புதன், 6 மே, 2015

PG TRB TAMIL :ஐம்பெருங் காப்பியங்கள்-சிலப்பதிகாரம்

ஐம்பெருங் காப்பியங்கள்

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தும் பெருங்காப்பியங்கள்.தமிழில் தோன்றிய காப்பியங்களின் தனித்தன்மையையும் அவற்றின் சிறப்புகளையும் காணலாம்.


சிலப்பதிகாரம்


தமிழில் தோன்றிய முதல் காப்பியம் சிலப்பதிகாரம். சங்க இலக்கியத்திற்கும் பிற்கால இலக்கியத்திற்கும் பாலமாக அமைந்தது. கடைச்சங்க காலத்தைச் சேர்ந்தது. இதனை இயற்றியவர் இளங்கோவடிகள். இவர் சேரன் செங்குட்டுவனின் இளவல் ஆவார். இக்காப்பியம் சமண சமயத்தின் பெருமைகளைப் பல இடங்களிலும் பேசுகிறது. சங்க நூல்களைப் போன்று ஆசிரியப்பாவால் இயற்றப்பட்டிருப்பதாலும் செங்குட்டுவன் கதையைக் கூறுவதாலும் இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர். நற்றிணையில் 216 - ஆம் பாட்டில் வரும் 'ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி' என்ற தொடரும் புறநானூற்றில் வரும் கண்ணகியைப் பற்றிய குறிப்பும் சங்க காலத்திற்கு முன்பே நடந்த உண்மை நிகழ்ச்சியே இளங்கோவடிகளால் காப்பியமாக இயற்றப்பட அடிப்படையாக அமைந்தது என்பதை உணர்த்துகின்றன.


சிலப்பதிகாரத்தின் சிறப்பு


சிலப்பதிகாரம் புகார்க்காண்டம், மதுரைக்காண்டம், வஞ்சிக்காண்டம் ஆகிய மூன்று காண்டங்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 30 காதைகள் இந்நூலில் காணப்படுகின்றன. முத்தமிழ்க் காப்பியம், புரட்சிக்காப்பியம், குடிமக்கள் காப்பியம், தேசிய காப்பியம், மூவேந்தர் காப்பியம், போராட்டக் காப்பியம் என்று சிலப்பதிகாரம் பலவாறு போற்றப்படுகிறது.


இயல், இசை, நாடகம் இணைந்து அமைந்ததால் முத்தமிழ்க் காப்பியம் என்றும் உலகக் காப்பியங்கள் அனைத்துமே உயர்ந்த மக்கள், அரசர்கள், தேவர்களைக் காப்பியத் தலைவர்களாகக் கொண்டு அமைய, சிலப்பதிகாரம் சாதாரணக் குடிமக்களாகிய கோவலன், கண்ணகியைக் காப்பியத் தலைவர்களாகக் கொண்டதால் புரட்சிக் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றும் சிறப்புப் பெற்றுள்ளது.

பெண்ணின் பெருமையை முதன் முதலாகக் காப்பிய வடிவில் உணர்த்தியதோடு பெயரமைப்பிலும் புரட்சிக் காப்பியமாகத் திகழ்வது சிலப்பதிகாரம்.
கதையில் வரும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் காரணமாகத் திகழ்ந்த சிலம்பினைக் கதைத் தலைப்பாகக் கொண்டது. சோழ, பாண்டிய, சேர மன்னர்களின் பெருமைகளை முறையே புகார்க் காண்டத்திலும் மதுரைக் காண்டத்திலும் வஞ்சிக் காண்டத்திலும் கூறுவதால், தேசியக் காப்பியம், மூவேந்தர் காப்பியம் என்னும் சிறப்புப் பெயர்களைப் பெற்றுள்ளது.
கண்ணகி, கோவலன், மாதவி போன்றோர் வாழ்வில் சிக்கல்களை எதிர்கொள்ளும்போது அவர்களின் மனப் போராட்டத்தையும், சிக்கல்களைத் தீர்க்க அவர்கள் சமூகத்தோடு போராடும் புறப் போராட்டத்தையும் விளக்குவதால் போராட்டக் காப்பியம் என்ற சிறப்பையும் பெறுகிறது.

அரசவாழ்க்கை, வணிகர் வாழ்க்கை, குறவர் வாழ்க்கை, ஆயர் வாழ்க்கை எனச் சமூகத்தின் பல நிலைகளில் உள்ளவர்களின் வாழ்க்கையைத் துல்லியமாக எடுத்துரைக்கும் சமூகக் காப்பியமாகவும் திகழ்வது சிலம்பின் தனிச்சிறப்பு எனலாம். இனிச் சிலம்பின் கவிச்சிறப்புக்குச் சில எடுத்துக்காட்டுகள் காணலாம்.


வணிகக்குலத்தில் பிறந்து கணவனே வாழ்க்கை என எண்ணிய கண்ணகியின் வாழ்வில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. அம்மாற்றங்களினால் அவளின் பாத்திரம் வளர்ச்சியுறுகிறது. இவ்வளர்ச்சி ஆசிரியர் கூற்றாகவும், கோவலன், கவுந்தியடிகள், வாயிற்காப்போன் போன்றவர்களின் கூற்றாகவும் புலப்படுகிறது. சாலினி என்பவள் தெய்வமுற்று ஆடுகிறாள். அப்போது கண்ணகியின் சிறப்பைக் கூறுகிறாள்.


இவளோ, கொங்கச் செல்வி; குடமலையாட்டி
தென்தமிழ்ப் பாவை; செய்தவக் கொழுந்து
ஒருமா மணி ஆய் உலகிற்கு ஓங்கிய
திருமா மணி

(சிலம்பு.வேட்டுவரி, 47-50)


இக்கூற்று இளங்கோவடிகளின் பெண்மையைப் போற்றும் பண்பைக் காட்டுகிறது.

காப்பியக் கதையினை நாடகமாகக் கண்முன்னே விரித்துரைக்கும் இளங்கோவடிகள், இந்திர விழாவின் போது கடலாடச் செல்லும் கோவலன், மாதவி இருவரும் பிரியப் போவதையும் கோவலன் கண்ணகியிடம் திரும்புகிறான் என்பதையும் மிக அழகான ஒரு முன் காட்சியால் உணர்த்துகின்றார்.


கண்ணகி கருங்கணும், மாதவி செங்கணும்
உள்நிறை கரந்து, அகத்து ஒளித்து, நீர் உகுத்தன
எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன

(சிலம்பு.இந்திரவிழவு ஊர் எடுத்த காதை, 238-240)


என்ற வரிகளில் பிரிந்திருந்த கண்ணகியின் கண்களும் கூடியிருந்த மாதவியின் கண்களும் கண்ணீர் சிந்தின. ஆனால் துடிக்கும்போது கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடித்தன என்று கூறுகின்றார். இக்கண் துடிப்புகள் முறையே நன்மை, தீமை நேரப் போகின்றன எனக் குறிக்கும் சகுனங்கள் என்பது நம்பிக்கை. இவ்வாறு கூற வந்த கருத்தைக் குறிப்பினால் உணர்த்தியுள்ளார் இளங்கோவடிகள்.


கானல்வரி, ஆற்றுவரி, அம்மானைவரி, கந்துகவரி, குரவைப்பாட்டு, வள்ளைப்பாட்டு முதலான இசைப்பாடல்களும், நாட்டுப்புறப் பாடல் வடிவங்களும் இடம்பெற்று, பற்பல வகைப் பண்களும் இசைக்கருவிகளும் குறிப்பிடப்பட்ட சிலம்பு இசைக் காப்பியமாகவும் திகழ்கிறது. அக்காலத்தில் வழங்கிய நாட்டுப்புறப் பாடல்களைத் தழுவிய பாடல்கள் பல சிலம்பில் இடம்பெற்றுள்ளன.


பெரியவனை; மாயவனைப் பேர் உலகம் எல்லாம்
விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய
கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார் தம் கண்ணென்ன கண்ணே

(சிலம்பு.ஆய்ச்சியர் குரவை, 36)


ஆசிரியப்பாவும் வெண்பாவும் இலக்கியங்களில் மிகுந்திருந்த நிலையில் பல புதிய செய்யுள் வடிவங்களை இளங்கோவடிகள் புகுத்திப் புதுமை புரிந்தார். இச்செய்யுள் வடிவங்கள் பின்வந்த இடைக்கால இலக்கியங்களில் பெரிதும் பயன்படுத்தப்பட்டன.

''வடிவம் மட்டுமல்லாமல் பொருளிலும் பல புதுமைகள் புகுத்திய காப்பியமாகிய சிலப்பதிகாரம் தனக்கு முந்தைய சங்க இலக்கியத்திற்கும் பின்னைய பேரிலக்கியங்களுக்கும் பாலமாக அமைந்து ஒரு முக்கியமான காலக்கட்டத்தினைப் படம் பிடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது'' என்ற பேரா. மது.ச. விமலானந்தன் அவர்களின் கூற்று குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக