ஞாயிறு, 14 ஜூன், 2015

TRB PG TAMIL :திராவிட இயக்க நாடகங்கள்


 திராவிட இயக்க நாடகங்கள்

ஈ.வெ.ரா பெரியார் காங்கிரசு இயக்கத்திலுள்ள சிலரின் நடைமுறைத் தவறுகளைக் கண்டித்து நீதிக்கட்சியில் சேர்ந்தார். பின்னர் திராவிட இயக்கத்தைத் தொடங்கினார். தேசிய இயக்கத்தைத் தொடர்ந்து உருவாகிய திராவிட இயக்கமும் தனது கொள்கைகளைப் பரப்ப நாடகங்களைப் பயன்படுத்திக் கொண்டது. பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பவும் அரசியல் கருத்துகளை விதைக்கவும் நாடகங்கள் உதவின.

சமூகச் சீர்திருத்தம், மூடநம்பிக்கை எதிர்ப்பு, பிராமணிய எதிர்ப்பு, இதிகாச புராண எதிர்ப்பு, சாதி சடங்கு எதிர்ப்பு, ஜமீன்தாரி எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, தனித்திராவிட நாடு, பெண்கல்வி, பெண் முன்னேற்றம், கைம்மை மறுமணம், தமிழ் வளர்ச்சி, சீர்திருத்த மணம், கலை வளர்ச்சி எனப் பல உள்ளடக்கங்கள் திராவிட இயக்க நாடகங்களில் இடம்பெற்றன.

தமிழ் மாகாண நாடகக் கலை அபிவிருத்தி மாநாடு ஈரோட்டில் நடைபெற்றபோது அறிஞர் அண்ணாதம் பேச்சில் குறிப்பிட்ட ஒரு கருத்து, திராவிட இயக்க நாடகங்களின் உள்ளடக்கங்கள் குறித்து அறிய உதவுகிறது.

"எலும்பு பெண்ணுருவான அருட்கதைகளைப் பற்றிப் பாடியும் ஆடியும் வந்தது போதும். நமது பெண்மக்கள் எலும்புருவானது தவிரப் பயன் எதுவுமில்லை. இனிப் பெண்கள் எலும்புருவாகும் பரிதாப வாழ்வைச் சித்திரிக்கும் நாடகங்களை நடத்துங்கள். கண்ணைப் பெயர்த்தெடுத்து அப்பிய கண்ணப்பர் கதையை ஆடியது போதும். இனிக் கோயில்களில் கும்பாபிஷேகம் செய்பவன் ஊரில் கொள்ளையடிக்கும் விஷயத்தை விளக்கும் நாடகத்தை நடத்திக் காட்டுங்கள்; வாழ்க்கையைச் சித்திரித்துக் காட்டுங்கள். ஏழையின் கண்ணீர், விதவையின் துயரம், மதத் தரகர்களின் மமதை ஆகியவற்றை விளக்கும் அறிவு வளர்ச்சி நாடகங்களை நடத்துங்கள்" என்று அண்ணா குறிப்பிட்டார். இது திராவிட இயக்க நாடக மரபைப் புரிந்துகொள்ள உதவுகிறது.

புராண வரலாற்று நாடகங்களில் கூடச் சனாதனத்திற்கும் ஆரியத்திற்கும் எதிரான கருத்துகள் வலியுறுத்தப்பட்டன. தமிழ்ப் பண்பாட்டை நிறுவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உரையாடல்களிலும் தமிழ்மொழி நடை புதுப்புனைவுடன் வெளியிடப் பெற்றது. பாரதிதாசன், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, ப.கண்ணன், ஏ.கே.வேலன், தில்லை வில்லாளன், சி.பி.சிற்றரசு, இரா.செழியன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, முரசொலி மாறன், எஸ்.எஸ்.தென்னரசு, இராதா மணாளன், திருவாரூர் கே.தங்கராசு முதலானோர் திராவிட இயக்க நாடகங்களைப் படைத்தனர்.

 பாரதிதாசன்

பாரதிதாசன் அமைதி, படித்த பெண்கள், கற்கண்டு, பொறுமை கடலினும் பெரிது, இன்பக்கடல், குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும், விகட கோர்ட் முதலான சமூக நாடகங்களைப் படைத்திருக்கிறார். அமைதி நாடகம் பண்ணையாரின் கொடுமை பற்றியது. பண்ணையாரின் கொடுமையை மண்ணாங்கட்டி என்பவன் எதிர்ப்பதும் அதனால் அவன் தாக்கப்பட்டு இறப்பதும் அமைதி நாடகத்தின் உள்ளடக்கம்.

கற்கண்டு நாடகத்தில் இளம்பெண்ணை முதியவன் மணந்து கொள்ளும் கொடுமை எதிர்க்கப்படுகிறது.கற்கண்டு என்ற பெண்ணின் தந்தை கடன் காரணமாக மகளைக் கிழவனுக்குத் திருமணம் செய்து வைக்க முயல்கையில் இளைஞன் ஒருவன் தந்திரமாக அதைத் தடுத்து அவளை மணந்துகொண்டு காப்பாற்றுவதை அடிப்படையாகக் கொண்டது இந்நாடகம்.

இன்பக்கடல் நாடகம் காசுக்காக ஒருத்தியையும் காதலுக்காக ஒருத்தியையும் மணந்துகொள்ள விரும்பும் ஒருவனின் முயற்சியைத் தடுப்பது பற்றியது. அரசப்பன் என்பவன் காதலுக்காகப் பட்டு என்ற பெண்ணையும் காசுக்காகத் தங்கம் என்ற பெண்ணையும் மணக்க முயல்கிறான். அதற்காக இளவழகன்என்பவனுக்கும் தங்கத்திற்கும் நடக்கவிருக்கும் திருமணத்தைத் தடுத்து அவளை மறைத்து வைக்கிறான். பட்டு,, தங்கத்தை விடுவித்து இளவழகனுடன் சேர்த்து வைக்கிறாள். அரசப்பனின் முயற்சி தோல்வியடைகிறது. இந்நாடகங்கள் பெண்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டவை.

பொறுமை கடலினும் பெரிது என்னும் நாடகம் அனைவருக்கும் உபதேசம் கூறித் தன் காரியத்தில் கண்ணாக இருக்கும் பணக்காரரை மற்றவர்கள் பழிவாங்கும் நிகழ்வைச் சொல்வது. அவசரத் தேவையாக உதவி கேட்பவர்களுக்கு உதவாமல் பொறுமையை உபதேசிக்கும் பணக்காரனை அவனுக்குத் தேவையான நேரத்தில் அதே உபதேசத்தினைக் கூறி உதவாமல் பழிவாங்கும் நிகழ்வு இதன் உள்ளடக்கம். குடும்ப விளக்கும் குண்டுக்கல்லும் என்ற நாடகம் உழைக்காத குடும்பத் தலைவனை மகன் மாற்றுவதைக் காட்டுகிறது. குடும்பத் தலைவி தில்லைக்கண் உழைப்பாளி. கணவன் திருக்காடு முதலியார் சோம்பேறி. இவர்களது மகன் கண்ணப்பன்,தந்தையைத் திருத்துகிறான்.

படித்த பெண்கள் நாடகத்தில் வரும் மின்னொளியும் இன்னமுதும் கல்வி கற்ற பெண்கள். பொன்னன்என்பவன் ஊதாரியாகத் திரிந்து சொத்தையெல்லாம் தொலைத்ததோடு கொலை முயற்சியையும் மேற்கொள்கிறான். பொன்னனை இப்பெண்கள் திருத்துகிறார்கள். விகடகோர்ட் என்ற நாடகம் கடவுள், சமய நம்பிக்கை முதலானவற்றை எள்ளி நகையாடும் பகுத்தறிவுக் கருத்தைக் கொண்டது.

 அறிஞர் அண்ணா

திராவிட இயக்கத்தின் கொள்கை விளக்கமாக அறிஞர் அண்ணாவின் நாடகங்கள் அமைந்தன.சந்திரோதயம், வேலைக்காரி, ஓர் இரவு, காதல் ஜோதி, எதையும் தாங்கும் இதயம், பாவையின் பயணம், அவன் பித்தனா?, இரக்கம் எங்கே?, புதிய மடாதிபதி, சொர்க்க வாசல், நல்லதம்பி, கண்ணீர்த்துளி, கண்ணாயிரத்தின் உலகம் முதலான பல சமூக நாடகங்களை எழுதியிருக்கிறார்.

சந்திரோதயம், ஜமீன்தார்களின் இரக்கமற்ற மனத்தைக் காட்டுகிறது. மடங்களில் நடக்கும் கயமையைக் காட்டுகிறது. பிறரை அண்டிப் பிழைக்கும் வைதிகர்களின் வஞ்சகங்களைக் காட்டுகிறது. மதம், சாதி, பழமைப் பித்து முதலானவற்றால் விளையும் தீமைகளைக் காட்டிப் புத்துலகத்தை உணர்த்துகிறது.

வேலைக்காரியும் ஓர்இரவும் கே.ஆர்.ராமசாமி நாடகக் குழுவினருக்காக அண்ணா எழுதிய நாடகங்கள். வேலைக்காரி நாடகத்தில் சாதிப் பற்று, பணத் திமிர், ஏற்றத் தாழ்வு, போலி வாழ்க்கை, கடவுள் உணர்வு, பெண்களின் நிலை முதலானவை புலப்படுத்தப்படுகின்றன. வட்டியூர் ஜமின்தார் வேதாசல முதலியாரின்கொடுமைக்குப் பலியான சுந்தரம் பிள்ளையின் மகன் ஆனந்தன். அவன் வேதாசல முதலியாரைத் திருத்த முயல்கிறான். ஆள் மாறாட்டம் செய்து அவர் மகளை மணந்துகொள்கிறான். ஜமின்தாரின் மகன் மூர்த்திவேலைக்காரியைக் காதலிக்கிறான். ஜமீன்தார் மறுக்கவே மடத்தில் சேர்கிறான். அங்குப் போலித் துறவியைக் கொன்றுவிடுகிறான். ஆனந்தன் வழக்கு மன்றத்தில் வாதாடி அவனை விடுவிக்கிறான். துறவி, கொள்ளைக்காரன் என்றும் புலப்படுத்துகிறான். மூர்த்தி, வேலைக்காரியை மணந்து கொள்கிறான். ஜமீன்தார் திருந்துகிறார். 'கத்தியைத் தீட்டாதே! புத்தியைத் தீட்டு', 'சட்டம் ஓர் இருட்டறை, அதிலே வக்கீலின் வாதம் ஓர் விளக்கு' முதலான வசனங்கள் இந்நாடகத்தில்தான் இடம் பெற்றன.

49 காட்சிகளைக் கொண்ட ஓர் இரவு நாடகம், ஒரே இரவிலே நடந்து முடியும் கதையமைப்பைக் கொண்டது. ஏற்றத் தாழ்வுகள், காதல் மோதல்கள், சேரி வாசம் மாளிகை வாசம் எனப்பல வேறுபாடுகள் சித்திரிக்கப்பட்டுள்ளன. தேவர் மகள் சுசீலா. தேவர் செய்த ஒரு கொலையைப் படம் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டும் ஜெகவீரன் அவளை மணக்க அவரிடம் சம்மதம் பெறுகிறான். சுசீலா, டாக்டர் சேகரைக் காதலிக்கிறாள். இரவில் தேவரின் வீட்டிற்குத் திருடன் ரத்தினம் வருகிறான். அவனிடம் சுசீலா ஜெகவீரனை ஏமாற்றத் தன் காதலனாக நடிக்கும்படி வேண்டுகிறாள். அங்கு வந்த சேகர் சுசீலாவைத் தவறாகக் கருதுகிறான். ரத்தினமும் சேகரும் மோதுகின்றனர். தேவர்தான் ரத்தினத்திற்கும் தந்தை என்பது தெரியவருகிறது. ஜெகவீரனை ஏமாற்றி அவனிடமிருக்கும் படத்தைப் பிடுங்கிவிடுகின்றனர். சுசீலா சேகர் திருமணம் நடைபெறுகிறது.

அண்ணாவின் பிற நாடகங்களிலும் இதே போன்ற சீர்திருத்தக் கருத்துகள் இடம்பெற்றன. மாநாடுகளில் ஒரே நேரத்தில் இருபதாயிரம் பேர் அண்ணாவின் நாடகங்களைக் கண்டு ரசித்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. கல்கி, அண்ணாவைப் பெர்னாட்ஷாவுக்கும் கால்ஸ்வொர்த்திக்கும் (Galsworthy) இணையானவர் என்று பாராட்டினார். வசனத்தில் புரட்சி செய்தவர் அண்ணா. ஏமாற்றிப் பணம் சேர்ப்பவனைப் பார்த்து "தங்கத்திலே அரிசி செய்து சமைத்து, கோமேதகக் கூட்டும் வைர வறுவலும் முத்துப் பச்சடியும் மோர்க்குழம்பிலே கெம்புமா கலந்து சாப்பிட்டு வந்தீர்?" என்று கேட்பது மாதிரி எழுதப்பட்ட வசனம் இதற்கு எடுத்துக்காட்டு.

 கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதியின் நாடகப்பணி போற்றுதற்குரியது. சாந்தா அல்லது பழனியப்பன் (நச்சுக்கோப்பை), தூக்குமேடை, காகிதப்பூ, நானே அறிவாளி, பரப்பிரம்மம், உதயசூரியன், திருவாளர் தேசியம் பிள்ளை முதலான பல நாடகங்களை இயற்றியுள்ளார். பரப்பிரம்மம் உருவகமாக அமைந்த அரசியல் நாடகம். எல்லாரையும் கேலியாக எழுதி வந்த இதழாசிரியர் ஒருவரின் பிரச்சாரத்திற்கு எதிராக நானே அறிவாளி என்ற நாடகம் எழுதப்பட்டது. நானே அறிவாளி என்ற வகையில் நடந்துகொண்ட அவருக்குப் பாடம் கற்பிப்பதாக இந்நாடகம் அமைந்தது. திருவாளர் தேசியம்பிள்ளை காங்கிரசாரின் கடுமையான தாக்குதல்களுக்குப் பதில் தருவதாக அமைந்த நாடகம்.

 ப.கண்ணன்

ப.கண்ணனின் மின்னொளி நாடகம் பழமையில் ஊறிய சிற்றூர் ஒன்றைத் திருத்த முயல்வது குறித்தது. ஊரைத் திருத்த முயலும் செல்லத்துரை என்ற இளைஞனுக்கு மின்னொளி உதவுகிறாள். கிராமத்தில் அவர்களுக்கு எதிர்ப்பு உண்டாகிறது. பழமைக்கும் புதுமைக்கும் மோதல் உண்டாகிறது. அறிவும் அன்பும் வெற்றி பெறுகின்றன. புரட்சிப் பாடகன் என்ற சமூக நாடகத்தையும் இவர் படைத்துள்ளார். தமிழிசை மறுமலர்ச்சி பற்றிய நாடகம் இது. கீதானந்தர் என்பவர் வடமொழிப் பற்றாளர்; தமிழிசையையும் தமிழையும் பழிப்பவர். சங்கரன் தமிழில் பாடல்கள் பாடிய பொழுது கீதானந்தரின் ஆட்கள் அவனைத் தாக்குகின்றனர்; தெலுங்கில் பாடுமாறு மிரட்டுகின்றனர். சங்கரன், கீதானந்தரின் போலித்தனத்தையும் கொலை பாதகத்தையும் காம வெறியையும் வெளிப்படுத்துகிறான்.

ஏ.கே.வேலன்

ஏ.கே.வேலன் படைத்த நாடகம் கைதி, வறுமையில் வாடும் வேலன், தாய் தங்கை முதலானோரைக் காப்பாற்றக் கோயில் தட்டைத் திருடுகிறான். அவனைச் சிறையில் தள்ளுகின்றனர். அவன் சிறையிலிருந்து தப்புகிறான். ஆனால் தாயையும் தங்கையையும் காணமுடியாமல் தவிக்கிறான். பின் நல்ல நாயகம் என்னும் பெயருடன் நகரத் தந்தையாக உயர்வடைகிறான். காவல்துறை இதைக் கண்டுபிடித்து விடுகிறது. மீண்டும் அவன் தப்புகிறான். தங்கை முல்லையைச் சந்திக்கிறான். தங்கையின் கணவனான காவல்துறை ஆய்வாளர் அவனைக் கைது செய்து சிறைக்கு அனுப்புகிறான். தங்கை மனமுடைந்து இறக்கிறாள். ஏ,கே.வேலனின் எரிமலை நாடகம் தங்கைக்காகக் கடல்கடந்து பொருள் ஈட்டச் செல்லும் இளைஞனைப் பற்றியது. நாடு திரும்பிய பின், அது இருக்கும் நிலை கண்டு அவன் மனம் எரிமலையாகிக் குமுறுகிறான்.

ஏ.கே.வேலனின் பகுத்தறிவுச் சிந்தனைக்கு ஓர் உரையாடலை எடுத்துக்காட்டாகக் காணலாம்.சூறாவளி நாடகத்தில் இது இடம் பெறுகிறது. கோயிலின் கர்ப்பகிரகத்துள் அர்ச்சகர் தவிர வேறு யாரும் செல்லக் கூடாது என்று தடுப்பதைக் கண்டிப்பது இது. "ஏறி ஏறி இறங்கலாம். பெருச்சாளி சுரண்டலாம். கரப்பான் வண்டு மொய்க்கலாம். பூச்சி புழு நெளியலாம். வௌவால் புழுக்கை போடலாம். ஆறறிவு படைத்த மனிதன் உள்ளே வந்தாலாகாதோ?" என்பது ஆற்றலுள்ள வசனம்.

 பிறர்

தில்லை வில்லாளனின் விடியற்காலை என்ற நாடகம் அங்கதப் பண்பு கொண்டது. ஆண்டாள் கதையைக் கேலி செய்வது. பூ விற்கும் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள் கோயில் தக்காரின் மகன்ரங்கநாதனைக் காதலிக்கிறாள். மாலையினுள் காதல் கடிதத்தை வைத்து அனுப்புகிறாள். அரங்கனுடன் ஜோதியில் கலந்துவிட்டதாகப் புரளியைக் கிளப்பிவிட்டுக் காதலனுடன் ஓடிப்போகிறாள். ஆழ்வார் நாயன்மார் கதைகள் நம்புதற்குரியன அல்ல என்பதை வலியுறுத்தும் நாடகம் இது.

ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் வாழ்க்கை வாழ்வதற்கே நாடகம் சமூகத்திற்கு உரிமை உணர்வு ஊட்டுவதாக அமைந்தது. என்.எஸ்.கிருஷ்ணனின் ஐம்பதும் அறுபதும் தீமைகளையும் போலித்தனங்களையும் சாடுவது. அவருடைய விலங்கு மனிதன், மனிதன் விலங்கு போல வாழ்வதைக் கிண்டல் செய்வது.

 நாடகக் கலைஞர்கள்

என்.எஸ்.கே நாடக சபா, கே.ஆர்.ராமசாமியின் கிருஷ்ண நாடக சபா, எஸ்.எஸ்.ஆரின் நாடகக்குழு முதலான நாடகக் குழுவினர் திராவிட இயக்க நாடகங்களை நடத்தினர். எம்.ஆர்.இராதா, எம்.ஜி.இராமச்சந்திரன், எஸ்.எஸ்.இராசேந்திரன், கே.ஆர்.ராமசாமி போன்ற நடிகர்கள் இந்நாடகங்களில் நடித்தவர்கள்.

 பயன்

ஆரிய எதிர்ப்பு, தமிழ்ப் பற்று, அரசியல் பிரச்சாரம், மூடநம்பிக்கை எதிர்ப்பு எனத் திராவிட இயக்க நாடகங்கள் செயலாற்றின. திராவிட இயக்கத்தினரின் அரசியல் வெற்றிக்கு நாடகங்கள் துணையாயின. 1957ஆம் ஆண்டில் தி.மு.க இயக்கம் அரசியலில் பங்கேற்றபோது பிரச்சாரத்திற்கு நாடகத்தைப் பயன்படுத்தினர். 1967ஆம் ஆண்டில் ஆட்சியைப் பிடித்த பின்பு சாதனை விளக்கத்திற்கு நாடகத்தைப் பயன்படுத்தினர். கட்சி பிரிந்த பின் பிரிந்தவர்களை விமர்சிக்கும் நாடகங்கள் நடத்தப்பட்டன.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக