ஞாயிறு, 3 மே, 2015

TRB PG TAMIL: தி.ஜ.ர. (திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன்).



1901-ல், திருவையாறுக்கு அருகில் உள்ள திங்களூரில் பிறப்பு. பள்ளிப் படிப்பு நான்காம் வகுப்பு வரைதான். ஆனாலும், தன் சுய முயற்சியினால் உலக சரித்திரம், விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார். ஒரு சமயம், ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் தலையங்கம்கூட எழுதினார். 1974-ல், காலமாகும் வரை சிறுகதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம் என்று பல்வேறு துறைகளில் சுமார் 50 புத்தகங்கள் எழுதினார்.

1938-ல் சந்தனக் காவடி என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்தது. 1947-க்குள் நான்கு பதிப்புகள் வெளிவந்தது அத்தொகுப்பு.  பிறகு விசை வாத்து, மஞ்சள் துணி, காளி தரிசனம், நொண்டிக் கிளி என்று பல சிறுகதைத் தொகுப்புகள் வந்தன. சுமார் நூறு சிறுகதைகள் எழுதியிருப்பார்.

 
 

மொழிபெயர்ப்பில் முக்கியமானவை - லூயி பிஷர் எழுதிய மகாத்மா காந்தி (600 பக்கங்களுக்கு மேற்பட்டது), ஆலிஸின் அற்புத உலகம், Wendell Willkie எழுதிய புகழ் பெற்ற பயண நூலான One World (இதை ஒரே உலகம் என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார்), ராஜாஜி சிறையில் இருக்கும்போது எழுதிய அபேதவாதம் என்ற ஆங்கில நூல், ஜிம் கார்பெட் எழுதிய குமாயுன் புலிகள்.

தமிழில் கட்டுரை என்ற வடிவத்தின் பிதாமகர்களாக இருந்தவர்கள், இரட்டையர் என்று அழைக்கப்பட்ட வ.ரா.வும் தி.ஜ.ர.வும்தான். அந்த இருவரிலும் தி.ஜ.ர.வின் பங்களிப்பு அதிகம் என்றே சொல்லலாம். காரணம், கண்ணதாசன் தன்னுடைய உரைநடைக்கு முன்னோடி என்று வனவாசத்தில் தி.ஜ.ர.வின் ஆஹா, ஊஹூ என்ற கட்டுரைத் தொகுப்பைக் குறிப்பிடுகிறார். ஜெயகாந்தன் தன்னுடைய முதல் சிறுகதைத் தொகுப்புக்கு வாங்கிய முன்னுரை தி.ஜ.ர.விடம் இருந்துதான்.

இவை தவிர, தமிழ்ப் பத்திரிகைத் துறையின் முன்னோடிகளில் ஒருவராகத் திகழ்ந்தார். தமிழ்க்கடல் ராய.சொக்கலிங்கத்தின் ஊழியனில் வ.ரா.வுடன் பணியாற்றினார். Timeபத்திரிகையை மாதிரியாகக் கொண்டு, 1939-ல் வைகோ என்று அப்போது அழைக்கப்பட்ட வை.கோவிந்தன் துவக்கிய 'சக்தி' இதழின் ஆசிரியராக இருந்தார். திரு.வி.க.வின் நவசக்தி, ஜயபாரதி, சுதந்திரச் சங்கு, ஹனுமான், தமிழ்நாடு, சமரச போதினி, பாப்பா போன்ற பல இதழ்களில் பணியாற்றினார். அவர் ஆசிரியராக இருந்தபோது எழுதிய தலையங்கங்கள், புத்தகமாகத் தொகுக்கப்பட வேண்டிய அளவுக்கு முக்கியமானவை. பின்னர் கடைசியாக, தமிழின் ரீடர்ஸ் டைஜெஸ்ட் என்று கருதப்பட்ட மஞ்சரி பத்திரிகையில், 22 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அந்த 22 ஆண்டுகளிலும், மஞ்சரியின் ஒவ்வொரு இதழிலும் முக்கியமான புத்தகங்களின் சுருக்கத்தை "புத்தகச் சுருக்கம்" என்ற பகுதியாகக் கொண்டு வந்தார். (அதில் ஒன்று, நீட்ஷேவின் Thus Spake Zarathustra!).

இது தவிர, பாப்பாவுக்கு காந்தி, பாப்பாவுக்கு பாரதி என்று பல நூல்களை எழுதி, குழந்தை இலக்கியத்தின் முன்னோடியாகவும் விளங்கினார். இதற்கிடையில், மகாத்மாவின் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்கும் சென்று வந்தார். இப்படி 74 ஆண்டுகள் தன் வாழ்வை தமிழுக்காக அர்ப்பணித்துக்கொண்ட கர்மயோகியான தி.ஜ.ர. என்ற பெயர்கூட இன்று நம்மில் பலருக்கும் தெரியாமல் போய்விட்டது. தி.ஜ.ர. என்றால் தி.ஜானகிராமனா என்று கேட்கிறார்கள் பலர். இதுபற்றி மிக வருந்தி எழுதியிருக்கிறார், தி.ஜ.ர.வின் நீண்ட நாள் நண்பரான மலர் மன்னன்.


 தமிழ்ச் சிறுகதை என்றால் அதன் பட்டியல் மௌனி, புதுமைப்பித்தன், கு.ப.ரா. என்றுதான் போகுமே தவிர, ஒருபோதும் அதில் நான் தி.ஜ.ர.வின் பெயரைக் கண்டதில்லை. ஒரு சாதனையாளர், தன்னடக்கத்தின் காரணமாகத் தன்னை ஒரு சாதாரணன் என்று சொல்லிக்கொண்டால், நாமும் அவரை அப்படியே கருதி அவர் பெயரை அழித்துவிடல் தகுமா? அவர் கதைகளைப் படித்தபோது, அவை நம் சிறுகதைச் சிற்பிகளின் கதைகளுக்குக் கிஞ்சித்தும் குறைவானதாக இல்லை என்பதோடு, மரத்தடிக் கடவுள், பெட்டி வண்டி, பொம்மை யானை போன்ற கதைகள், உலகின் மிகச் சிறந்த கதைகளுக்கு நிகரானவையாகத் தெரிந்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக