ஞாயிறு, 15 நவம்பர், 2015

ஆரோக்கியக் காவலர்கள்: மக்கள் மருத்துவத்துக்குக் குரல் கொடுத்த ‘நவீன சித்தர்'


மருத்துவர் கு. சிவராமன்
·     
பேராசிரியர் பணியில் இருந்த காலத்தில் செ.நெ. தெய்வநாயகம்
பேராசிரியர் பணியில் இருந்த காலத்தில் செ.நெ. தெய்வநாயகம்

தாளாளன், வேளாளன், கோளாளன் ஆகிய மூவரின் பேச்சைக் கேட்டு நடந்தால்தான் இந்த உலகம் செழித்தோங்கும். கடன்படாது வாழும் தாளாளன், தன் இறுதி மூச்சுவரை பிறருக்குச் சேவை செய்யும் வேளாளன், கல்வி - கேள்விகளில் கற்றுத் தேர்ந்த கோளாளன் என்கிற அறிஞன் ஆகியோர்தான், அந்த மூவர் என்கிறது நாலடியார். தன் மூச்சுள்ளவரை அந்த மூவராய் வாழ்ந்தவர் பேராசிரியரும் பிரபல மருத்துவருமான செ.நெ. தெய்வநாயகம்.

எல்லோருக்கும் புரியும் மொழி

கல்லூரி காலத்தில் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்திய 'கற்ப அவிழ்தம்' என்ற சித்த மருத்துவ இதழுக்காக ஆஸ்துமா நோய் குறித்து 1990-ம் ஆண்டில் ஒரு கட்டுரை கேட்டு நான் எழுதிய கடிதம்தான், எனக்கும் அவருக்குமான முதல் தொடர்பு.

எந்த அறிமுகமும் இல்லாத நிலையில் கேட்ட உடனேயே வந்து சேர்ந்த அந்தக் கட்டுரை, நவீன மருத்துவ அடிப்படைகளுடன் முழுக்க முழுக்க அழகுத் தமிழில் அமைந்திருந்தது இதழ் ஆசிரியர் குழுவைத் திகைக்க வைத்தது. தன்னைச் சுற்றியிருக்கும் மக்களுக்குப் புரியும் மொழியில் சொல்லப்படாத எந்த ஒரு தொழில்நுட்பமும் பயனளிக்காது என்பதையும் தாய்மொழிதான் அவருடைய உயிர்மூச்சு என்பதையும் அந்தத் தட்டச்சுக் கட்டுரை உணர்த்தியது.

சித்தம் - நவீனம் ஒருங்கிணைப்பு

நேர்கொண்ட பார்வையுடன், நோயாளியின் உரையாடலை உள்வாங்கி, அவர்தம் வலி - வேதனையைத் துல்லியமாகக் கேட்டறிந்து, தொட்டுச் சோதித்தே நோயைப் பெருமளவு கணித்துவிட முடியும் என நோய்க் கணிப்பின் உச்சத்தைக் காட்டியவர் அவர். தொழில்நுட்பச் சோதனைகளைப் பின்னுக்குத் தள்ளி உற்று நோக்கி நுண்ணறிவால் அறிவதை முன்னிறுத்தி, வணிகப் பிடிக்குள் மருத்துவம் அகப்பட்டுவிடக் கூடாது என்கிற அவருடைய அக்கறை, சக மருத்துவர்கள் மனதில் அவர் விதைத்த முக்கியமான நெறி.

தமிழ் மருத்துவமான சித்த மருத்துவமும், நவீன அலோபதி மருத்துவமும் எப்படி ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், சாமானிய மனிதனின் துயரை அது எப்படித் துடைக்கும் என முதலில் சொல்லித் தந்தவர் தெய்வநாயகம். இப்புரிதலின் அடிப்படையில் அவர் தொடங்கிய 'இந்திய நலவாழ்வு நல்லறம்' என்ற அமைப்பு, மிகப் பெரிய முன்னோடி முயற்சி. இப்படி மருத்துவத் துறைகள் காய்தல் உவத்தலின்றி ஒருங்கிணைவது மட்டுமே மருத்துவச் சவால்களை எதிர்கொள்வதற்கான வழி என்று கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின்னர், நாடெங்கும் பரவலாகவும் திட்டக் குழுவிலும் பேசத் தொடங்கியுள்ளனர்.

நோயாளியே மையம்

எய்ட்ஸ் நோயாளிகளை அருகில் அண்டவிடாது தூரமாக நிறுத்தி, பணி ஏற்படுத்திய கட்டாயத்தின்பேரில் அச்சத்துடன் அணுகிய மருத்துவ உலகின் பயத்தை உடைத்து, வாஞ்சையுடன் தோள் சேர்த்து அவர் சிகிச்சை செய்த நோயாளிகள் எத்தனை எத்தனை? காச நோய் சிகிச்சைத் திட்டத்தில், 'நோயாளியை மையப்படுத்திய மருத்துவ வழிகாட்டுதலும் சேவையும்தான் நம் நாட்டுக்குத் தேவை;

வணிகத்தைப் புறவாசல் வழியாக நுழையவிடும் அமைப்பை மையமாகக் கொண்ட நவீன முறை அவசியமில்லை' எனப் பல எதிர்ப்புகளுக்கு இடையில் நிலைநிறுத்தியவர் பேராசிரியர். அவருடைய எச்சரிக்கைகளைச் சில நேரம் காது கொடுத்துக் கேட்காத அரசு, அமைப்பை மையப்படுத்திய திட்டங்கள் பெரிதாகப் பலன் தரவில்லை எனப் பின்னாளில் தலைக்குனிவுடன் உலக அரங்கில் ஒப்புக்கொண்டதைப் படிக்கும்போது அவருடைய ஆழ்ந்த அறிவும், மெய்யுணர்வும் வியக்க வைக்கின்றன.

நேர்மையும் திறமையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாக இருக்க வேண்டும் என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டவர் பேராசிரியர். அறமற்ற செயலுக்காக யாருக்கும் வளைந்து கொடுக்காத நேர்மையும், பண்டைய அறிவியலின் நுணுக்கத்தை ஆராய்ந்து அறிந்துகொள்ளும் அவருடைய முனைப்பும் தமிழ்ச் சமூகத்துக்குக் கிடைத்த பெரும் கொடை.

புகழ்பெற்ற நிலவேம்பு

நவீன காலத்தில் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தை மீட்டெடுத்துத் தமிழர்களை நெஞ்சம் நிமிர வைத்தது 'நிலவேம்பு' எனும் சித்த மூலிகை. 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒட்டுமொத்தத் தமிழகமும் சிக்குன் குனியா வலியில் முடங்கியிருந்தபோது, அன்றைய மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சரிடம், "சித்த மருத்துவ நிலவேம்புக் குடிநீரைத் தமிழகமெங்கும் போர்க்கால அடிப்படையில் பயன்படுத்துங்கள்" என நவீன ஆய்வுத் தரவுகளுடன் சொன்னார் பேராசிரியர் செ.நெ.தெய்வநாயகம். இன்றைக்குப் பட்டி தொட்டியெல்லாம் வைரஸ் காய்ச்சலுக்கான முதல் மருந்தாக நிலவேம்பு திகழ, பேராசிரியரின் முனைப்புதான் முதல் விதை.

நவீன சித்தர்

அக்காலச் சித்தர்கள் வெறும் சித்த வைத்தியம் மட்டும் செய்யவில்லை, சமூக அக்கறையுடன், விளிம்பு நிலையில் இருந்த சாமானியர்களுக்கு மருத்துவச் சேவையுடன், சமூக விடுதலையையும் பெற்றுத்தரப் போராடிய போராளிகள். அவர்கள் வழிதொட்டு வந்தவர் செ.நெ.தெய்வநாயகம்.

நோயாளியின் நாடி பிடித்து வலி அறிபவர் மட்டுமல்ல வைத்தியர். சமூகத்தின் நாடி அறிந்து அதன் பிணியையும் போக்குபவரே மருத்துவர் எனத் தன் சொல்லால், செயலால், வாழ்ந்து காட்டியவர் பேராசிரியர்.

மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி நெஞ்சக மருத்துவத் துறையிலும் தாம்பரம் நெஞ்சக நோய் மருத்துவமனையிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்த அவர் மருத்துவப் பணியோடு தன் சமூகப் பங்களிப்பை நிறுத்திக் கொண்டதில்லை. புகைபிடித்தலுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தார், கல்பாக்கம் அணுஉலை உருவான 80-களில் 'அணுஉலை நமக்குத் தேவையில்லை' என சக மருத்துவர்களோடு இணைந்து செயல்பட்டார்.

அவர் மீதான வியப்புகளுக்கு முடிவே இல்லை. மருத்துவம் சார்ந்து சொந்த மனைவி, குடும்பத்தினர் அவரை சந்திக்க வரும்போதுகூட, எந்தவித முன்னுரிமையும் தராமல் கூட்டத்தில் ஒருவராக அவர்களைக் காக்க வைத்திருந்த காட்சி, தலைமை நீதிபதியாக இருந்தாலும் வரிசையில் நின்று வாருங்கள் எனச் சொல்லிய அவருடைய கணீர் குரல், சீழ் ஒழுக நின்றிருந்த சிறுவன் ஒருவனைத் தன் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பறந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த வேகம் போன்றவற்றை எல்லாம் பார்க்கும்போது, மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம் தமிழகத்தின் அரியதொரு அணிகலன் என்றே சொல்ல வேண்டும்.

(மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம் 73-வது பிறந்த நாள்: நவ. 15, 3-வது நினைவு நாள்: நவ. 19)


- கட்டுரையாளர், சித்த மருத்துவர் மற்றும் எழுத்தாளர் 
தொடர்புக்கு: herbsiddha@gmail.com

Type in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். 
1.  நெறியாளர் பார்வைக்குப் பின்னரே தங்கள் கருத்து பதிவேற்றப்படும்.
2.  இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. 
3.  கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நெறியாளருக்கு முழு உரிமை உண்டு.
4.  தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
5.  இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
6.  தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம். 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக