பிரின்ஸ் கஜேந்திரபாபு பொதுச்செயலாளர், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை

ஆரம்பகல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை இலவசமாக வழங்க வேண்டும்.

3 கிலோமீட்டருக்குள் ஒரு தொடக்கப்பள்ளி. 5 கிலோமீட்டருக்குள் ஒரு உயர்நிலைப்பள்ளி என்று 1950-ல் காமராஜர் ஏற்படுத்திய நிலையை மேம்படுத்தி ஒரு பகுதிக்கு ஒரு தரமான அரசுப் பள்ளி என்ற நிலையை அடைய வேண்டும்.

அனைத்து அரசுப்பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்க வேண்டும்.அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.

பள்ளி செல்லும் வயதுள்ள மாணவர்கள் 100 சதவீதம் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும்.

தாய்மொழி மூலம் கல்வி வழங்க வேண்டும்.

உடற்பயிற்சி ஆசிரியர் உள்பட ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக ஆசிரியர்கள் நியமிக்கவேண்டும்.

பள்ளிமாணவர்களுக்காக நடத்தும் விடுதிகளில் சத்தான உணவும் தரமான சுகாதாரமும் கிடைப்பதை பள்ளிக்கல்வித்துறை உறுதிப்படுத்தவேண்டும்.

ஆசிரியர்களுக்கு தரப்படும் அதிகமான நிர்வாகப்பணிகளால் கற்றுக்கொடுக்கும் தரம் குறைவதால் அந்தமுறையை கைவிடவேண்டும்.

தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

பேராசிரியர் விஜயகுமார் 'புதிய ஆசிரியன்' பத்திரிகையின் துணை ஆசிரியர்.

பல்கலைக்கழகங்களில் ஊழல் பரவுவதைத் தடுக்க துணைவேந்தர் நியமனத்தை நியாயமான நடத்த வேண்டும்.

தனியார் கல்லூரிகள் செய்கிற முறைகேடுகளைத் தட்டிக்கேட்கவும், அரசின் தவறான கல்விக் கொள்கையைச் சுட்டிக்காட்டவும் மாணவர் பேரவை அவசியம். கல்லூரிகளில் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும்.

பல்கலைக்கழகங்களில் சமூகத்துக்குப் பயன்படாத ஆய்வுகளே அதிக அளவில் நடைபெறுகின்றன. இதை முறைப்படுத்தவும், ஆசிரியர் - ஆய்வு மாணவர் உறவு மேம்படவும் நடவடிக்கை தேவை.

அரசின் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வானளாவிய அதிகாரத்துடன் செயல்படும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளை முறைப்படுத்த வேண்டும். அவற்றையும் தனியார் கல்லூரிகள் ஒழுங்காற்றுச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

உயர் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி தரும் முன்பே, அவற்றின் அடிப்படை வசதிகள், ஆசிரியர் பணியிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். கண்துடைப்பாக ஆய்வு நடத்துவோருக்குக் கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும்.

வன்முறை, தற்கொலை, மது என்று தவறான வழியில் செல்லும் மாணவர்களை நல்வழிப்படுத்த பள்ளி, கல்லூரிகளில் மனநல ஆலோசகர்கள் நியமிக்கப்பட வேண்டும்.