எண்ணம்தான் வாழ்க்கை என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதில் நல்ல செய்தி என்னவென்றால் எண்ணம் மாறக்கூடியது. மாற்றக்கூடியது. அதனால், எண்ணத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளும் மாறக்கூடிவை. மாற்றக்கூடிவை. சுருக்கமாகச் சொன்னால் வாழ்க்கை மாறக்கூடியது. மாற்றக்கூடியது.

விதைகளாய் எண்ணங்கள்

நம் சித்தாந்தங்களும் நம்பிக்கைகளும் சில எண்ணங்களில் உருவானவை தானே? ஜெர்மானிய இனம் தான் உலகை ஆளத்தக்க இனம் என்ற ஹிட்லரின் எண்ணம்தான் இரண்டாம் உலகப் போர் நடைபெற முக்கியமான காரணமானது. இஸ்லாமியர்களுக்குத் தனி நாடு வேண்டும் என்ற ஜின்னாவின் எண்ணம் பாகிஸ்தானை உருவாக்கியது.

தேர்தல் அரசியலில் பகுத்தறிவுக் கொள்கைகளிலிருந்து கட்சி நுழைந்தால் திசை திரும்பிவிடும் என்ற ஈ.வெ.ரா.வின் எண்ணம் தான் திராவிடர் கழகத்தை அதிகாரத்தில் ஏற்றாமல் வைத்திருந்தது. அதற்கு மாறாக, தேர்தல் அரசியல் தான் திராவிடக் கொள்கைகளைச் செயல்முறைப்படுத்த உதவும் என்ற அண்ணாவின் எண்ணம் தான் தி.மு.க.வை அரியணையில் ஏற்றியது.

பெரிய நட்சத்திரங்களை நாடாமல் புது நடிகர்களை வைத்து நல்ல கதைகளை இயக்கினால் மக்கள் ஏற்பார்கள் என்ற கே.பாலச்சந்தரின் எண்ணம்தான் பல புதிய நடிகர்களை அறிமுகப்படுத்த வைத்தது. (பின்னாளில் அவர்களில் பலர் அவரே பயன்படுத்த முடியாத அளவுக்குப் பெரிய நடிகர்கள் ஆனார்கள் என்பது தனிக் கதை!)

சிலரின் முக்கியமான எண்ணங்களே வரலாற்றின் விதைகள்.

திருப்புமுனைகளாய்..

அதே போல, பலரின் மன மாற்றங்கள் வரலாற்றின் திருப்புமுனைகள். உலக வரலாறு மட்டுமல்ல, உங்கள் வரலாற்றையே எடுத்துக்கொள்ளுங்கள். மாறிய எண்ணம்தான் வாழ்க்கைப் போக்கையே திருப்பியிருக்கும். ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு எண்ணத்தின் பிரதிபலிப்புதான்.

உங்கள் எண்ணம் உங்கள் உணர்வையும், உங்கள் நடத்தையையும், உங்கள் உறவையும், உங்கள் உடலையும் பாதிக்கிறது என்றால் அந்த எண்ணத்தை நீங்கள் மாற்றினால், மற்ற அனைத்தையும் மாற்ற முடியும் அல்லவா?

 அஃபர்மேஷன்ஸ் என்ற ஒரு நேர்மறை சிந்தனை முறை கொண்டு உடல் சார்ந்த எல்லா நோய்களையும் குணப்படுத்தலாம், கட்டுப்படுத்தலாம் . 

தீராத பல உடல் உபாதைகளை நேர்மறைச் சிந்தனை மூலம் குணப்படுத்தலாம். Metaphysical Medicine, Mind- Body Medicine, Quantum Healing எனப் பல சிகிச்சை முறைகளுக்கும் Affirmations களுக்கும் தொடர்பு உள்ளது.