புதன், 2 மார்ச், 2016

விடாமுயற்சி விஸ்வரூப வெற்ற

தொழில் உலகில் ஊக்கத்தோடு செயல்படும் பலர் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டு, சலித்துக்கொண்டு, சோர்வாக ஏனோதானோவென வேலைபார்ப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நீங்கள் இதில் எந்தத் தர்ப்பை சேர்ந்தவர் என்பதைத் தீர்மானிப்பது எது? சுற்றமும் சூழலும் வளர்ச்சியை நிர்ணயிக்கும் உந்துசக்தியாகப் பெருமளவில் விளங்கினாலும் நம்முடைய மனோநிலைக்கும் அணுகுமுறைக்கும் முக்கிய இடம் உண்டு.

அதற்கு மிகச் சிறந்த உதாரணம், தேர்தலில் பல முறை தோல்வியைத் தழுவிய ஒருவர் விடாமுயற்சியோடு போட்டியிட்டு அமெரிக்க அதிபராக வெற்றிவாகை சூடினார். தான் வளர்த்தெடுத்த நிறுவனத்திலிருந்தே துரத்தப்பட்ட ஒருவர் பின்னாளில் பிரபலக் கணினி ஜாம்பவானாக மாறினார். அவர்கள் யார் யார் என்று தெரிகிறதா? இப்படித் தன்னைத்தானே மெருகேற்றிக்கொள்ளவும் தொழில்ரீதியாகச் சிறந்து விளங்கவும் தேவையான 10 அணுகுமுறைகளை ஸ்பெயினில் இருக்கும் நவரா பல்கலைக்கழக விரிவுரையாளரும் ஆலோசகருமான பாப்லோ மேல்லா பட்டியலிடுகிறார்.

நிதர்சனங்களைப் புரிந்து கொள்தல்

உங்களையும் மற்றவர்களையும் குறித்த நிதர்சனமான பார்வையும் புரிதலும் வளர்த்துக் கொள்ளும்போதுதான் சுய முன்னேற்றம் சாத்தியமாகும். அதிலும் நம்முடன் இணைந்து பணியாற்றுபவர்களிடம் எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என எதிர்பார்ப்பதை விடுத்துச் சூழ்நிலையை யதார்த்தமாகப் புரிந்துகொண்டு கையாள்வதே புத்திசாலித்தனம்.

பலமும் பலவீனமும்

தப்பித்தவறிகூடத் தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என நமக்கு நாமே கடிவாளம் போட்டுக்கொள்வதும் சிக்கல்தான். நம்முடைய குறைகளை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். பலவீனங்களை ஒத்துக்கொண்டால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியம். இல்லையேல் தோல்வியால் மனம் உடைந்துபோகும். பலவீனங்களை ஏற்றுக்கொள்ளத் தயாராகாதவர்களுக்குத் தாழ்வுமனப்பான்மை அதிகரிக்கும். ஆக, வெற்றியைக் கொண்டாடுவோம்; தோல்வியை நிதானமாக ஏற்றுக்கொள்வோம்.

குற்றம் பார்க்கலாமா?

நீங்கள் சங்கிலி துரித உணவகங்களைப் பல்வேறு இடங்களில் நடத்துபவர் எனக் கற்பனை செய்துகொள்ளுங்கள். திடீரென ஒரு உணவகத்துக்கு வந்திறங்கிய இறைச்சி கெட்டுப்போனதாகத் தெரியவருகிறது. வாடிக்கையாளர் நலன் கருதி அந்த உணவை அப்புறப்படுத்தியபோதும் இந்தச் செய்தி பரவிவிடுகிறது. இதில் உங்களுடைய தவறென்று எதுவும் இல்லை. இந்தச் சூழலில் ஹோட்டல் நிறுவனராகப் பொறுப்பேற்றிருக்கும் நீங்கள் நடந்ததை எண்ணிச் சோர்ந்துபோகலாம். யாரால் இது நடந்ததோ அவரைக் கடிந்துகொண்டு தண்டிக்கலாம். ஆனால் இதனால் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுவதுதான் நல்லது.

மகிழ்ச்சியும் நன்றியும்

நெடுங்காலமாகக் காத்திருந்த வாய்ப்பு கிடைக்கும்போது உடனடியாக மகிழ்ச்சி அடைவோம். சில காலம் முழுமூச்சாக ஈடுபாட்டோடு செயல்படுவோம். ஆனால் காலப்போக்கில் உத்வேகம் குறைந்து அதன் அருமை மறந்துபோகும். இந்த வேலை கிடைத்திடாதா என ஏங்கிய காலம் மாறி இது சரி இல்லை, அதில் குறை எனச் சலிப்பூட்டும். இதனால் நம்முடைய மனச்சோர்வுக்கு நாமே காரணமாகிறோம் என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் அவசியம்.

நேர்மறைச் சிந்தனை

எதிர்மறையான சிந்தனை கொண்டவர்களைக் காட்டிலும் நேர்மறையான விற்பனையாளர்களால் 90 சதவீதம் கூடுதலாகத் தங்கள் பொருட்களை விற்க முடிந்தது என்கிறது சமீபத்திய ஆய்வு. அது எப்படிச் சாத்தியம் எனக் கேட்கலாம். உதாரணமாக, நண்பர்கள் சந்திப்புக்குச் செல்லும்போது எப்படியும் அந்தக் கூட்டம் அறுவையாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்தோடு சென்றீர்களானால் நிச்சயமாக உங்களால் கொண்டாட்ட மனநிலைக்கு எளிதில் வர முடியாது. அதே எளிமையான உளவியல்தான் இதன் அடிப்படையும்.

எட்டக்கூடிய இலக்கு

நம்மால் எட்ட முடிந்த இலக்கை நிர்ணயிக்கும்போது அதற்கான உத்வேகம் தானாகவே பிறக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் அடைய வேண்டிய உயரத்தின் யதார்த்தமான சாத்தியக்கூறுகளைக் கணக்கிட்டுத் திட்டமிடுங்கள்; வெல்லுங்கள்!

அர்த்தமுள்ள செயல்பாடு

ஒருவர் அலுவலக வேலைக்குச் செல்வதும் மற்றொருவர் சமூகச் செயற்பாட்டாளராக இயங்குவதும் ஒன்றாகிவிட முடியாது. சிலருக்கு மட்டுமே வேலை என்பது வாழ்க்கையின் அர்த்தமாகவே மாறிப்போகும். மற்றவர்கள் அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

முன்வர வேண்டும்

கொடுத்த வேலையை மட்டுமே செய்வதற்கும் முக்கியத் தீர்மானங்களைத் தானே முன்வந்து எடுப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்போது தானாகவே உத்வேகம் அதிகரிக்கும்.

நம்பிக்கையும் கடமையும்

நமக்குப் பிடித்ததை மட்டுமே செய்துவிட்டாலே உற்சாகம் பீறிட்டு எழும் எனச் சொல்லிவிட முடியாது. பிடித்த விஷயத்தை முழு ஈடுபாட்டோடு செய்யும்போது மட்டுமே அது சாத்தியம். ஈடுபாடு தளர்ந்துபோகும் வேளையில் உங்களுடைய கடமைகளை அசைபோடுங்கள் அது உங்களை வழிநடத்தும்.

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

தடைகளை எதிர்கொள்ளும்போது தளர்ந்துபோவது சகஜம்தான். ஆனால் விழும்போது நம்மை நாமே எழுப்பிக்கொள்ளும் மனோதைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் போட்ட புதிருக்கு விடை இதோ. விடாமுயற்சி மட்டும் இல்லாதிருந்தால் பல முறை தோற்ற ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக நிமிர்ந்து எழுந்திருக்க முடியாது. தான் வளர்த்த நிறுவனம் கைவிட்டதே எனத் துவண்டிருந்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் உலகப் புகழ் பெற்ற கணினி ஜாம்பவானாக முன்னேறியிருக்க முடியாது.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக