செவ்வாய், 12 மே, 2015

TRB PG TAMIL:சீவக சிந்தாமணி

ஐம்பெரும் காப்பியங்களில் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுவது சீவக சிந்தாமணிக் காப்பியம். இது ஒரு சமணக் காப்பியம். இயற்றியவர் திருத்தக்கதேவர். காப்பியத் தலைவனாகிய சீவகனின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை விவரிப்பதால் சீவக சிந்தாமணி எனப் பெயர் பெற்றது. சீவகன் எட்டுப் பெண்களை மணந்த நிகழ்ச்சிகள் பெரிதும் இடம் பெறுவதால் மணநூல் எனவும் பெயர் பெற்றது. சீவன்(உயிர்) முக்தி பெறுவதைச் சிறப்பிப்பதால் 'முக்தி நூல் ' எனவும் அழைக்கப்படுகிறது.


சீவக சிந்தாமணி நாமகள் இலம்பகம் முதல் முக்தி இலம்பகம் வரையிலான 13 இலம்பகங்களைக் கொண்டது; 3145 செய்யுட்களை உடையது; விருத்தப்பாவால் இயற்றப்பட்ட முதல் காப்பியம்; பின்வந்த பெருங்காப்பியங்கள் விருத்தப்பாவால் அமைய வழிகாட்டியாக அமைந்தது.


சீவக சிந்தாமணியின் சிறப்புகள்


சீவக சிந்தாமணி பல சிறப்புகளைக் கொண்டது. இக் காப்பியத்தின் சிறப்பைக் கூற வந்த மேனாட்டு அறிஞரான ஜி.யு. போப் அவர்கள் 'இச்சிந்தாமணி கிரேக்க காப்பியங்களான ஒடிசி, இலியட்டுக்கு ஒப்பானது' என்றும் திருத்தக்க தேவரைத் 'தமிழ்க்கவிஞர்களுள் இளவரசர்' என்றும் சிறப்பித்துள்ளார்.


சிவநெறியைப் பெரிதும் போற்றிய நச்சினார்க்கினியரால் உரை எழுதப் பெற்றதாலும் சைவனாகிய சோழனால் விரும்பிப் படிக்கப்பட்டமையாலும் சீவக சிந்தாமணியின் இலக்கியச் சிறப்பு கூறாமலேயே விளங்கும். சீவக சிந்தாமணியில் கற்பனை வளமும் உவமைச் சிறப்பும் மிகுந்து காணப்படுகின்றன. இயற்கை வருணனையும் நாட்டு வளமும் சிறந்து விளங்குகின்றன.


கழனியில் களையெடுக்கச் சென்ற காளையர் கண்களுக்கு அங்குள்ள குவளையும் தாமரையும் தம் காதலியரின் கண்கள் போலவும் முகம் போலவும் காட்சியளித்ததால் அவர்கள் அக்களைகளைப் பறிக்காமல் விட்டனர் என்ற இனிமையான கற்பனை அமைந்த பாடல் இதோ!


கண்ணெனக் குவளையும் கட்டல் ஓம்பினார்
வண்ணவாள் முகம் என மரையின் உள்புகார்
பண்ணெழுத்து இயல்படப் பரப்பி இட்டனர்
தண்வயல் உழவர் தம் தன்மை இன்னதே

சீவக சிந்தாமணிக் காப்பியத்தில் பல அறிவுரைகள் கூறப்படுகின்றன அரசன், அமைச்சனை ஆய்ந்து தேர்தல்; ஆசிரியர் சொற்படி நடத்தல்; பெற்றோர் சொல் போற்றல்; எவ்வுயிர்க்கும் அருளுடையனாதல்; நல்ல நண்பனைத் துணையாகக் கொள்ளல்; காமம், மது, ஊன் இவற்றால் தீமையே விளையும் என்பன போன்ற கருத்துகள் காப்பியம் எங்கும் பேசப்படுகின்றன. சமணக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட சீவக சிந்தாமணியில் சீவகன் வழிப்போக்கன் ஒருவனுக்கு ஞானம், காட்சி, ஒழுக்கம் ஆகிய தன்மைகளை விளக்குகிறான்.


மெய்வகை தெரிதல் ஞானம்; விளங்கிய பொருள்கள் தம்மைப்
பொய்வகை யின்றித்தேறல் காட்சி; ஐம்பொறியும் வாட்டி
உய்வகை உயிரைத் தேயா தொழுகுதல் ஒழுக்கம்; மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே இருவினை கழியும் என்றான்.

(கேமசரியார் இலம்பகம், 1436)


நிலையாமையை உணர்த்த வந்த காப்பியத்தில் இன்பச்சுவை அதிகமாகப் பேசப்பட்டாலும் அவ்வின்பம் நிலையற்றது என்பதை ஆங்காங்கே உணர்த்தியுள்ளார் திருத்தக்கதேவர். காலையில் குழந்தையாகத் தோன்றும் சூரியன் நண்பகலில் இளைஞனாக வெப்பம் மிகுந்து மாலையில் கிழவனைப் போலத் தளர்ந்து மறையும் காட்சியை,


குழவியாப் பிறந்து வெய்யோன் குமரனாய் முறுகியிப்பால்
விழைவுதீர் கிழவனாகி விழுக்கதிர் உலந்து வீழ

(கேமசரியார் இலம்பகம், 1503(1,2))


என்னும் அடிகளில் நிலையாமையோடு பொருத்திக் காட்டுகிறார்.


திருத்தக்கதேவர் சமண சமயத்தைச் சேர்ந்தவராக இருப்பினும் சமயப்பொறை கொண்டவராகவும் விளங்குகிறார். முருகன், பிரமன், திருமால், காமன் போன்ற கடவுளர்களைச் சிறப்பிக்கும் அடிகள் சீவக சிந்தாமணியின் மற்றோர் சிறப்பு எனலாம்.


நீல்நிற வண்ணன் அன்று நெடுந்துகில் கவர்ந்து

(நாமகள் இலம்பகம், 209)


போன்ற வரிகள் சில எடுத்துக்காட்டுகள்.


பயன் கலைகளும் நூற்கலைகளும் சிந்தாமணியில் மிகுதியாகப் பேசப்பட்டுள்ளன. சோதிடம், இசை, மருத்துவம், உணவு, உளவியல், விலங்கியல், படை, மந்திரம் போன்ற பல கலைகள் பற்றிய அரிய செய்திகள் பன்முக அறிவினைப் படிப்பவருக்குத் தருகின்றன எனலாம். இவ்வாறு பல்சுவைகளும் பொருந்திய தெய்வத்தன்மை மிக்க காப்பியமாக, சிந்திப்போர்க்குச் சிந்தித்ததைத் தரும் மணியாகத் திகழ்கிறது சீவகசிந்தாமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக