ஞாயிறு, 3 மே, 2015

TRB PG TAMIL:மீராவின் ‘கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்’.


 

மிழில் பரவசத்துடன் பலரால் வாசிக்கப்படுகிற காதல் கவிதைத் தொகுப்பு, மீராவின் 'கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள்'.

இதில் வரும் காதலன், தன் காதலியைப் பார்த்து இப்படிச் சொல்கிறான் -

கோடைக்காலம்

வரும்போதெல்லாம்

ஓர் எஸ்கிமோவைப்போல்

பனிப்பிரதேசத்தின்

பக்கம் திரியவேண்டும்

என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.


குளிர்காலம்

வரும்போதெல்லாம்

ஒரு புகைவண்டி ஓட்டியைப்போல்

நெருப்பின்பக்கம்

நிற்கவேண்டும்

என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.

இப்போது,

எந்தக் காலத்திலும்

உன் பக்கமே இருக்கவேண்டும்

என்று ஆசைப்படுகிறேன்.

இந்தக் கவிதைக்கு என்ன பொருள்? காதலித்தால் பனியும் குளிரும் தெரியாது என்பதா?

அதெப்படி? இயற்கை, காதலர்களை மட்டும் வேறுவிதமாக நடத்துமா என்ன? அவனுக்கும் குளிரும், வெயில் அடிக்குமே.

உண்மைதான். ஆனால், பக்கத்தில் அவள் இருந்துவிட்டால், குளிருக்குப் போர்வை ஆவாள், வெயிலுக்கு விசிறியும் ஆவாள். டூ-இன்-ஒன்.

புலமைப்பித்தன் ஒரு திரைப்பாடலில் இதை எழுதுகிறார் -

கோடைக் காலங்களில்,

குளிர் காற்று நீயாகிறாய்,

வாடை நேரங்களில்,

ஒரு போர்வை நீயாக வந்தாய்!


மீராவுக்கும் புலமைப்பித்தனுக்கும் ஒத்த சிந்தனை வரக் காரணமான பாடல், குறுந்தொகையில் இருக்கிறது. படுமரத்து மோசிக்கொற்றன் எழுதியது.

காதலன் வெளியூர் செல்ல வேண்டும். அப்போதுதான் வேலை பார்த்துப் பணம் சம்பாதிக்கலாம், அவளைத் திருமணம் செய்துகொள்ளலாம்.

ஆகவே, அவனைக் 'கிளம்பு, கிளம்பு' என்று விரட்டுகிறது மனம். அவன் அதைப் பரிதாபமாகப் பார்க்கிறான். 'அவசியம் போகணுமா?'

'ஆமா, பின்னே?'

'இப்போ கிளம்பிப் போய் என்ன பிரயோஜனம்?'

'பணம் வருமே!'

'ம்க்கும், பணத்தை வெச்சு என்ன பண்றது?' என்கிறான் அவன். 'என் காதலியைப் பிரிஞ்சுபோகணுமே, அதைவிட அந்தப் பணம் முக்கியமா?'

'என்ன பெரிய காதலி?'

'சும்மா சொல்லாதே, உனக்கு அவளைப் பத்தித் தெரியாது.'

'சரி, நீதான் சொல்லேன், கேட்கறேன்!'

'உனக்குப் பொதிகை மலை தெரியுமா?'

'ஏதோ, சுமாராத் தெரியும்!'

'எல்லாருக்குமே சுமாராதான் தெரியும்' என்கிறான் அவன். 'அந்தப் பெரிய மலையை முழுக்கத் தெரிஞ்சவங்க யாருமே கிடையாது!'

'அப்படிப்பட்ட பொதிய மலையோட உச்சியில, மக்கள் தெய்வங்களை வழிபடற இடங்கள் இருக்கு, பக்கத்துல சந்தனம் விளைஞ்சிருக்கு'.

'அந்தச் சந்தனத்தை அரைச்சுப் பூசினா, வெயில்காலத்துல நல்லா குளிர்ச்சியா இருக்கும். அந்தமாதிரி என் காதலி!'

'சரிதான்' கேலியாகச் சிரிக்கிறது அவன் மனம், 'வெயில்காலத்துல சந்தனம், குளிர்காலத்துல?'

'தாமரைப்பூ பார்த்திருக்கியா?'

'பார்த்திருக்கேனே, அதுக்கென்ன?'

'பகல் முழுக்க அந்தத் தாமரைப்பூ வெய்யில்ல நிக்கும், எல்லா வெப்பத்தையும் வாங்கிக்கும். சாயந்திரம் சூரியன் மறைஞ்சதும், அப்படியே குவிஞ்சு மூடிக்கும், மறுநாள் காலையில சூரியன் வர்றவரைக்கும், அந்த வெய்யிலைத் தனக்குள்ளே பூட்டி வெச்சுக்கும். மொத்த உலகமும் குளிரோட இருந்தாலும், அந்தத் தாமரைக்குள்ள மட்டும் வெப்பம் இருக்கும்'.

'அதுபோல, குளிர்காலத்துல எனக்கு அவ வெப்பம் தருவா, வெயில்காலத்துல குளிர்ச்சி தருவா.'

மன்னுயிர் அறியாத் துன்னரும் பொதியில்

சூருடை அடுக்கத்து ஆரம் கடுப்ப

வேனிலானே தண்ணியள் பனியே

வாங்குகதிர் தொகுப்பக் கூம்பி ஐஎன

அலங்கு வெயில் பொதிந்த தாமரை

உள்ளகத்து அன்ன சிறுவெம்மையளே!

இந்தச் சந்தனத்துக்குக் காதலில் இன்னொரு சிறப்பும் உண்டு. அன்றைய காதலர்கள் இரவு நேரத்தில் காதலியைச் சந்திக்க வரும்போது, சந்தனம் பூசிக்கொண்டுதான் வருவார்களாம். அது ஒரு குறிப்பு.


'சந்தன மார்பிலே

குங்குமம் சேர்ந்ததே'

என்று இளையராஜா ஒரு பாடலில் எழுதியிருப்பார். அவன் பூசியிருக்கிற சந்தனத்தில், அவளுடைய குங்குமம் சேர்கிற காட்சி அது.

நெற்றிக் குங்குமமா?

இல்லை, பெண்கள் மார்பில் குங்குமம் பூசுவார்களாம். ஆணைத் தழுவும்போது, அவன் தோளில் இருக்கிற சந்தனத்தோடு அவள் மார்பில் இருக்கிற குங்குமம் சேரும். கம்பராமாயணத்தில் ஒரு பாடல் இதை மிக அழகாக வர்ணிக்கிறது:

ஏழையர்

துணை முலைக் குங்குமச் சுவடும், ஆடவர்

மணி வரைப் புயத்து மென் சாந்தும் மாழ்கி...

இங்கே 'ஏழையர்' என்றால் பெண்கள், அவர்களுடைய மார்பகங்களில் பூசிக்கொண்டிருந்த குங்குமச் சுவடும், ஆண்கள் தங்களுடைய தோள்களில் பூசியிருந்த சந்தனமும் கலக்கிறது!

குறுந்தொகையில் இன்னொரு காதலி, 'அவன் பூசிகிட்டிருக்கிற சந்தனம் எனக்கு நோய் தருது, அதே நோயைத் தீர்த்தும் வைக்குது!' என்கிறாள்.

பக்கத்தில் இருந்த தோழி கேட்கிறாள், 'என்னடி சொல்றே? நோயைத் தர்ற விஷயமே எப்படி நோயைத் தீர்த்துவைக்கும்?'

திருவள்ளுவர் இதையே எழுதுகிறார் -

இருநோக்கு இவள் உண்கண் உள்ளது, ஒருநோக்கு

நோய் நோக்கு, ஒன்று அந்நோய் மருந்து.

இந்தப் பெண்ணுக்கு இரண்டுவிதமான பார்வைகள். ஆசையோடு பார்த்தால், என் நெஞ்சில் காதல் நோயைத் தருகிறாள். பிறகு, இன்னொரு பார்வையால் அதே நோய்க்கு மருந்து போட்டுக் குணமாக்குகிறாள்.

அவளுடைய பார்வையைப்போல, இவனுடைய சந்தனம். அதுவே நோய் தருகிறது, அதுவே நோயைத் தீர்த்துவைக்கிறது.

காதலி விளக்கத் தொடங்குகிறாள், 'என் காதலனோட ஊர்ல மரத்து உச்சியில பரண்ல இருக்கறவங்க வெளிச்சத்துக்காகவும் நறுமணத்துக்காகவும் மரக்கட்டைங்களைக் கொளுத்திவைப்பாங்க, அதெல்லாம் நட்சத்திரம் மாதிரி மின்னும்'.

'அந்த ஊரைச் சேர்ந்த என் காதலனோட சந்தனம் பூசின மார்பை நினைச்சா, எனக்குக் காதல் நோய் வருது, அதே மார்பைக் கட்டிகிட்டா, அந்த நோய் போயிடுது!'

மாடலூர் கிழார் எழுதிய அந்தக் குறுந்தொகைப் பாடல் -

சேணோன் மாட்டிய நறும்புகை ஞெகிழி

வானமீனின் வயின்வயின் இமைக்கும்

ஓங்குமலை நாடன் சாந்துபுலர் அகலம்

உள்ளின் உள்நோய் மல்கும்,

புல்லின் மாய்வது எவன்கொல் அன்னாய்!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக