ஞாயிறு, 28 ஜூன், 2015

சாயாவனம்

- சா. கந்தசாமி, சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.

சென்னையில் கூவம் ஆற்றின் கரையில் இருந்த இல்லத்தில் அமர்ந்து கொண்டு காவிரிக்கரை ஊரான சாயாவனம் குறித்து நாவல் எழுதினேன். சாயாவனம் என்றால் கதிரவன் ஒளிக்கதிர்கள் உள்ளே நுழைய முடியாத வனம் என்பது பொருள். சாயாவனத்தை ஒட்டிச் செல்லும் ராஜபாட்டையில் கோவலனும் கண்ணகியும் கால் பதித்து மதுரைக்கு நடந்து சென்றதன் சுவடுகள் பதிந்திருக்கும் ஊர்.

சாயாவனத்தின் முன்னே புகார் செல்லும் நெடுஞ்சாலை. பின்னால் காவிரி ஆறு பாய்ந்தோடுகிறது. இரண்டிற்கும் இடையில் வனமொத்த பெருந்தோட்டம். செம்போத்துகள் கூவிக்கொண்டு தாழப் பறந்து போகின்றன. பச்சைக் கிளிகள், சிறகடித்தபடி செல்கின்றன.

உயரமான இலுப்பை மரங்கள் கிளைகளைப் பரப்பிக்கொண்டு இருக்கும் புன்னை மரங்கள். சாய்ந்த மூங்கில்கள். குறிஞ்சா செடிகள், ஓணான் கொடிகள் படர்ந்த கள்ளிச் சப்பாத்திகள். அதன் கீழே ஊர்ந்து போகும் பாம்புகள், இனிப்பும் புளிப்புமாகப் பழங்கள் கொண்ட புளிய மரங்கள். நெல் விளையும் கழனிகள். குளங்கள். நீரோடும் ஓடைகள் இவற்றோடு இணைந்து வாழும் மக்கள் அமைதியான வாழ்க்கை தன் போக்கில் போய்க்கொண்டிருக்கிறது. ஒரு நூற்றாண்டிற்கு முற்பட்ட கலாச்சார, பண்பாட்டு வாழ்க்கையை எல்லோர்க்கும் எல்லோரும் பொதுவான எழுதும் முயற்சி. ஒரு கிராமத்து வாழ்க்கை மாறுதலுக்கு உள்ளாவதை, சுற்றுப்புறச் சூழல் மாறுவதை, விளை நிலங்களில் வீடுகள், தொழிற்சாலைகள் கட்டப்படுவதை, மக்கள் உணவு பழக்கங்கள் ருசி எல்லாம் தன்னளவில் மாற்றப்படுவதை ஒவ்வொருவரும் அறிந்து கொள்வதும் அதனைக் காப்பாற்றிக்கொள்ளத் தூண்டுவதும் அவசியம் என்பதுதான் நாவல்.

சாயாவனம் எழுதும்போது அங்கே சென்று கள ஆய்வு எதுவும் செய்யவில்லை. பத்துப் பன்னிரண்டு வயதில் கண்டதையும், கேட்டதையும், படித்ததையும் நினைவில் வைத்துக்கொண்டு எழுதினேன். நாவல் நான்காண்டுகள் கழித்து வெளிவந்தது. படித்துப் பார்த்துவிட்டு சாயாவனம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கச் சென்றேன்.

வனம் அப்படியே இருந்தது. பெரிதாக அழிப்பு வேலைகள் ஒன்றும் நடைபெற்று இருக்கவில்லை. அது ஆறுதலாக இருந்தது. ஆனால் சாயாவனம் சென்ற வழியெல்லாம் அப்படி இல்லை. நிறைய மாறுதல்கள். சுற்றுப்புறச் சூழல் மாறிவிட்டது.

இந்த ஐம்பதாண்டுகளில் பல முறைகள் புகார், சாயாவனம் சென்று வந்து கொண்டிருக்கிறேன். ஆறு மாதத்திற்கு முன்னால் சாயாவனத்தில் கால் பதித்து நடந்து சாயனேஸ்வரரையும், குயிலினும் இனிய நன்மொழி அம்மையையும் தரிசித்துவிட்டு வந்தேன். சில செடிகள் வெட்டப்பட்டிருந்தன. பல மரங்கள் சாய்ந்து கிடந்தன. ஆனால் சாயாவனம் இருக்கிறது. அதன் இருப்பும், கற்பனையான அழிப்பும் இரண்டற நாவலில் இணைந்து போகிறது. சொல்லப்பட்டதும், சொல்லப்படாததும் அதுவே என்பது சாயாவனம் சொல்லிக்கொண்டே இருக்கிறது.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக