வெள்ளி, 9 அக்டோபர், 2015

இரண்டு லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ! 50 ஆயிரம் பள்ளிகள் இயங்கவில்லை!


Dinamalar Banner Tamil News

Adve

இரண்டு லட்சம் ஆசிரியர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, வகுப்புகளை புறக்கணித்ததால், தமிழகம் முழுவதும், 50 ஆயிரம் பள்ளிகள் இயங்கவில்லை; பல தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன.




அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. 
காலை, 8:00 மணிக்கே பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள், தற்செயல் விடுப்புக் கடிதம் கொடுத்து விட்டு, கூட்டம் கூட்டமாக ஆர்ப்பாட்டத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

சென்னை மாநகராட்சி பள்ளிகள் பலவற்றில், வேன் ஏற்பாடு செய்து, ஆசிரியர்கள் ஒட்டு மொத்தமாக ஆர்ப்பாட்டத்துக்கு சென்றனர். தலைமை ஆசிரியர்கள் மட்டும், பணிகளை கவனித்தனர்; பல பள்ளிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டிருந்தது.மற்ற மாவட்டங்களில், மேல்நிலைப் பள்ளிகளில் மட்டும், 50 சதவீத ஆசிரியர்கள் வந்திருந்தனர். தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வரவில்லை; மாணவர்களும் வரவில்லை.குறைந்த எண்ணிக்கையில் வந்த மாணவர்களுக்கு, வட்டார வள ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம், வருகை பதிவு குறிப்பிடப்பட்டு, மதிய உணவு வழங்கப்பட்டது.

மொத்தத்தில், தமிழகம் முழுவதும், 40 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும், 10 ஆயிரம் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில்,

நேற்று வகுப்புகள் நடக்கவில்லை.மாநிலம் முழுவதும், இரண்டு லட்சம் ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்ததாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் மூலம், பள்ளிக் கல்வி இயக்குனரகத்துக்கு தகவல்கள் கிடைத்தன.

புறக்கணித்த தலைமை ஆசிரியர்கள் :

வேலைநிறுத்தப் போராட்டத்தில், பெரும்பாலான நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை. அதனால், ஜாக்டோ கூட்டுக் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக தலைவர் எத்திராஜுலு கூறியதாவது:திருவாரூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், தலைமை ஆசிரியர்கள், 90 சதவீதம் பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். மற்ற இடங்களில், தங்களை அதிகாரிகளாக நினைத்துக் கொள்வதால் பங்கேற்கவில்லை. 

தலைமை ஆசிரியர்களுக்கு ஊதியப் பிரச்னையோ, பதவி உயர்வு பிரச்னையோ இல்லை. மாறாக, இலவசத் திட்டங்களைக் கவனிக்க, தனி அலுவலர் இல்லாமல், கடுமையாக பாதிக்கப் படுகிறோம். ஆண்டில் மூன்று பருவங்களுக்கு, குறைந்தது, 30 முறையாவது இலவசத் திட்டங்களுக்கு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. அதனால், கல்விப் பணிகள் பாதிக்கப் படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட வாரியாக நிலவரம்:

சென்னை, கோவை, நெல்லை உட்பட, பல மாவட்டங்களில், பெரும்பாலான பள்ளிகள் திறந்திருந்தாலும், ஆசிரியர்கள் இல்லாததால் பாடங்கள் நடத்தப்படவில்லை. 
சென்னையில், 20க்கும் மேற்பட்ட மாநகராட்சி பள்ளிகளில், ஒட்டுமொத்தமாக ஆசிரியர்கள், பணியை புறக்கணித்தனர்; உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஓரளவுக்கு வகுப்புகள் நடந்தன. 

நாகையில்பெரும்பாலான பள்ளிகள் இயங்கவில்லை; திறந்திருந்த ஒரு சில பள்ளிகளும், மாணவர்கள் இல்லாமல் வெறிச்சோடின. திருவாரூர் மாவட்டத்தில், 5,432 ஆசிரியர்களில், 4,418 பேர் பணிக்கு வரவில்லை.திருப்பூரில், மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. பல வகுப்புகளின் மாணவர்களை, ஒரே வகுப்பில் அமர வைத்து, மதிய உணவுக்கு பின் வீட்டுக்கு அனுப்பினர்.நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களை விட, தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் போராட்டத்தில் பங்கேற்றனர். 

இந்தப் போராட்ட வெற்றி, எங்களை அடுத்த கட்டத்தை நோக்கி நகர வைத்துள்ளது. இனியும், எங்கள் கோரிக்கைக்கு, அரசு செவி சாய்க்காமல் இருக்கக் கூடாது.இளங்கோவன் ஜாக்டோ மாநிலஒருங்கிணைப்பாளர்.

புதுக்கோட்டை, திருவாரூர் மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள மாவட்டங்களில், தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் ஒட்டுமொத்தமாக பணியைப் புறக்கணித்தனர். சாமி.சத்தியமூர்த்தி பொதுச்செயலர், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை 
ஆசிரியர் சங்கம்.

பள்ளியை மூடுவது எங்கள் நோக்கமல்ல. பேச்சில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், தங்கள் வெற்றியை காட்டி விட்டனர்; அடுத்த கட்ட போராட்டம் தீவிரமாக இருக்கும்.பேட்ரிக் ரைமண்ட்மாநில தலைவர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு.

தமிழகத்தில், 95 சதவீத தொடக்கப் பள்ளிகள் இயங்கவில்லை; இரண்டு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. மாற்று ஏற்பாடு செய்தாலும், ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளை நடத்த ஆட்களே இல்லை. ரெங்கராஜன்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
- நமது நிருபர் -

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக