புதன், 29 ஜூலை, 2015

TRB PG TAMIL :தொல்காப்பியம், நம்பியகப் பொருள் கூறும் திணைப்பொருள்கள்


தமிழ் இலக்கண உலகில் அகப்பொருள் இலக்கணத்தை முழுமையாகக் கூறும் நூல்களில் முதன்மையானது தொல்காப்பியம். இத் தொல்காப்பியத்திலும் அதன் பின்னர் வந்த அகப்பொருள் இலக்கண நூலான நம்பியகம் பொருளிலும் உள்ள அகத்திணையியலில் கூறப்பட்டுள்ள ஐந்திணைப்பொருட்களான முதல், கரு, உரி என்ற மூன்று பொருள்கள் பற்றிய செய்திகளை எடுத்துக்காட்டி ஒப்பீட்டு நிலையில் விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

திணைப்பொருள்கள்:

தொல்காப்பியம் ஐந்திணைகளுக்குரிய பொருள்களாக முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் (தொல் பொருள் 3) என்ற மூன்றினைக் கூறுகின்றது. இதைப் பின்பற்றியே நம்பியகப் பொருளும் ஐந்திணைப்பொருள்களாக இம்மூன்றையும் கூறுகின்றது. (நம்பி.7).

முதற்பொருள்:

மேற்கூறிய மூன்று திணைப்பொருள்களுள் முதற்பொருள் என்பது நிலம், பொழுது என்ற இருவகையினை இயல்பாகக் கொண்டுள்ளது (தொல், பொருள் 4.19) எனத் தொல்காப்பியம் கூறுகின்றது. நம்பியகப்பொருளும் முதற்பொருளாக இவ்விரண்டையும் கூறுகின்றது. (நம்பி.8) தொல்காப்பியமும், நம்பியகப் பொருளும் மேற்கூறியவாறு ஒன்றுபட்ட கருத்துக்களுடன் காணப்பட்டாலும் ஒரு சில வேறுபாடுகளுடன் காணப்படுகின்றன என்பதை பின்வரும் செய்திகளின் மூலம் அறியலாம்.

நிலம்:

முதற்பொருள்களுள் ஒன்றாகிய நிலம் பற்றித் தொல்காப்பியம், மாயோன் மேய காடுறை உலகமும் சேயேன் மேய மை வரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும், முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தலெனச், சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே (தொல்.பொருள் – 5) எனக் கூறுகின்றது. தொல்காப்பியம் காடு, வரை, தீம்புணல், பெருமணல் என நிலம் பற்றி மட்டும் இங்கு கூறாது. முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற திணைகள் பற்றியும் கூறுகிறது. காரணம் முன்பு கூறப்படும் ஏழு திணைகளுள் நிலம் பெறுவன "நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய" எனக் கூறுப்பட்டுள்ளதே தவிர அத்திணைகளுக்குரிய பெயர்கள் சுட்டப்படவில்லை. எனவே இங்கு நிலங்கள் பற்றிக் கூறுகையில் அந்நிலங்களுக்குரிய திணைப்பெயர்களும் சுட்டப்பட்டன எனலாம். மேலும் பாலைத் திணைக்கு நிலமில்லை என்று முற்கூறப்பட்டதால் பெயரும் இங்கு சுட்டப்படவில்லை எனக் கருதலாம்.

தொல்காப்பியம் முதற்பொருளாகிய நிலத்தை மட்டுமல்லாது கருப்பொருள்களுள் ஒன்றாகிய தெய்வம் பற்றியும் சுட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. காரணம் என்னவெனில் தொல்காப்பியம் கருப்பொருள்கள் பற்றிக் கூறுகையில் பொதுவாகக் கூறியுள்ளதே தவிர ஒவ்வொரு திணைக்குரிய கருப்பொருள்கள் பற்றிக் கூறவில்லை. எனவே கருப்பொருள்களுள் தெய்வம் முதன்மையாகக் கருதப்படுவதால் இங்கு நிலங்களைப் பற்றிக் கூறுகையில் அந்நிலங்களைக் காக்கும் தெய்வங்கள் பற்றியும் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது எனலாம். மேலும் பாலை நிலம் இன்னதென்று சுட்டப்படாமையால் தெய்வமும் சுட்டப்படவில்லை எனக் கருத இடமுண்டு.

நம்பியகப்பொருள் பற்றிக் கூறுகையில் வரை, சுரம், புறவு, பழனம், திரை அவற்றின் நிமித்தம் எனப் பத்து வகைப்படும் என்று கூறுகின்றது (நம்பி 9). இவ்வாறு நிலம் பற்றிக் கூறுவதற்கு முன்பே நம்பியகப் பொருள் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் (நம்பி. 6) என ஐந்திணைகளுக்குரிய பெயர்களைக் கூறியுள்ளமையால் தொல்காப்பியம் போன்று இங்கு திணைப்பெயர்கள் சுட்டப்படவில்லை எனலாம்.

தொல்காப்பியர் காடு, தீம்புனல், பெருமணல் என்று கூறியுள்ளதை நாற்கவிராசர் புறவு, பழனம், திரை என்ற சொற்களால் குறிப்பிட்டுள்ளார். காலத்திற்கு ஏற்ப சொற்களும் மாறுபட்டுள்ளது எனலாம். ஆனால் நம்பியகப் பொருள் பாலைத் திணைக்குறிய நிலமாகச் சுரத்தைக் கூறியுள்ளது. பத்துப்பாட்டுள் "பாலை சான்ற சுரஞ் சார்ந்ததொரு சார்" (மதுரைக் காஞ்சி) எனக் கூறியுள்ளமையாலும் பிறவற்றாலும் இவ்வாறு நம்பியகப் பொருள் பாலைத்திணைக்குரிய நிலமாக சுரத்தைக் குறிப்பிட்டுள்ளது எனலாம்.

பொழுதுகள்:

தொல்காப்பியம், காரும், மாலையும் முல்லை (தொல். பொருள்.6) கூதிரும் யாமமும் முன்பனியும் குறிஞ்சி (தொல். பொருள். 7,8), வைகறை விடியல் மருதம் (தொல். பொருள். 9) ஏற்பாடு நெய்தல் (தொல். பொருள். 10), நண்பகல், வேனில் பின்பனி பாலை (தொல். பொருள். 11) என ஒவ்வொரு திணைக்குரிய பெரும்பொழுது சிறுபொழுதுகள் பற்றிக் கூறுகின்றது. நம்பியகப்பொருள் பெரும்பொழுதுகள் ஆறு (நம்பி.11) என்றும், சிறுபொழுதுகள் ஐந்து (நம்பி 12) என்றும் வகைப்படுத்திக் கூறிவிட்டுப் பின்பு தொல்காப்பியம் போன்று குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் (நம்பி 13-17) என ஒவ்வொரு திணைக்குரிய பெரும் பொழுது, சிறுபொழுது பற்றிக் கூறுகின்றது.

தொல்காப்பியர் சிறுபொழுது ஆறு எனக் கொண்டதை நாற்கவிராசர் ஐந்தாகக் கொள்கின்றார். வைகறை விடியல் என்று தொல்காப்பியம் தனியாகக் கூறியுள்ளதை நாற்கவிராசர் வைகறை என்பது விடியல் காலத்தைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். தொல்காப்பியம் மருதம், நெய்தல் ஆகிய இரண்டு திணைகளுக்கும் உரிய பெரும் பொழுதுகள் பற்றி நூற்பாவின் வழி சுட்டவில்லை என்றாலும் இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் அறுவகைப் பெரும்பொழுதுகளும் இவ்விரு திணைகளுக்கும் உரியன (தொல். பொருள் பக் 11) எனக் கூறியுள்ளார். இவ்வுரையாசிரியரின் கருத்துப்படி நம்பியகப்பொருள் இவ்விரு திணைகளுக்கும் ஆறு பெரும்பொழுதுகளுக்கும் உரியன (நம்பி, 18) என நூற்பாவில் கூறி விளக்குகின்றது. இவ்வாற முதற்பொருள் பற்றிய கருத்துக்களில் இரு நூல்களும் ஒரு சிலவற்றில் வேறுபடுகின்றன.

கருப்பொருள்கள்:

தொல்காப்பியம் ஐந்திணைக்குரிய கருப்பொருள்களாகத் தெய்வம், உணவு, மா, மரம், புள், பறை, செய்தி, யாழ் போன்ற எட்டு வகைகளோடு "அவ்வகை பிறவும் கருவென மொழிப" (தொல். பொருள் 20) எனக் கூறுகின்றது. தொல்காப்பியர் கூறிய "அவ்வகை பிறவும்" என்பதற்கு, அத்தன்மைய பிறவும் கருப்பொருள் என்று கூறுவதோடு, எந்நில மருங்கிற் பூவும், புள்ளும், அந்நிலம் பொழுதோடு வாரா வாயினும் (தொல். பொருள்.21) எனக் கூறியுள்ளதால் நிலமும் காலமும் பற்றி வருவன கருப்பொருள் என்று உணர்க என்று இயம்பூணார் தம் உரையில் கூறுகின்றார்.

நச்சினார்க்கினியர், இன்னும் பிறவு மென்றதனாலே இங்கு கூறியவற்றிற்குரிய மக்கள் பெயருந் தலைமக்கள் பெயருங் கொள்க. அவை பெயரும் வினையும் (தொல். பொருள்.22) என்னும் நூற்பாவில் தொல்காப்பியர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பதோடு பிறவுமென்றதனால் கொள்வன சிறுபான்மை திரிவுபடுதலின் பிறவுமென்று அடக்கினார் என்றும் கூறுகின்றார். நம்பியகப்பொருள் பிற என்பதற்குத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் கூறிய கருத்துக்களைத் தழுவி ஐந்திணைக்குரிய கருப்பொருள்களாக ஆரணங்கு, உயர்ந்தோர், உயர்ந்தோரல்லாதவர், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில் எனப் பதினான்கினைக் கூறுகின்றது. மேலும் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் (நம்பி 20 – 24) என ஒவ்வொரு திணைக்குரிய கருப்பொருள்களையும் தனித்தனியாக நூற்பாக்களின் மூலம் விளக்கிச் செல்கின்றது. இவ்வாறு கருப்பொருள்கள் பற்றிய கருத்து வளர்ச்சியை நம்பியகப்பொருளில் காணலாம்.

உரிப்பொருள்கள்:

தொல்காப்பியம் திணைக்குரிய உரிப்பொருள்கள் பற்றிக் கூறுகையில் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை தேருங்காலைத் திணைக்குரிப்பொருளே எனக் கூறுகின்றது. இதற்கு இளம்பூரணர் ஏனைய மொழிந்த பொருளோடொன்ற வைத்தல் (மரபு.110) என்னும் தந்திர உத்தியால் புணர்தல் என்பது குறிஞ்சிக்கும், இருத்தல் என்பது முல்லைக்கும், இரங்கல் என்பது நெய்தலுக்கும், ஊடல் என்பது மருதத்திற்கும் பெரும்பான்மையும் உரியதாகவும் சிறுபான்மை எல்லாப் பொருளும் எல்லாத் திணைக்கும் உரியதாகவும் கொள்ளப்படும் என்று கூறுகின்றார் (தொல். பொருள், பக். 16). இக்கருத்து உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே (தொல்.பொருள். 15) என்ற தொல்காப்பியரின் கருத்திற்கு மாறுபட்டதாக உள்ளது. இந்நூற்பாவில் தேருங்காலை எனக் கூறியிருப்பதால் குறிஞ்சிக்குப் புணர்ச்சியும், பாலைக்கு பிரிவும், முல்லைக்கு இருத்தலும், நெய்தலுக்கு இரங்கலும், மருதத்திற்கு ஊடலும் அவ்வவ்நிமித்தங்களுக்கும் உரியதென்று ஆராய்ந்துணர வேண்டும் என நச்சினார்க்கினியர் கூறுகின்றார்.

தொல்காப்பியக் கருத்தைப் பின்பற்றி நம்பியகப்பொருளும் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கள் அவற்றின் நிமித்தம் என உரிப்பொருள்கள் பத்து வகைப்படும் எனறு கூறுகின்றது (நம்பி 25). உரிப்பொருள்களின் வைப்பு முறையில் மாற்றமுள்ளதே தவிர வேறு மாற்றங்கள் இல்லை எனினும், முத்திறப் பொருளும் தத்தம் திணையோடு, மரபின் வராது மயங்கலும் உரிய (நம்பி 251) என நம்பியகப் பொருள் கூறியிருப்பதன் மூலம் தொல்காப்பியரின் உரிப்பொருள் மயங்கி வராது என்ற கருத்தோடு மாறுபட்டிருந்தாலும் இளம்பூரணர் கூறிய கருத்தினை ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை அறியலாம்.

தொல்காப்பியம், நம்பியகப் பொருள் கூறியுள்ள திணைப்பொருள்களின் கருத்துக்களை ஒப்பு நோக்குகையில் முதல் நூலாகிய தொல்காப்பியத்தின் கருத்துக்களை நம்பிகப்பொருள் பின்பற்றியிருந்தாலும் ஒரு சில இடங்களில் மாறுபட்டும் காணப்படுகின்றது. மேலும் தொல்காப்பியர் கருத்துக்களை மட்டுமல்லாது தொல்காப்பிய உரையாசிரியர்களின் கருத்துக்களையும் நம்பியகப் பொருள் பின்பற்றியுள்ளது என்பதை அறியமுடிகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக