திங்கள், 18 மே, 2015

TRB PG TAMIL :பட்டினத்தார்

காவிரிப்பூம்பட்டினத்துப் பெருஞ்செல்வந்தராய் வாழ்ந்த பட்டினத்தார்.துறவு
நிலை வருவதற்கு முன் தன் மனம் இருந்த நிலையை
பொருளாசை, பெண்ணாசை, வித்தையாசை என்று மனம் ஆசையின்
வாய்க்கப்பட்டு அலைக்கழிப்புற்ற நிலையை அழகிய கண்ணிகளாகப்
பாடுகின்றார்.

"அறியாமை யாம் மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா
பிறியா வினைப் பயனால் பித்துப் பிடித்தனடா"

"மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா"
"மண்ணாசைப் பட்டேனை மன்ணுண்டு போட்டதடா"

"பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே"

"மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே;
திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே"

"வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே;
சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே"

"மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே"

"கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே
செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே"

இதுமட்டுமா, இந்த ஆசையைத் தூண்டும் ஐந்து புலனும் அவருக்கு
அடங்கா நிலையையும் தெரிவிக்கின்றார்.

"ஐந்து புலனும் அடங்கேனே என்குதே;
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே"

காமக் குரோதம் கடக்கேனே என்குதே
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே
அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே

என்று அழுகிறார்.

நேற்றிருந்தோர் இன்று இல்லை. கண்ணுக்குக் கண்ணெதிரே
உடல்களெல்லாம் கட்டையில் வேகக் கண்டும் இந்த உடலை நித்தியமான
தென்று எண்ணி நிரந்தரமாக இருப்போமென்று எண்ணி ஆங்காரம்
கொள்ளுகிறதே, நீர்க்குமிழி போன்ற இவ்வாழ்க்கை ஒரு பெருங்காற்றுக்குத்
தங்காதே. பெண்ணாசை மனதை அணுஅணுவாய்ச் சித்திர வதை செய்கிறதே.
அரும்பு விழியழகும், குதம்பை முலையழகும் உரகப்படத் தல்குல் அழகும்,
'ஆவி உண்பேன்' என்று என்னை அலைக்கழிக்கின்றதே'.

கன்னி வனநாதா ! கன்னி வனநாதா !
புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?

கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?
சீரியாய்க் கீடமாய்க் கெட்ட நாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ?
பூதமொடு தேவருமாய்ப் போனநாள் போதாதோ?
அன்னை வயிற்றில் அழிந்த நாள் போதாதோ?
மன்னவனாய் வாழ்ந்து மரித்த நாள்போதாதோ?
காமன் கணையால் கடைபட்டல் போதாதோ? (18-24)

"பிறப்பைத் தவிர்த்தையிலை புண்ணாக் கொண்டையிலை
இறப்பைத் தவிர்த்தையிலை; என்னென்று கேட்டையிலை"

என்று கூறி கன்னி வனநாதா என்னை உன்னோடு அழைத்துக்கொள் என்று
கெஞ்சுகின்றார்.

இறைவன் அவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொள்வாரா என்ன?
இன்னும் அவரது அருட்புலம்பலைக் கேட்கும் ஆசைப்பேறும் முதல்வன்
முறையீட்டைத் தொடர்ந்து அருட்புலம்பலும் தொடர்கின்றது.

குருவாகி வந்தானோ? குலம் அறுக்க வந்தானோ?
உருவாகி வந்தானோ? உரு அழிக்க வந்தானோ"(13)

"முன்னை வினையெல்லாம் முழுதும் அறுத்தாண்டி
தன்னை யறியவே தான் ஒருத்தி யானேண்டி" (21)

"சும்மா இருக்கவைத்தான் சூத்திரத்தை நான் அறியேன்
மாணிக்கத்துள் ஒளிபோல் மருவி இருந்தாண்டி"
உள்ளுண்வாய் நின்றவர்தம் உணர்வுக்கு உணர்வாண்டி (54)

உடலும் உயிரும்போல் உள்கலந்து நின்றாண்டி

அந்த இறைவன்
ஓசை ஒடுங்கும் இடம் ஓங்காரத்து உள்ஒளி காண்
பேசாமல் இருக்கும் பிரமம் இது என்றாண்டி"

என்று தாமறிந்தவற்றை கூறிப் புலம்புகின்றார். இந்தத் துறவியை இனி நாம்
பட்டினத்தார் என்றே குறிப்பிடுவோம்.


காவிரிப்பூம்பட்டினத்துப் பெருஞ்செல்வந்தராய் வாழ்ந்த சிறப்பு நோக்கி
இவரை எல்லோரும் பட்டினத்தார் என்றே அழைத்தனர்.

இவரது பாடல்களில் பெரும்பாலும் திருவாசக மணமும் நிறைந்து
காணப்படுகிறது. எடுத்துக்காட்டாக,

"புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?
கல்லாய் மரமாய்க் கழிந்தநாள் போதாதோ?
கீரியாய்க் கீடமாய்க் கெட்டநாள் போதாதோ?
நீரியாய் ஊர்வனவாய் நின்றநாள் போதாதோ? (21-22)

என்ற வரிகள் மாணிக்கவாசகரின்,

"புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்ல ஆ நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்"

என்ற சிவபுராண வரிகளை நினைவூட்டுகின்றன.

இன்னும் சில பாடல்கள் இராமலிங்க அடிகளாரின் பாடல்களை
மனத்தினில் நிழலாட வைக்கின்றன.

"தன்னை அறிந்தேன்டி ! தனிக்குமரி ஆனேன்டி
தன்னம் தனியே தனி இருக்கும் பக்குவமோ?

என்ற வரிகள் இராமலிங்கரின் 'தனித்திருக்க மாட்டேனடி' என்ற பாடலை
நினைவுறுத்துகின்றன.

மொத்தத்தில் இறைவனை உருக வைப்பதில் மாணிக்க வாசகரும்,
இராமலிங்க அடிகளாரும் கலந்த கலவை இந்தப் பட்டினத்தார் எனலாம்.



துறவுக்கோலத்தில் வீடு வீடாய்ப் பிச்சையெடுத்து உண்டு திரிவது
பட்டினத்தாரின் சகோதரிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட
அவமானத்தைத் தேடித் தரும் தம்பி தனக்கு இருந்தென்ன செத்தென்ன
என்ற எண்ணத்துடன் பட்டினத்தாரை விஷம் கலந்த ஆப்பம் கொடுத்துக்
கொல்லப் பார்த்தாள்.

தமக்கையின் கருத்தை அறிந்த பட்டினத்தார், 'தன்னப்பம் தன்னைச்
சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' என்று கூறி வீட்டின் கூரை மீது
அப்பத்தினை வீச அவ்வீடு தீப்பிடித்து எரிந்தது.

இப்படித் துறவியாய்த் திரிந்த காலத்து அன்னை இறந்த துயர் கேட்டு
அங்கே சென்று பச்சை வாழை மட்டை மீது அன்னையின் உடலைக் கிடத்தி
திருப்பதிகம் பாடித் தீயெழுப்பித் தம் அன்னையாருக்குச் செய்ய வேண்டிய
ஈமக்கிரியை செய்து முடித்தார். இவ்வளவு நாட்கள் அவ்வூரில் சுற்றித்
திரிந்தது இதற்காகத்தானே.



பிணம் சுடுவதற்கு முன்போ அல்லது புதைப்பதற்கு முன்போ
வாய்க்கரிசி இடுதல் என்ற சடங்கு உண்டு. உறவும் சுற்றமும் வாய்க்கரிசி
இடும் நேரத்தில் ஓதுவார் அல்லது பரியாரி இந்தப் பாடலைப் பாடுவார்.

"அரிசியோ நானிடுவே னாத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள
தேனே யமிர்தமே செல்வத் திரவியப்பூ
மானே யென வழைத்த வாய்க்கு"

என்று வாய்க்கரிசி இடுபவர் மனம் அழும் ஆசையை இப்பாடல்
எதிரொலிக்கிறது.

வெட்டியான் உடலை வறட்டியால் (எரு மூட்டையால்) மூடுகிறான். அந்த உடலை இறுதியாக ஒரு தடவை பார்க்கத் துடிக்கிறது.

"ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பே னினி"

பாசத்திற்கு ஆட்படாதார் ஆர்?

உடலுக்குத் தீ வைக்கச் சொல்லுகிறான் வெட்டியான். மனம் பதறுகிறது.
எத்தனை அருமையாய் எம்மைப் பாதுகாத்த 'தாய்' அவளுக்கா இந்தக்
கொடியவன் தீமூட்டச் சொல்லுகிறான். முடியாதய்யா முடியாது.

"முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாள் அளவும்
அந்திபக லாச்சிவனை யாதரித்துத் - தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
வெரியத் தழல்மூட்டு வேன்"

தம் குழந்தைப் பருவத்தில் சோறூட்டிய தாயாரின் கருணை முகம்
மனதில் நிழலாடுகிறது. பட்டினத்தார் துடித்துப் போகிறார்.

"வட்டிலிலுந் தொட்டிலிலும் மார்மேலுந் தோன் மேலுங்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்"

பட்டினத்தார் மனத்தடுமாற்றத்தை இன்னுமொரு பாடலும் கூறுகிறது.

"அள்ளியிடுவ தரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள
முகமேன் முகம்வைத்து முத்தாடி யென்றன்
மகனே யெனவழைத்த வாய்க்கு"

இனியும் காத்திருக்க இயலாது. அன்னை உடல் எரிக்குள் மூழ்குவதே
சரி என்று நினைத்த பட்டினத்தார் அவ்வுடலைப் புதிய முறையில்
பாட்டாலேயே தகனம் செய்கிறார்.

"முன்னை யிட்ட தீ முப்புரத்திலே
பின்னை யிட்ட தீ தென் னிலங்கையில்
அன்னை யிட்ட தீ அடிவயிற்றிலே
யானு மிட்ட தீ மூள்க மூள்கவே"

தீக்கடவுள் பட்டினத்தாரின் வாக்குக்குப் பணிந்து உடலைத்
தீக்கிரையாக்கினான். அப்போது பட்டினத்தாருக்கு உடல் பதறுகிறது.
வெந்தழலில் வேகும் அவ்வுடலைப் பார்த்து,

"வேகுதே தீயதனில் வெந்து பொடி சாம்பல்
ஆகுதே பாவியே னையகோ - மாகக்
குருவி பறவாமற் கோதாட்டி யென்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை"

தீ உடலை ஏறத்தாழ எரித்துவிட்டது. மேடாக இருந்த உடற்கூடு
சாம்பலாய்ப் போய்விட்டது.

"வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமு
முன்னையே நோக்கி யுகந்துவரங் கிடந்துஎன்
றன்னையே யீன்றெடுத்த தாய்"

இப்பொழுது அவர் மனம் ஏறத்தாழ பக்குவ நிலைக்கு வந்து விட்டது.
உடற் சாம்பல் சேகரிக்கப்படுகிறது. இனி என்ன? நேற்று உடலாய் நடமாடினாள். இன்று சாம்பலாய்த் தோற்றம் தருகிறாள். இதுதான் வாழ்க்கை
என்று சமாதானமடைகிறார்.

"வீற்றிருந்தா ளன்னை வீதிதனி லிருந்தாள்
நேற்றிருந்தா ளின்று வெந்து நீறானாள் - பாற்றெளிக்க
வெல்லீரும் வாருங்க ளேதென் றிரங்காம
லெல்லாந் சிவமயமே யாம்"

என்று முடித்து எல்லோரையும் பாற்றெளிக்க அழைக்கின்றார் பட்டினத்தார்.

இந்த பட்டினத்தார் பாடலிலே,

"மனையாளு மக்களும் வாழ்வுந் தனமுந்தன் வாயின்மட்டே
யினமான சுற்ற மயானம் மட்டே வழிக்கேது துணை
தினையாமள வெள் ளளவாகினு முன்பு செய்ததவந்
தனையாள வென்றும் பரலோகஞ் சித்திக்குஞ் சத்தியமே"

என்ற பாடல் பிரசித்தமானது. இப்பாடலைப் பிரசித்தமாக்கியவர் கவிஞர்
கண்ணதாசன்.
"வீடுவரை உறவு; வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை; கடைசிவரை யாரோ?"

என்று அவர் எழுப்பிய கேள்வி இந்தப் பட்டினத்தார் பாடலைப் பார்த்துதான்.



இதோ பட்டினத்தார் பாடலையும் ஒருமுறை பாட வேண்டாம்;
படித்துத்தான் பாருங்களேன்.

"ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்
அன்பு பொருந்தி உணர்வுகலங்கி ஒழுகிய விந்து ஊறுசுரோணிதம்
மீதுகலந்து
பனியில் ஓர்பாதி சிறிதுளிமாது பண்டியல் வந்து
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக