இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) நுழைவுத் தேர்வை தமிழில் நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

'எது வளர்ச்சி' என்ற தலைப்பில் சென்னையில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்வியாளர்கள் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பிரபா கல்விமணி, கிறிஸ்துதாஸ் காந்தி, வசந்திதேவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கில் கல்வியாளர் பிரபா கல்விமணி பேசியதாவது:

பள்ளிகளில் 11-ம் வகுப்பு பாடத்தை நடத்தாமல் 12-ம் வகுப்பு பாடம் மட்டுமே நடத்தப்படுகிறது. இதனால் ஐஐடி போன்ற போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்களால் வெற்றி பெற முடிவதில்லை. கடந்த ஆண்டில் ஒருங்கிணைந்த ஆந்திராவிலிருந்து 2700 பேர் ஐஐடி நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். ஆனால், தமிழ்நாட்டிலிருந்து 450 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 419 பேர் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படித்தவர்கள்.

ஐஐடியில் இந்தி வழிக்கல்வி இல்லாதபோதும் இந்தியில் நுழைவுத் தேர்வு எழுதலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. அது போலவே தமிழிலும் கேள்வித் தாள்கள் இருந்தால், தமிழக மாணவர்களுக்கு அதிக அளவில் தேர்ச்சி பெற வாய்ப்பு கிடைக்கும். கிராமப்புற ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்களை பாதுகாக்க கிராமப்புற மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வசந்தி தேவி பேசும்போது, "பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பாடத்திட்டம் என்னவாக இருக்க வேண்டும் என்று கார்ப்பரேட் முதலாளிகள்தான் தீர்மானிக்கின்றனர். 18 ஆண்டுகள் படித்து முடித்துவிட்டு வரும் மாணவர்கள் வேலைக்கு தகுதியானவர்கள் இல்லை என்று நிறுவனங்கள் கூறுகின்றன. நிறுவனங்களுக்கு ஏற்றாற்போல, புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் கூட தங்கள் பாடத்திட்டத்தை மாற்றிக்கொள்கின்றன" என்றார்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, "தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக ஆங்கில வழிக்கல்வியும் தனியார் கல்வியும் மாணவர்கள் எதையும் எதிர்த்து கேள்வி கேட்காமல் இருக்க பழக்கி வைத்திருக்கின்றன. மத்திய அரசு முன்மொழிந்திருக்கும் புதிய கல்விக் கொள்கை தங்கு தடையில்லாமல் வணிகமயத்தையும் வகுப்புவாதத்தையும் எடுத்துச் செல்லவே பயன்படும். டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் உலக வர்த்தக 10-வது மாநாட்டில் கல்வியை வணிகமயமாக்குவதற்கு சட்டப்படியான ஒப்புதல் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கிறது" என்றார்.