இந்தியாவிலேயே முதல் முறையாக மேற்கு வங்கத்தில் திருநங்கை ஒருவர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மாணவர்கள், பேராசிரியர்கள், அதிகாரிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மனாபி பானர்ஜி.. இந்தப் பெயர் இப்போது மேற்குவங்கம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலமாகி விட்டது. சமூக வலைதளங்களில் மனாபிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இவர் ஒரு திருநங்கை. ஆனால், படித்து கல்லூரி பேராசிரியரானார். அதன்பின் ஆயிரமாயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டார். இவரது சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கல்லூரி முதல்வர் பதவிகளுக்கு தகுதியுள்ளவர்களை தேர்வு செய்யும் கல்விக் குழுவின் தலைவர் தீபக் கே.கர் கூறும்போது, "கிரிஷ்நகர் பெண்கள் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள மனாபி, ஜூன் 9-ம் தேதி பொறுப்பேற்பார். கடந்த 20 ஆண்டுகளாக கல்லூரி பேராசிரியராக மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். அவருக்கு சிறந்த நிர்வாக அனுபவமும் உள்ளது. வழக்கமான நடைமுறைகளின்படிதான் தேர்வு நடந்தது. அதன்பின், ஒருமனதாக மனாபியை முதல்வராக தேர்ந்தெடுத்தோம்" என்றார்.

திருநங்கைகளின் உரிமைகளுக்காக செயல்பட்டு வரும் 'மித்ரு அறக்கட்டளை' இயக்குநர் ருத்ராணி செட்ரி கூறும்போது, "எங்களுக்கு இது பெருமைப்பட்டுக் கொள்ளும் நேரம். மூன்றாம் பாலினத்தவர்களை மக்கள் ஏற்றுக் கொள்ள தொடங்கி விட்டனர். மனாபியை முதல்வராக நியமித்ததற்கு ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும்" என்றார்.

திருநங்கைகளை மூன்றாம் பாலினத்தவர்களாக சட்டப்பூர்வமாக அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. அதன்மூலம் சிறுபான்மையினர் அந்தஸ்தும், கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதார திட்டங்களில் முன்னுரிமையும் இவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின், சில கல்லூரிகளில் சேர்க்கை விண்ணப்பத்தில் மூன்றாம் பாலினத்தவர் என்று குறிப்பிடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

தற்போது விவேகானந்தா சடோபார்ஷிகி மகாவித்யாலா கல்லூரியில், பெங்காலி பேராசிரியராக உள்ள மனாபி பானர்ஜி, ஜூன் 9-ம் தேதி கல்லூரி முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார்.

இந்நிலையில், மனாபி பானர்ஜி தான் முதல்வராகப் பணிபுரியப் போகும் கிரிஷ்நகர் கல்லூரிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்றார். அவருடன் மனாபியின் வளர்ப்பு மகன் தேபேசிஷ் மனாபிபுத்ரோ, திருநங்கை தோழி ஜோதி சமந்தா ஆகியோரும் சென்றனர்.அங்கு பேராசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் மனாபியை உற்சாகத்தோடு வரவேற்றனர்.

திருநங்கைகளின் பரிதாப நிலை குறித்து மனாபி கூறியதாவது:

திருநங்கைகள் சந்திக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. அவற்றை தீர்க்க நிறைய மாற்றங்கள் வர வேண்டும்.குறிப்பாக உடல்ரீதியாக மாற்றங்கள் ஏற்பட்டு தவிக்கும் போது, பெரும்பாலான பெற்றோர் தங்கள் மகனுக்கு மனரீதியான பிரச்சினை என்றே நினைக்கின்றனர்.

பாலின மாற்று அறுவை சிகிச்சை பலருக்கு கனவாக இருக்கிறது. ஆனால், ஒரு சிலருக்கே அந்த அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிகிறது. இந்தப் பிரச்சினைகளால் சிக்கித் தவிக்கும் பல சிறுவர்களை சந்தித்திருக்கிறேன். அவர்களுக்கு பெற்றோரிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை. பெற்றோரின் ஒப்புதல் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்ய அவர்களால் முடியவில்லை. அதனால், குழந்தை பிறப்பை தடுக்கும் மாத்திரைகளை உட்கொள்ள தொடங்கி விடுகின்றனர். அதன்மூலம் ஈஸ்ரோஜன் தங்களை பெண்களை போல் பாவித்துக் கொள்ள உதவும் என்று நம்புகின்றனர். ஆனால், அந்த மாத்திரைகள் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இவ்வாறு மனாபி கூறினார்.