யூ.பி.எஸ்.சி.-யின் வெற்றிக்கு, முதல் ரேங்க் பெறுவதைவிடப் புத்திசாலியாக இருப்பது முக்கியம் எனக் கூறுபவர் ச. ராம்குமார். இவர், 2010-ம் வருட பேட்ச்சின் ஐ.எப்.எஸ். எனும் இந்திய வெளிநாட்டுப் பணி பெற்று மத்திய வெளியுறவுத் துறையின் சார்புச் செயலாளராக டெல்லியின் சவுத் பிளாக்கில் பணியாற்றுகிறார்.

உந்தித்தள்ளிய அம்மாவின் வார்த்தைகள்

பண்ருட்டியை சேர்ந்த ராம்குமாரின் அப்பா கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். மூத்த மகன் என்பதால் ராம்குமாரின் தொடக்கக் கல்வி முதல் பெற்றோர் காட்டிய கவனம் அவருக்குத் தொடர்ந்து முதல் ரேங்க் பெற்றுத் தந்தது. பிளஸ் டூ வரை ஆங்கில மீடியம் பயின்றவர், 2005-ல் அண்ணா பல்கலைக்கழகத்தின் வேதிப் பொறியியல் பிரிவில் பி.டெக். முடித்தார். வளாகத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று மகாராஷ்டிரத்தில் உள்ள கார்டா கெமிக்கல்ஸில் ஒன்றரை வருடம் பணியாற்றினார். அப்போது, 'நீ ஐஏஎஸ் ஆகணும்' எனச் சிறுவயது முதல் தன் அம்மா சொல்லிவந்தது ராம்குமாருக்கு மீண்டும் நினைவு அலையாய் ஓடியது. இதனால், யூ.பி.எஸ்.சி. தேர்வை எழுதுவது என முடிவு செய்தவர் 3 நாள் விடுமுறையில் டெல்லி சென்றார்.

இங்குள்ள முகர்ஜி நகரின் பயிற்சி நிலையத்தில் ஆசிரியராக இருந்த தன் சீனியரிடம் யூ.பி.எஸ்.சி. பற்றி நன்கு தெரிந்துகொண்டார். பிறகு தன் பணியை 2007-ல் ராஜினாமா செய்தவர், டெல்லியின் இன்ட்ராக்ஷன் மற்றும் ஏ.எல்.எஸ். பயிற்சி நிலையங்களில் புவியியல் மற்றும் ஜெனரல் ஸ்டடீஸுக்காக ஐந்து மாதம் மட்டும் பயிற்சி எடுத்தார். இந்தத் தேர்வை இருமுறை ஆங்கிலத்தில் எதிர்கொண்டவருக்கு நேர்முகத் தேர்வு வரை சென்றும் வெற்றி கிடைக்கவில்லை. மூன்றாவது முயற்சியில் நேர்முகத் தேர்வையும் வென்றவருக்கு 130-வது ரேங்குடன் ஐ.எப்.எஸ் கிடைத்தது.

கலந்துரையாடல் கைகொடுத்தது

"ஐ.ஏ.எஸ். படிக்க என் பெற்றோர் விரும்பினாலும் எனக்கு, ஐ.எப்.எஸ்-ல் தான் அதிக நாட்டம் இருந்தது. இந்தியாவின் பிரதிநிதியாக இந்தியாவின் தூதரகங்களில் பணியாற்றி இந்தியப் பொருளாதாரம், வணிக வளர்ச்சிக்காகப் பாடுபட விரும்பினேன்.

முதல் முயற்சியில் மெயின்ஸ் தேர்வுக்குப் பின் கிடைத்த ஆறு மாதங்களை வீணாக்காமல் மீண்டும் குஜராத்திலுள்ள ஒரு ஜெர்மன் நிறுவனப் பணிக்குச் சென்றுவிட்டேன். பிறகு நேர்முகத் தேர்வுக்காக அதையும் ராஜினாமா செய்தேன். இரண்டாவது முயற்சியிலும் தோல்வி அடைய, எனது வைராக்கியம் மூன்றாவது முயற்சியில் எனக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது'' என்கிறார் ராம்குமார்.

புவியியலுடன், தமிழையும் விருப்பப் பாடமாக எடுத்திருந்தார் ராம்குமார். தேவிராஜன் என்பவரிடம் சென்னையில் தமிழுக்குப் பயிற்சி பெற்றார். இதை முடித்த பின்பும் படிப்புச் சூழல் வேண்டி சென்னையிலேயே அறை எடுத்துத் தங்கினார். இங்கு, அவரைப் போலவே தேர்வு எழுதியவர்களுடன் அவ்வப்போது நடத்திய கலந்துரையாடல்களின் மூலம் படித்ததில் விடுபட்டவற்றை அறிய முடிந்தது. வீட்டுச் சூழல் யூ.பி.எஸ்.சி. படிக்கச் சாதகமானது அல்ல என்பது ராம்குமாரின் கருத்து.

குரூப் ஒன் தேர்விலும் வெற்றி

யூ.பி.எஸ்.சி.யின் இரண்டாம் முயற்சிக்கு இடையே தமிழ்நாடு தேர்வு ஆணையத்தில் குரூப் ஒன் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றார் ராம்குமார். இதனால், வணிகவரித் துறையில் துணை ஆணையராகப் பணிபுரிந்த அனுபவமும் யூ.பி.எஸ்.சி.யில் வெல்ல ராம்குமாருக்குப் பேருதவி புரிந்துள்ளது. ஐ.எப்.எஸ்.-ஸுக்குப் பின் எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் இரு வருடங்கள் பணியாற்றினார். பிறகு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தலைமையகத்தில் கடந்த இரு வருடங்களாகச் சார்புச் செயலாளராகப் பணியாற்றுகிறார். வரும் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இந்தியத் தூதராகச் சேவை செய்ய உள்ளார்.

யூ.பி.எஸ்.சி-க்கான வழிகாட்டல்

தற்போது யூ.பி.எஸ்.சி. தேர்வில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுவிட்டதால் அதை வெல்வது எளிது. இதற்கு உகந்த பயிற்சி நிலையத்தைத் தேர்ந் தெடுப்பதும், நல்ல வழிகாட்டி கிடைப்பதும் முக்கியம். கடந்த ஐந்து வருடக் கேள்விகளில் அதிகம் எவை கேட்கப்பட்டுள்ளன என்பதை அலசிஆராயுங்கள்். படித்ததை எப்படி எழுத்தில் விவரிப்பது என்று தெரிய வேண்டும். சந்தேகங்களை, கூச்சப்படாமல் மற்றவர்களிடம் கேட்டுத் தெளிவுபெற வேண்டும்.

வரைபடங்கள் மூலம் பதிலளிக்கக் கற்றுக்கொள்வது கூடுதல் மதிப்பெண்கள் பெற உதவும். தேர்வு எழுதுபவர்களில் பலரும் ஒரே பயிற்சி நிலையத்திலிருந்து வந்திருந்தாலும், ஒரே விதமான பதில்களைப் படித்திருந்தாலும் நீங்கள் எழுதும் பதில்களில் உங்கள் தனித்திறமையைக் காட்ட வேண்டும். நேர்முகத் தேர்வின் கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் சரியான பதில்களை விட அந்தச் சூழலை நீங்கள் எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்பது முக்கியம்.

இளம் வயதில் அரசு அதிகாரியாக வருபவர்கள் நிர்வாகத்தைச் சிறப்பாக நடத்த வேண்டும். இதில் புரட்சிகரமான கருத்துகள் கொண்டவர்களை அரசு விரும்பாது. எல்லை தாண்டிய ஆர்வம் இருந்தாலும் அதை நாம் முறையாகப் பிரதிபலித்தால்தான் ஏற்றுக் கொள்ளப்படுவோம். இதுபோன்ற குணநலன்களை அறிந்துகொள்வதற்காக நடத்தப்படுவதுதான் நேர்முகத் தேர்வே தவிர, அறிவைச் சோதிப்பதற்காக அல்ல.

எனது வெற்றி மந்திரம்

பயிற்சி மையத்தில் பாடங்களுடன், எதைப் படிக்கக் கூடாது என்பதும், பதில்களை எழுதும் முறைகளும் அறிந்தது பயனளித்தது. தொடக்கக் கல்வி முதல் வகுப்பின் முதல் மாணவனாக இருந்தது பலனில்லை. மாறாக, பதில்களைத் தெளிவாகவும் முறையாகவும் எழுதத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இத்துடன் நேர்முகத் தேர்வின் கேள்விகளுக்கு சமயோசிதமாகப் பதில் அளிப்பவரே வெற்றியாளர் என்பது நான் கற்ற பாடம். இதனால்தான் யூ.பி.எஸ்.சி.யில் சுற்றி வளைத்துக் கேட்கப்படும் கேள்விகளைப் புரிந்துகொண்டு பதில் அளிக்கும் திறமை எனக்கு வந்தது.

நீங்கள் எழுதும் பதில்களில், துணைத் தலைப்புகளுடன் பத்திகளைச் சரியாகப் பிரிக்க வேண்டும். சில கேள்விகளுக்கு விரிவான பதில்கள் அளிப்பதைத் தவிர்த்து வரைபடம் வரைந்து ஸ்கெட்ச்சில் ஹைலைட் செய்து எளிதாகக் குறிப்பிட்டுவிடலாம். சிறந்த மாணவர்களும்கூட பல நேரங்களில் பதில்களுக்கு நேரம் போதாமல் வெளியேறிவிடுகிறார்கள். மாணவர்களுக்கு வெளி உலக அனுபவம் மிகவும் முக்கியம்். இது ஒருவரின் கல்வியுடன் சேர்த்துப் பொது அறிவை வளர்க்கும்.

பி.டெக்.கின் இடையில், சிமெண்ட் தொழிற்சாலை, சாயத் தொழிற்சாலை, தோல் பதனிடுதல் தொழிற்சாலை, பூச்சிக்கொல்லி மருந்துகள் தொழிற்சாலை ஆகியவற்றில் கிடைத்த பயிற்சிகள் எனது தொழில்திறனை வளர்த்தன. இத்துடன் ஆங்கிலம் பேசும் திறனையும் வளர்த்துக் கொண்டது யூ.பி.எஸ்.சி.யில் பலன் அளித்துள்ளது.