந்த ஆறு எழுத்துகளையும் சத்தமாகப் பலமுறை சொல்லிப்பாருங்கள். நாக்கும் அண்ணமும் கச்சிதமாக ஒன்றை ஒன்று தொட்டுக்கொண்டு ஜோடியாக நகர்வது ஒரு நடனத்தைப்போல் இருக்கும். இயற்கையில் பூவின் இதழ்கள் ஒத்திசைந்து அமைந்துள்ள ஒழுங்கைப் பார்க்கும்போது ஏற்படும் அதே வியப்பு உண்டாகும்.

இப்போது, மீதமுள்ள மெய்யெழுத்துகளைப் பார்த்துவிடலாம்:

  • த, ந : மேல் பல்லின் அடிப்பாகத்தை, நாக்கின் நுனி அழுத்தவேண்டும்
  • ப, ம : உதடுகள் இரண்டும் அழுந்தப் பொருந்தவேண்டும்
  • ய : நாக்கின் அடிப்பகுதி, அண்ணத்தின் அடிப்பகுதியைத் தொடவேண்டும் (க, ங போலவேதான், ஆனால் ய ஒலி கழுத்திலிருந்து பிறக்கும், இந்த மூன்று எழுத்துகளையும் சொல்லிப்பாருங்கள், நுணுக்கமான வித்தியாசம் புரியும்)
  • ர, ழ : நாக்கின் நுனிப்பகுதி அண்ணத்தைத் தடவவேண்டும்
  • ற, ன : நாக்கின் நுனிப்பகுதி அண்ணத்தில் நன்றாகப் பொருந்தவேண்டும்
  • ல : நாக்கின் விளிம்பு தடித்துக்கொண்டு, மேல் பல்லின் அடியைத் தொடவேண்டும்
  • ள : நாக்கின் விளிம்பு தடித்துக்கொண்டு, அண்ணத்தைத் தொடவேண்டும்
  • வ : மேல் பல் கீழ் உதட்டைத் தொடவேண்டும்

உயிர்மெய் எழுத்துகளின் உச்சரிப்பு எப்படி அமையும்?

முதலில், அவற்றில் உள்ள மெய்யெழுத்தை உச்சரிக்கவேண்டும் (மேற்சொன்ன முறைப்படி)

அதோடு சேர்த்து, அவற்றில் உள்ள உயிரெழுத்தை உச்சரிக்கவேண்டும் (மேற்சொன்ன முறைப்படி)

உதாரணமாக, 'கு' என்ற எழுத்தை உச்சரிக்க, முதலில் 'க்', பிறகு 'உ' ஆகிய உச்சரிப்புகளைக் கலக்கவேண்டும். அதாவது, அடி நாக்கு அடி அண்ணத்தைத் தொட (க்), பின்னர் உதடுகள் குவியவேண்டும் (உ).

இந்தப் பட்டியலில் கிட்டத்தட்ட ஒரேமாதிரி உச்சரிக்கப்படும் எழுத்துகளை நினைவில் வைத்துக்கொள்ள வசதியாகத் தொகுத்து வகைப்படுத்தித் தந்துள்ளேன். மற்றபடி இவை அனைத்தும் நன்னூல், தொல்காப்பியத்தில் உள்ளவைதான். அவை எழுதப்பட்டு இத்துணை ஆண்டுகளில் உச்சரிப்பில் எந்த மாற்றமும் கிடையாது.

இவற்றில் பெரும்பாலான எழுத்துகளை நீங்கள் ஏற்கெனவே சரியாக உச்சரிக்கப் பழகியிருப்பீர்கள். அவற்றை ஒருமுறை இந்தப் பட்டியலில் உள்ளபடி சொல்லிப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டுவிடுவது நல்லது. பின்னர், குழப்பம் வரும் எழுத்துகளைமட்டும் தனியே பயிற்சி எடுக்கலாம். உதாரணமாக:

    * ல, ள & ழ

* உதாரணங்கள்:

1. வாழைப்பழம் கொழகொழவென நழுவிக் கீழே விழுந்தது
2. பள்ளிக்குச் சென்ற அழகுப் பிள்ளைக்குப் பல்லி மிட்டாய் கிள்ளித் தா
3. திருவிழாவின்போது பலாப் பழமும் வாழைப் பழமும் களாக்காயுடன் தின்றோம்
4. சிலர் வளவளவென்று பேசி வழவழா கொழகொழா என்று உளறுவார்கள்

    * ர, ற

* உதாரணங்கள்:

1. ஓடுற நரியில ஒரு நரி சிறு நரி, சிறு நரி முதுகுல ஒரு பிடி நரைமயிர்
2. பருந்தைப் பார்த்த கருங்குயில் பரபரவென்று சிறகடித்துப் பறந்தது
3. பிறர்மீது இரக்கம் இல்லாதவர்கள் இறக்கம் காண்பது உறுதி
4. அரத்தால் அறுக்கலாம், அறத்தால் சிறக்கலாம்

    * ன, ண & ந

* உதாரணங்கள்:

1. நான் கண்ணனுடைய வீட்டின்முன்னால் நாவல் பழம் சாப்பிட்டேன்
2. அண்ணாந்து பார்த்தால் முந்நூறு காக்காய்
3. சின்னப் பையன் கன்னல் தமிழில் பாடியது இன்னும் என் கண்ணுக்குள் நிற்கிறது
4. பதநியும் பனம் பழமும் வாங்கப் பணம் ரெண்டு வேணும்

இப்படி இன்னும் ஏராளமான வார்த்தை விளையாட்டுகள் தமிழில் இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ் எழுத்தையும் எப்படிச் சரியாக உச்சரிக்கவேண்டும் என்று தெளிவாகப் படம் வரைந்து பாகம் குறிக்கும் கட்டுரைகள் பலவும் இணையத்தில் உண்டு. நம்முடைய இலக்கணப் பகுதிக்கு அவசியமான விஷயங்களைமட்டுமே இங்கே விவரித்துள்ளோம். மற்றவற்றைத் தேடிப் படித்துக்கொள்ளுங்கள்.

இத்துடன், தமிழ் எழுத்து இலக்கணத்தின் அடிப்படைப் பகுதிகள் நிறைவு பெறுகின்றன. அடுத்த வாரம் சொல் இலக்கணத்தைப்பற்றிப் பேசத் தொடங்குவோம்!

அதற்குமுன்னால், இந்த அத்தியாயத்தில் நாம் பார்த்த முக்கியமான சொற்கள் / தலைப்புகள் / Concepts பட்டியலை இங்கே தருகிறேன், எதற்கு என்ன அர்த்தம், என்ன உதாரணம் என்று நினைவுபடுத்திப் பாருங்கள், ஏதேனும் புரியாவிட்டால், சிரமம் பார்க்காமல் மேலே சென்று ஒருமுறை படித்துவிடுங்கள்.

* உச்சரிப்பு பிறக்கும் இடங்கள் : தொட்டி (மார்பு, கழுத்து, மூக்கு, தலை)
* உச்சரிப்பு வெளிப்படும் இடங்கள் : குழாய் (பல், உதடு, நாக்கு, அண்ணம்)
* மார்பில் பிறக்கும் எழுத்துகள் (வல்லினம்)
* கழுத்தில் பிறக்கும் எழுத்துகள் (உயிரெழுத்துகள், இடையினம்)
* மூக்கில் பிறக்கும் எழுத்துகள் (மெல்லினம்)
* தலையில் பிறக்கும் எழுத்துகள் (ஆய்தம்)
* உயிர்மெய் எழுத்துகளின் பிறப்பிடம் (மெய்யெழுத்துகளின் பிறப்பிடம்)
* வெவ்வேறு எழுத்துகள் உச்சரிக்கப்படும் விதம் (உயிர், மெய், உயிர்மெய்)
* ல, ள, ழ, ர, ற, ன, ண, ந உச்சரிப்பு வித்தியாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக