எந்த ஒரு விஷயத்தையும் மனத்திரையில் பிம்பங்களாக ஓட்டிப்பார்க்கும் திறனை யாரும் குறைத்து எடைபோட்டுவிட வேண்டாம். காட்சிப்படுத்திக்கொள்ளும் திறனால், கற்றல் திறனும் மற்ற திறமைகளும் மேம்படுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

விளையாட்டு வீரர்களும் இசைக் கலைஞர்களும் அசைவுகளை மனதில் ஓட்டிப் பார்ப்பார்கள். உடல்ரீதியான பயிற்சியைப் போலவே இதுவும் மிகவும் பலனளிக்கக்கூடியது. பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதைப்போல செய்துபார்ப்பது செயலிழந்த அவர்களின் உடல் உறுப்புகளுக்கு மீண்டும் செயலூட்டம் தரும் என்றும் சொல்லப்படுகிறது.

பார்வை அற்ற மனம்

பெரும்பாலானோருக்கு நினைவு, பகல் கனவு, கற்பனை போன்றவற்றுக்குக் காட்சிப் படிமங்கள் (Visual imagery) மிகவும் முக்கியம். ஆனால், சிலருக்கு மனக்கண் என்ற திறனே இருக்காது. இதனால் அவர்களின் கற்றல் திறனும் கல்வியும் பெரிதும் பாதிக்கப்படும்.

மனதுக்குள் பார்வையற்று இருப்பது எப்படி இருக்கும் என்று ஃபயர்ஃபாக்ஸின் நிறுவனர்களில் ஒருவரான பிளேக் ரோஸ் சமீபத்தில் ஃபேஸ்புக்கில் விவரித்திருந்தார். மற்றவர்களெல்லாம் எப்படி மனக்கண்ணில் காட்சிகளை ஓட்டிப்பார்க்கிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது என்றும் அவர் ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார்.

ஒளிப்படம் போலவா? மங்கலாகவா?

சர்ச்சைக்குள்ளான உளவியலாளர் ஃப்ரான்ஸிஸ் கால்ட்டன் இது குறித்து 1880-களில் ஒரு ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டார். சிலரால் மனக்கண்ணில் காட்சிப்படுத்த முடியாது என்ற உண்மையை அப்போதுதான் உலகம் முதன்முதலில் தெரிந்துகொண்டது. வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு விதத்தில் அன்றாட நிகழ்வுகளை மனக்காட்சிகளாக நினைவுகூர்வது குறித்து விவரிக்க கால்ட்டன் முயன்றார்.

அவருடைய அறிவியல் சகாக்களிடம் அவர்களின் வீட்டு உணவு மேசையை மனத்திரையில் கொண்டுவந்து அதைப் பற்றித் துல்லியமாக விவரிக்கச் சொன்னார். அப்போது சிலர் ஒளிப்படத் துல்லியத்துக்கு இணையாக விவரித்திருக்கிறார்கள். சிலரோ மங்கலான நினைவாக விவரித்திருக்கிறார்கள்.

மனத்திரையில் காட்சிகளை ஓட்டிப் பார்க்க முடியாத திறனை 'கான்ஜெனிட்டல் அஃபேண்டசியா' (congenital aphantasia) என்று இக்கால நரம்பியல் நிபுணர்கள் அழைக்கிறார்கள். 50 பேரில் ஒருவருக்கு இந்தப் பிரச்சினை இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தப் பிரச்சினை இருப்பவர்களின் கனவுகளில் காட்சிகள் வருகின்றன. ஆகவே, காட்சிகளாகக் கற்பனைசெய்து பார்க்கும் திறன் மட்டுமே அவர்களுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவு.

எழுத்தறிவுக்கு மனக்காட்சி முக்கியம்

வகுப்பறையைப் பொறுத்தவரை படித்துப் புரிந்துகொள்வதிலும் சொற்களின் அர்த்தங்களைக் கற்றுக்கொள்வதிலும் மனக்காட்சிகள் மிகவும் முக்கியமானவை. எழுத்தறிவுக்கு இதுவே அடிப்படை என்றும் ஒரு கோட்பாடு சொல்கிறது.

வெஸ்டர்ன் ஆண்டாரியோ பல்கலைக்கழகத்தின் அல்லான் பைவியோ முன்வைத்த இந்தக் கோட்பாடு, சொற்கள் வழியாகச் சிந்தித்தல், சொற்கள் இல்லாமல் சிந்தித்தல் ஆகிய இரண்டு முறைகளுக்கும் இடையேயுள்ள வேறுபாடுகளைச் சொல்கிறது.

சொற்களற்ற சிந்தனை முறைக்கு மனக்காட்சிகளே முதன்மையானவை என்று இந்தக் கோட்பாடு கூறுகிறது. ஆகவே, சொற்கள், மனச்சித்திரங்கள் என்று இரு வகைகளில் தகவல்கள் மூளையில் சேமித்துவைக்கப்படுகின்றன.

இவை இரண்டும் ஒன்றையொன்று சாராமலேயே செயல்படக் கூடியவை என்றாலும் கற்றல் திறனையும் நினைவுகூரும் திறனையும் மேம்படுத்தும் வகையில் ஒன்றுக்கொன்று தொடர்புகொள்ளவும் கூடியவை என்று அந்தக் கோட்பாடு கூறுகிறது.

பள்ளிக் குழந்தைகள் எழுத்தறிவுத் திறன் பெறுவதற்கு மனக்காட்சிகள் முக்கியமானவை என்று 1970-களிலிருந்து செய்யப்பட்டிருக்கும் ஆய்வுகள் பல நிரூபிக்கின்றன.

அவர்கள் தவறில்லை

8 வயது குழந்தைகளைக் கொண்டு ஒரு ஆய்வு செய்து பார்க்கப்பட்டது. சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் குழந்தைகளின் மனதில் பதியவைப்பதைவிட மனக்காட்சிகளின் துணைகொண்டு சொற்களைப் பதியவைப்பது இரண்டரை மடங்கு பலன் அளிப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

பூடகமான கருத்தாக்கங்களைப் புரிந்துகொள்வதிலும் மனக்காட்சிப்படுத்தல் உதவுகிறது என்று சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், தொடக்கப் பள்ளி மாணவர்கள் மனதில் புதிய அறிவியல் சொற்களைப் பதியவைப்பதிலும் மனக்காட்சிப்படுத்தல் முறை பெரிதும் உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கணிதம், கணினி அறிவியல் போன்ற துறைகளிலும் மனக்காட்சிப்படுத்தலின் பங்கு மிக முக்கியமானது.

தேர்வுகளின்போது படித்த பாடங்களைத் திரும்பவும் நினைவுகூர்வதை அஃபேண்டசியா அதாவது மனக்காட்சிப்படுத்தும் திறனின்மை பாதிக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. மனவரைபடங்கள் (mindmaps) மூலம் இந்தப் பிரச்சினையை ஓரளவுக்குச் சரிசெய்ய முடியும்.

அஃபேண்டசியா பிரச்சினை நூறு ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்டாலும் அது குறித்த விரிவான ஆய்வுகள் ஏதும் நடைபெறவில்லை. "விவரணைரீதியிலான வாக்கியங்களைப் புரிந்துகொள்வதில் அஃபேண்டசியா பிரச்சினை கொண்ட குழந்தைகளுக்குச் சிக்கல் நிலவுகிறது.

இதனால் படித்துப் புரிந்துகொள்வதில் அவர்களுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது" என்கிறார் நரம்பியலாளர் ஆடம் ஜிமான். "எனினும் கற்றல் குறைபாடுகளுக்கும் அஃபேண்டசியாவுக்கும் தொடர்பு இருப்பதற்கு நேரடியான ஆதாரங்கள் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை" என்கிறார் அவர்.

ஆக, அஃபேண்டசியாவால் குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுகிறது என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்படுமென்றால் அதுபோன்ற குழந்தைகள் கல்வி கற்பதற்கான மாற்று வழிமுறைகளை நாம் தேடியாக வேண்டும்.

தி கார்டியன், சுருக்கமாகத் தமிழில்: ஆசை